திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு தனி அறை எப்போது?
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நாள்தோறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகள், மக்கள் குறைதீர் கூட்டங்கள் மற்றும் முக்கிய ஆலோசனைக் கூட்டங்களை செய்தியாக்குவதற்காக பத்திரிகையாளர்கள் வந்து செல்கின்றனர்.
ஆனால், பத்திரிகையாளர்கள் அமர்ந்து செய்திகளைத் தயாரிப்பதற்கும், செய்திகளை உடனுக்குடன் அனுப்புவதற்கும் தனி அறை வசதி இல்லாத நிலை நீடிக்கிறது. குறிப்பாக, வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர் நிகழ்வில் பங்கேற்கும் பத்திரிகையாளர்கள் அமர்வதற்கு கூட இருக்கை வசதி கிடையாது. மர நிழலில், வாகன நிறுத்துமிடத்தில்தான் இளைப்பாறுகிறார்கள். நடைபாதைக்காக போடப்பட்ட கற்களின் மீதுதான் அமர்ந்து தான் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள்.
திருச்சி மாவட்டத்தின் பக்கத்து மாவட்டங்களான அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கூட பத்திரிகையாளர்களுக்கென தனி இடம், வைஃபை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஆட்சியில் செல்வாக்கான இரண்டு அமைச்சர்களை கொண்டிருந்தும்; தற்போதைய த.வெ.க. அரசில் கூட ஒரு அமைச்சர் ஒரு துணை சபாநாயகரை கொண்ட மாவட்டமாக; முதலமைச்சரே போட்டியிட்டு வென்ற தொகுதியை கொண்ட மாவட்டமாக இருந்தும் இந்த நிலையா? என்ற ஆதங்கம் பத்திரிகையாளர் மத்தியில் நிலவுகிறது.
தமிழகத்தின் அறிவிக்கப்படாத இரண்டாவது தலைநகரம் என்று கருதப்படும் திருச்சி மாவட்டத்தின் முக்கிய நிர்வாகச் செய்திகள் அனைத்தையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் பத்திரிகையாளர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

இன்னும் சொல்லப்போனால், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், உதவி இயக்குநர் நிலையில் நிர்வாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பத்திரிகையாளர்களின் அடிப்படை தேவையைக் கூட நிவர்த்தி செய்ய முடியாத நிலை தொடர்வது, வேதனைக்குரிய ஒன்று.
பத்திரிகையாளர்கள் அமர்வதற்கான இருக்கை வசதி, மேசை, நாற்காலிகள்,மின்சாரம், செல்போன் சார்ஜர் பாயிண்ட், மின்விசிறி,சுகாதாரமான குடிநீர் வைஃபை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் தனி பத்திரிகையாளர் அறையை அமைத்து பத்திரிகையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் தீர்வு காண்பாரா?
— அங்குசம் செய்தி பிரிவு.







Comments are closed, but trackbacks and pingbacks are open.