நியோமேக்ஸ் : வகையாய் சிக்கிய 816 ஏஜெண்ட்டுகள் ! அடுத்த கட்டத்தை நோக்கி …
நியோமேக்ஸ்| வகையாய் சிக்கிய 816 ஏஜெண்ட்டுகள் ! அடுத்த கட்டத்தை நோக்கி …
நியோமேக்ஸ் விவகாரத்தில் தொடர்புடைய 816 ஏஜெண்டுகள் குறித்து பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் முறையான விசாரணையை தொடங்க வேண்டும் என்பதாக நீதியரசர் பரதசக்ரவர்த்தி உத்தரவிட்டிருப்பது, வழக்கு அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்வதன் அறிகுறியாக குறிப்பிடுகிறார்கள் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள்.
மேலும், டான்பிட் சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாக ஜி.முத்துக்குமரன் பொறுப்பேற்றிருப்பதும் வழக்கில் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறது. சாத்தான்குளம் போலீசு கஸ்டடி கொலை வழக்கில், போலீசார் 9 பேருக்கு தூக்குத்தண்டனை விதித்த கறார் நீதிபதி இவர் என்பதுதான் நியோமேக்ஸ் நிறுவனத் தரப்பில் கலக்கத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே, இரண்டு சுற்றுகள் ஏலம் நிறைவடைந்த நிலையில் மூன்றாவது சுற்றுக்கான இடங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, மதுரை உயர்நீதிமன்றத்திற்கு பின்புறமுள்ள 38 ஏக்கர் நிலம் குறித்த விவாதத்தில், சம்பந்தபட்ட இடம் மூன்று வருவாய்க்கிராமத்தில் வரம்பிற்குள் வருகிறது என்பதாலும்; நீர்நிலை மற்றும் பொதுப்போக்குவரத்துக்கான பாலம் அமைந்திருப்பதால் ஏற்கெனவே நீதிமன்றம் வழிகாட்டியபடி பாதை அமைக்க முடியாது என்ற வாதம் நிறுவன தரப்பில் வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அதனை ஒரே லாட்டாக ஏலத்திற்கு விடுவது என்றும் தீர்மானித்திருக்கிறது.
முந்தைய அனுபவங்களிலிருந்து, அதிகபட்சம் 10 நாட்களுக்குள் எம்.எஸ்.டி.சி.க்கு கட்ட வேண்டிய சேவைக்கட்டணத்தை செலுத்திவிட வேண்டும்; ஏலத்தில் பங்கேற்று ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டால் இ.எம்.டி. கட்டணம் திரும்பக்கிடைக்காது; தட்டச்சுப்பிழை என்ற காரணத்தை ஏற்க முடியாது; அவ்வாறு உண்மையில் தட்டச்சுப்பிழைதான் என்றால், அதிகபட்சம் ஒரு மணி நேரத்திற்குள்ளாக அது குறித்து மின்னஞ்சல் வழி புகார் அனுப்பியிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை கடுமையாக்கியிருக்கிறது.
இதுவரை வரப்பெற்ற புகார்களை உறுதிபடுத்தும் விவகாரத்தை பொறுத்தமட்டில், நியோமேக்ஸ் நிறுவனத் தரப்பில் ஒரு நபரை நிரந்தரமாக இந்த பணி முடியும் வரை ஒதுக்கீடு செய்து விரைவுபடுத்த வேண்டும்; முதல் கட்டமாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரும்; இரண்டாம் கட்டத்தில் நியோமேக்ஸ் நிறுவனத்தரப்பிலும் உறுதி செய்த பிறகு, மூன்றாம் கட்டமாக அந்த தகவல்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் அப்போது யார் வேண்டுமானாலும் அதில் முறையீடுகளை எழுப்பலாம் என்பதாக நீதியரசர் விளக்கம் அளித்திருக்கிறார்.

மிக முக்கியமாக, ஏற்கெனவே அமலாக்கத்துறைக்கு நியோமேக்ஸ் நிறுவனத் தரப்பில் வழங்கப்பட்ட வாக்குமூலத்தின்படி, 816 ஏஜெண்டுகளையும் வழக்கில் இணைக்க வேண்டும். அவர்களின் சொத்துக்களை கைப்பற்ற வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக, இந்த ஏஜெண்டுகள் பட்டியலில் உள்ளவர்கள் தற்போது வரையில், சுதந்திரமாக இடத்தை விற்று வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டை தேனி மாவட்ட சங்கத்தின் சார்பில் முன்வைக்கப்பட்டது.
இதுகுறித்து பேசிய அச்சங்கத்தை சேர்ந்த மணிகண்டன், “ திருச்சி மொராய் சிட்டியில் பெரும்பாலான இடத்தை கைமாற்றியிருக்கிறார்கள். பரமேஸ்வரன், நாகேஸ்வரன், பிரகாஷ், சுரேஷ் ஆகியோர் பெயரில் இருந்த சொத்துக்களை விற்றிருக்கிறார்கள்” என்பதாக ஆதாரங்களை காட்டி குற்றச்சாட்டுகளை எழுப்பினார். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, உரிய விசாரணை நடத்துமாறு பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
816 ஏஜெண்டுகள் மற்றும் அவர்களின் சொத்துக்களை நோக்கி உயர் நீதிமன்றத்தின் பார்வை திரும்பியிருப்பதும்; டான்பிட் சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி ஜி.முத்துக்குமரனின் கிடுக்குப்பிடி உத்தரவுகளும் நியோமேக்ஸ் நிறுவன தரப்பில் கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும்; வழக்கு அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்திருப்பதாகவும் குறிப்பிடுகிறார்கள், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில்.
– அங்குசம் புலனாய்வுக்குழு.







Comments are closed, but trackbacks and pingbacks are open.