எழுத்தாளன் என்ற ஒளிவட்டம் !
தமிழகத்தில் புத்தகக் காட்சிகள் செய்யும் தீங்குகளில் தலையாய தீமை, எழுத்தாளர்களுக்கு தாங்களும் இந்த சமூகத்தில் முக்கியமான நபர்கள்தான் என்ற பிரமையை தோற்றுவிப்பது. புத்தகக் கண்காட்சிகள் முடிவடைந்ததும் இந்த பிரமையை எடுத்துக் கொண்டு பொது சமூகத்திற்கு திரும்புகிற எழுத்தாளர்கள் கடுமையான மனச் சிதைவை அடைகிறார்கள்.
எழுத்தாளன் போற்றத்தக்கவனாக – சமூகத்தின் முக்கிய அங்கமாகத்தான் இருந்தான்; அவனை அப்போது புத்தகக் கண்காட்சிகளோ, POD (print on demond) சமாச்சாரங்கள் உருவாக்காத வரை.
அப்போது அவன் படைப்பை முகம் தெரியாத பத்திரிகை ஆசிரியர் குழு வாசித்துப் பார்த்து பரிசீலித்து ஏகோபித்த வாசகன் மனதில் நிற்கிற சிறந்த ஒன்றை அச்சேற்றியது.
அப்படி அச்சான படைப்புகளை நூல்களாக வெளியிட்டால், இன்னும் ஏராள வாசகர்களிடம் சென்று சேரும், அவற்றை புத்தகம் என்ற ஒரே கூரையின் கீழ் வாசகர்கள் படிப்பார்கள்; அவரவர் நூலகங்களில் பத்திரமும்படுத்துவார்கள் என்று பதிப்பகங்கள் அதை அச்சிட்டன.
அப்படி நூலாக்கம் பெறத் தகுதியுள்ள படைப்புகளை தேர்ந்தெடுக்க பதிப்பாசிரியர் தலைமையில் ஒரு பதிப்பாசிரியர் குழுவே இயங்கியது. அதில் சின்ன பிழை கூட வந்திடக் கூடாது என்பதற்காக பிழை திருத்துநர்கள், அச்சுக் கோர்ப்பவர்கள் மாறி மாறி மூன்று முறை அதை வார்த்தைக்கு வார்த்தை வாசித்து வாசித்து இறுதிப்படுத்தி பணிபுரிந்தார்கள்.
ஏனென்றால், அதில் ஒரு பிழை வந்து விட்டால் 1200 பிரதிகள் அச்சிடுவதால் அது ஓராயிரத்து இருநூறு பிழைகளாகும். அதுவே, ஒரு நூல் பிரதியை 10-20 பேர் வாசித்தால் 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பிழைகள் என்று கணக்கில் வந்து விடும். இந்த சிரத்தை – அர்ப்பணிப்பு அவர்களிடம் இயல்பாகவே குடி கொண்டிருந்தது.
அப்படியான அவர்கள் கண்ணுக்கு வெங்காயத்தை வைக்காத குறையாய் ப்ரூப் திருத்தி அச்சுக்குக் கொண்டு போனார்கள். அச்சிடும் அச்சகத்தாரும் குறிப்பிட்ட நூலில் ஏதாவது வில்லங்கம் உள்ளதா, நாம் அச்சிட்டு வெளியிட்டு நாளைக்கு இது ராஜதுரோகம் குற்றச்சாட்டு வந்து விட்டால் என்ன செய்வது என கவனமுடன் வாசித்த பின்பே அச்சேற்றினார்கள்.
இப்படியான நூல்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க, பத்திரிகைகளில், சினிமா ஸ்லைடுகளில் விளம்பரப்படுத்தினார்கள். நூல் வெளியீட்டு விழாக்கள் நடத்தினார்கள்.
இப்படியான ஏற்பாட்டில் நல்ல பிரபலப்பட்ட எழுத்தாளர்கள் கூட தான் ஓர் எழுத்தாளன் என்று தனக்குப் பின்னே ஒளிவட்டம் சூடிக் கொண்டு அலைந்தானில்லை. மற்றவருக்கு அட்வைஸ் செய்தானில்லை.
இப்போதையே எழுத்தாளன் தானே எழுதுகிறானா அல்லது எதிலிருந்தோ (இப்போ Al வேற) Copy, Paste செய்கிறானா யாருக்கும் தெரியாது. அவனே அதை தொகுத்து தப்புந் தவறுமாக பிழை திருத்தி லே – அவுட் செய்கிறான்.
அச்சுக்கு 5, 10 பிரதிகள் கூட POD மூலம் அச்சடித்து கடைத்தெருவுக்கு (கண்காட்சிக்கும்) கொண்டு வருகிறான். தனக்குப் பிடித்த ஆட்களை (இவர்கள் தங்கக் காசு வழங்கும் வல்லமை கொண்டவராயின் வைரமுத்து போன்ற பெரும் பிரபலங்கள் கூட வரலாம்) மேடையேற்றி நூல் வெளியீட்டு விழா கூட செய்து விடுகிறான்.
இப்படி இன்று பணம் இருந்தால் – நல்ல சம்பளத்துடன் பதவி இருந்தால் – அதிகாரப் பதவி உள்ள அரசு வேலையும் இருந்தால் இன்றைக்கு எழுத்தாளர் ஆவது மட்டுமல்ல; பின்பக்கம் ஒளிவட்டம் சுழலும் பிரபல எழுத்தாளர் ஆவது கூட சுலபம். ஒரு எழுத்தாளனுக்கு நல்ல வாசகர் கிடைப்பதுதான் கஷ்டம்.
இப்படி எல்லாம் உருவாகும் எழுத்தாளர்கள் புத்தகக் கண்காட்சிக்கு வரும் முன்பே – எழுதத் துவங்கும் முன்பே கூட மனச் சிதைவு நோயாளிகள்தான். நாம்தான் லேட்டாக அதைப் புரிந்து கொள்கிறோம்.
— கா.சு. வேலாயுதன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.