வந்தே மாதரம் மசோதா – அரசியல் சாசனத்துக்கு எதிரானது! ஏன் தெரியுமா?
இந்திய நாடாளுமன்றத்தில் இன்று (ஜூலை 20, 2026) மாநிலங்களவையிலும், அதன் பின்னர் மக்களவையிலும் வந்தே மாதரம் முழுப் பாடலை தேசியப் பாடலாக சட்டப்படி அறிவிக்கும் மசோதா தாக்கலாக உள்ளது.
இந்த மசோதா இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிரானது.
இந்த மசோதாவை அறிமுக நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுத்திட வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது!
19ம் நூற்றாண்டில் வங்காளம் (Bengal) வகுப்புவாத சிக்கலை எதிர்கொண்டிருந்தது அனைவரும் அறிந்ததே. அதன் பின்னணியில், ஒரு நம்பிக்கைக்கு எதிராக புனையப்பட்ட புதினம்தான் ‘ஆனந்தமடம்’.
இத்தகைய சூழலை, தனக்கு சாதகமாக அந்நிய அரசு பயன்படுத்திக் கொண்டது.
இந்தியாவை மதரீதியாக பிளவுபடுத்த, வங்கத்தை மத அடிப்படையில் இரண்டாக பிரித்தது பிரிட்டிஷ் அரசு.
இந்த பிரிவினையை வங்கத்து மக்கள் கடுமையாக எதிர்த்தனர்.
வங்கத்து மக்களின் ஒற்றுமையும், ஒருமைப்பாடும், வீரியத்துடன் அவர்கள் முன்னெடுத்த ‘சுதேசி இயக்க’ போராட்டமும், வங்கப் பிரிவினையை திரும்பப் பெற வைத்தது.
‘வந்தே மாதரம்’ முழக்கத்திற்கும், ஆனந்தமடம் புதினத்தில் வரும் வந்தே மாதரம் முழுப் பாடலுக்கும் உள்ள வேறுபாட்டை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
‘தாய்நாட்டை வணங்குகிறேன்’ எனும் பொருள் கொண்ட ‘வந்தேமாதரம்’ முழக்கம்தான் இந்தியாவின் பல பகுதிகளிலும் விடுதலைப் போராட்டக் களத்தில் மக்கள் பயன்படுத்தினார்களே தவிர, ஆனந்தமடம் புதினத்தில் இடம் பெற்றுள்ள வந்தேமாதரம் முழுப் பாடலை அல்ல.
ஆனந்தமடம் புதினத்தில் வரும் வந்தேமாதரம் பாடலானது இந்த நாட்டை ஒரு இறை நம்பிக்கைக்கான உருவமாக சித்தரிக்கிறது.
வந்தேமாதரம் பாடலில் இந்தியாவின் பெயர் இடம் பெறவில்லை.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 1 ‘இந்தியா, அதாவது பாரத்’ என்று இந்தியாவின் பெயரைக் குறிப்பிடுகிறது.
இந்தியா, பாரத் ஆகிய இரண்டில் எந்த பெயரும் தற்போது முன்மொழியப்படும் மசோதாவில் குறிப்பிடப்படும் வந்தேமாதரம் பாடலில் இடம் பெற வில்லை.
ஒரு தனி நபருக்கு தனது தாய்நாட்டை தனது நம்பிக்கைப்படி உருவகப்படுத்திக் கொள்ள உரிமை உண்டு. ஆனால், ஒருவரின் நம்பிக்கையை நாட்டில் உள்ள அனைவர் மீதும் திணிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை.
ஒவ்வொரு இந்தியருக்கும் அவருக்கான கண்ணியத்தை உறுதிப்படுத்துகிறது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 25: இந்தியர்கள், அவரவர் மனசாட்சிப்படி வாழ்வதற்கு உரிமைத் தருகிறது. ஒருவர் ஏதோ ஒரு கடவுளை வணங்கலாம் அல்லது கடவுள் நம்பிக்கை இல்லாதவராகவும் வாழலாம்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 51A(h) அறிவியல் பூர்வமாக சிந்திப்பதையும், செயல்படுவதையும் இந்தியர்களின் கடமையாக்கியுள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைக்கு எதிராக வந்தேமாதரம் மசோதா அமைந்துள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 13, எந்த ஒரு சட்டமும், அடிப்படை உரிமைகளுக்கு எதிராக இருந்தால் அந்த சட்டம் செல்லாது என்று தெளிவுபட கூறியுள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பகுதி 3 (Part III) வழங்கிடும் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக வந்தேமாதரம் மசோதா அமைந்துள்ளதால் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுக நிலையிலேயே எதிர்க்கபட வேண்டும்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தையும், மக்களின் அடிப்படை உரிமைகளையும் காக்கின்றப் பொறுப்பு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளது.
அத்தகைய பொறுப்புணர்வுடன், தேசியப் பாடலாக வந்தேமாதரம் பாடலைத் திணிக்க வழி வகுக்கும் மசோதாவை அதன் அறிமுக நிலையிலேயே எதிர்த்து, மசோதா தாக்கலாவதை தடுத்து, இந்திய அரசமைப்புச் சட்டத்தையும், மக்களின் அடிப்படை உரிமைகளையும் காத்திட வேண்டும் என்று இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களை பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.
பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு
பொதுச் செயலாளர்,
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை







Comments are closed, but trackbacks and pingbacks are open.