கிராமத்தில் நான் படித்த ஆரம்பப் பள்ளியைத் தேடிக்கொண்டு இந்த 73 வயதில் சென்றேன். சுவருக்குப் பதிலாக மூங்கில் பிளாச்சுகள் அடித்த வகுப்பறைகள் இல்லை. பள்ளிக்கு முன்னால் வைத்த மரங்களும் இல்லை. ஏதோ ஒரு திட்டத்தில் பள்ளி புதுப்பிக்கப்பட்டுள்ளதாகப் பெயர்ப்பலகை சொன்னது. ஒற்றைத் தண்டவாள மணியையும் காணோம்.
பள்ளிக்கு வெளியே தின்பண்டங்கள் விற்கும் பாட்டியையும் தாத்தாவையும் காணவில்லை. தின்பண்டங்களோடு சேர்த்துக் காலம் இவர்களையும் விழுங்கிவிட்டது. ஒண்ணுக்குப் பெல் அடிக்கும்போது பாவம் குழந்தைகள் தேன் மிட்டாயும், வட்டமாய்ச் சுருண்டுகொண்டு சிவப்பிலும் இளம்பச்சையிலும் இனிக்கும் கொடுக்காப்புளியும் கமர்கட்டும் இல்லாமல் என்ன தின்பார்கள்?
விதவிதமான வண்ணங்களில் மிட்டாய்களும், ரொட்டிகளும் விற்கும் பெட்டிக்கடைகளும் மறைந்துவிட்டன. தள்ளுவண்டியில் பெரிய கண்ணாடி ஜாடிகளில் நரைத்த கேசக்கற்றைகள் போல் காட்சி தரும் வாசனையும் ருசியும் மிகுந்த தின்பண்ட வண்டிதான் எங்கே? வெள்ளை நிறப் பைஜாமாவுடன் மணி அடித்தபடி வரும் அந்த வியாபாரி, ஆச்சரியமான தின்பண்டங்கள் விற்கும் தலைச்சுமைக்காரர் எல்லோரையும் காலம் அடித்துக்கொண்டு போய்விட்டது.
காக்காக் கடி கடிச்சுக் கொடுத்த
கமருகட்டு முட்டாயி
ஜோக்கா வாங்கித் தின்னபுட்டு
விட்டானய்யா கொட்டாயி – என்ற பழைய திரைப்பாடல் பால்யத்தின் நினைவு ராகம் அல்லவா?
எச்சில்படக் கூடாது என்பதற்காகக் கமர்கட்டைச் சட்டையில் வைத்துக் கடித்துக்கொடுத்த நண்பனும், பாவாடையில் வைத்துக் கடித்துக் கொடுத்த பள்ளித் தோழியும் நான் நின்று இளைப்பாறும் நினைவின் நிழல்கள்.
பல வண்ணங்களில் இனிக்கும்’துக்கினியோண்டு’ மிட்டாய்களை எலிப்புழுக்கை மிட்டாய் என்போம். கலர்கலராக புழுக்கை போடும் எலிகள் உண்டா என்ன? குழந்தைகளின் கற்பனைக்கு எல்லைதான் ஏது? சூடவில்லை மிட்டாய், ரோஸ் நிறத்தில் மயக்கும் பஞ்சு மிட்டாய், பொம்மை ரொட்டி, கருப்பாய் மினுங்கும் சின்ன ஈச்சம்பழம், பிசபிசுவென்று மேல்நாக்கில் ஒட்டிக்கொள்ளும் ’மூக்குச்சளிப்’ பழம்’ – எல்லாவற்றையும்தான் காலம் விழுங்கிவிட்டது.

குச்சிஐஸ் வாங்கித் தருமாறு நச்சரிக்காத குழந்தைகள் உண்டா? தேன் மிட்டாய்க்கு இணையான தின்பண்டம் உண்டா? அசல் ஆரஞ்சுச்சுளை போலவே காட்சி தரும் ஆரஞ்சு மிட்டாய், சுதந்திரத்தின விழாவில் மட்டுமே தின்னக் கிடைக்கும் மூவர்ணப் பெப்பர் மின்ட்டுகளைப் பார்த்தாலே தேசபக்தி வந்துவிடும்.
ஜவ்வுமிட்டாய்க்காரர் பல வண்ணங்களில் நீளமான கம்பில் சுற்றிய மாவுடன் தெருவெங்கும் வலம் வருவார். குழந்தைகள் பார்த்தாலே பயப்படும் யானை, புலி, காண்டாமிருகம், கரடி – இவற்றையொல்லாம் தித்திப்பாக்கி விடுவார். ஜவ்வு மிட்டாய் மிச்சத்தைச் சட்டென்று கையில் வாட்சாக கட்டிவிடுவார். வீட்டுக்குப் போவதற்குள் ’காலத்தை’ விழுங்கி விடுவோம்.
பெரியப்பா எப்போது டவுனிலிருந்து வந்தாலும் பெரிய பிஸ்கட் டின்னுடன் வருவார். வட்டமான பிரிட்டானியா பிஸ்கட்டுகள். எங்களுக்கு மட்டுமல்ல தெருக்குழந்தைகளுக்கும் சேர்த்துத்தான். தாத்தாவின் விரல்கள் போலவே இருக்கும் ஓமரொட்டியின் வாசனையும், சுவையும்போல வருமா?
நவீனமான இனிப்பகங்களில் பெரியபூந்தி இல்லாததை மன்னிக்கவே முடியாது. கடைக்காரர் சிரித்தபடி “லட்டு வாங்கி உதிர்த்துவிட்டால் பூந்தி!” என்றார். இது பூந்திக்குச் செய்யும் துரோகம் என்று அவருக்கு எப்படிப் புரியவைப்பது? பெரியபெரிய பூந்திகள் ஒட்டாமல் பொலபொலவென்று இருக்கும். பூந்திப் பொட்டலாம் இல்லாமல் பட்சணங்கள் நிறைவு பெறாத காலம் அது.
நூலில் சுற்றிய சங்குசக்கர மிட்டாய்களில் உள்ள நூலை இழுத்துச் சுழல விடுவோம். பார்க்கவே அழகாய் இருக்கும். நூல் அறுந்து போனால் சக்கர மிட்டாயைச் சாப்பிட்டு விடுவோம்.
விதையில்லா நாவல் பழங்கள் இன்னொரு விபரீதம். பள்ளிக்கூடப் பாட்டியிடம் விற்கும் ’நவ்வாப்பழம்’ அப்படியே இனித்துக் கிடக்கும். இலந்தைப் பழங்கள் அவற்றின் ருசியைத் தாண்டி என்னவோ சுவை காட்டி மயக்கும். வள்ளலார் என்னுள்ளே பழுத்து என்னுள்ளே கனிந்த இலந்தையங் கனியே! என்று பாடுகிறார். இறைவனையே நீ இலந்தைக் கனி என்கிறார். அறிவியல் தாமிரச்சத்து உள்ள ஒரே பழம் இலந்தைப் பழம் என்கிறது.
எளிய தின்பண்டம். பெரிய சந்தோஷம். சீடை, கொழுக்கட்டை, சுழியம் என்றெல்லாம் தின்னக் கொடுத்துதான் சிறார்களுக்குக் கடவுளை அறிமுகப்படுத்தினார்கள் நம் முன்னோர்.
ஆன்மிகம் தின்பண்டமானது அதிசயம் அல்லவா?
– தஞ்சாவூர் கவிராயர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.