“19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பிரிட்டிஷ் அதிகாரத்துக்குக் கீழ் இருந்த மதுரை மாவட்டத்தின் ஆட்சியராக இருந்தவர் ஹாரிங்டன். இவரிடம் சமையல் வேலை பார்த்துவந்தவர் கந்தப்பன். அந்தக் காலகட்டத்தில், தமிழர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் பழங்கால ஓலைச்சுவடிகள் இருப்பது வழக்கம். வருடத்துக்கு ஒரு முறை கரையான் அரித்த, பழுந்தடைந்த சுவடிகளை எரிப்பதும் வழக்கம். அப்படித் தன்னிடம் எரிப்பதற்காக அளிக்கப்பட்ட ஓலைச்சுவடிகளில் சில எந்தப் பழுதும் இல்லாமல் நன்றாக இருப்பதைக் கண்ட கந்தப்பர், அதை ஹாரிங்டனிடம் ஒப்படைக்க, அவர் அதை அப்போது சென்னை மாகாண வருவாய்த்துறைச் செயலாளராக இருந்த எல்லீஸிடம் ஓப்படைக்க அப்படி நமக்குக் கிடைத்த நூல்தான் திருக்குறள். இன்று நாம் தமிழர்களின் அடையாளமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் சிலப்பதிகாரத்துக்காக `தமிழ்த் தாத்தா’ என அழைக்கப்படும் உ.வே.சா நடக்காத நடை இல்லை. ஆனால், கடந்த சல ஆண்டுகளாக `ஓலைச்சுவடிகள் திருட்டு’, `ஆன்லைனில் விற்பனை’ என இணையதளங்களிலும் பத்திரிகைகளிலும் வெளியாகும் செய்திகள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் குறிப்பாக, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன், தமிழ் மரபு அறக்கட்டளை’ எனும் தனியார் அமைப்பு இணைந்து 2010-ம் ஆண்டில் நடத்திய ஓலைச்சுவடி சேகரிப்பையொட்டி ஏகப்பட்ட சர்ச்சைகள் இணையத்தில் உலாவருகின்றன. தமிழ் மரபு அறக்கட்டளையின்மீது பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் எழுப்பப்படுகின்றன. வெளிநாட்டு முகவரிகளிலும், ராஜஸ்தான் போன்ற வெளி மாநில முகவரியிலும் தமிழ் ஓலைச்சுவடிகள் இணையதளத்தில் விற்கப்படுவது தான் பத்தாண்டுகளுக்குப் பிறகு இது சர்ச்சையாக வெடிக்கக் காரணம். இதன் உண்மைத்தன்மையைத் தெரிந்துகொள்வதற்கு முன்பாக ஓலைச்சுவடிகள் குறித்த சில அடிப்படையான தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.
காகிதங்கள் தயாரிக்கப்படுவதற்கு முன்பாக, ஒவ்வோர் இனமும் தங்களிடமிருக்கும் மருத்துவம், இலக்கியம், இலக்கணம், ஜோதிடம், கட்டடக்கலை, கணிதம், வானியல் போன்ற அரிய தகவல்களை அடுத்த தலைமுறைக்கு பத்திரப்படுத்த சில வழிமுறைகளைக் கண்டறிந்தன. பாறைகளில், கற்களில் எழுதிவைப்பது, களிமண் சிலேட்டில் எழுதிவைப்பது, ஓலைச்சுவடிகளில் எழுதிவைப்பது எனப் பல்வேறு வழிமுறைகள் பயன்படுத்தபட்டுவந்த நிலையில், தெற்காசிய மற்றும் தென் கிழக்காசிய நாடுகளில் பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பான மற்றும் நவீனமான ஒரு வழிமுறைதான் ஓலைச்சுவடிகளில் தகவல்களை பத்திரப்படுத்துவது.
குறிப்பாக இந்தியா, இலங்கை, நேபாளம், மியான்மர், லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளில் இப்படி ஓலைச்சுவடியில் எழுதிவைத்து, தகவல்களைப் பாதுகாக்கும் பழக்கம் இருந்துள்ளது. கி.மு.ஐந்தாம் நூற்றாண்டு முதல் கி.பி.19-ம் நூற்றாண்டு வரை இந்தமுறை கடைப்பிடிக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் ஓலைச்சுவடிகளில் தகவல்களைப் பாதுகாக்கும் பழக்கம் அதிகமாக இருந்துள்ளது. காரணம், அன்று தமிழர்களிடம் ஏராளமான கண்டுபிடிப்புகளும் இலக்கியப் படைப்புகளும் இருந்துள்ளன. இன்று `உலகப் பொதுமறை’ எனப் போற்றப்படும் திருக்குறள், சிலப்பதிகாரம் முதல் அனைத்து நூல்களும் நமக்கு ஓலைச்சுவடிகளின் வாயிலாகத்தான் கிடைத்திருக்கின்றன.
தன் வாழ்நாள் முழுவதையும் தமிழுக்காக அர்ப்பணித்து உ.வே.சா., சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம், புறநானூறு, திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு போன்ற அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் நூல்களை அச்சிட்டு, புதிப்பித்து பாதுகாத்தார். அப்படி அவர் சேகரித்த ஏட்டுச்சுவடிகளின், கையெழுத்தேடுகளின் எண்ணிக்கை மூவாயிரத்துக்கும் அதிகம். அவருடைய சேகரிப்புகளெல்லாம் சென்னை உ.வே.சாமிநாதய்யர் பொது நூலகத்தில் பாதுகாக்கப்பட்டுவருகின்றன. அதேபோல, காலின் மெக்கன்ஸி, லேடன், சி.பி.பிரௌன் ஆகிய வெளிநாட்டினரின் சேகரிப்புகள் அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. உலகிலேயே அதிகமான தமிழ்ச் சுவடிகள் இந்த நூலகத்தில்தான் உள்ளன. இங்கு, 26 லட்சம் ஓலைச்சுவடிகளைக் கொண்ட 72,748 சுவடிக் கட்டுகளும் உள்ளன. இவற்றில் அனைத்து மொழிச் சுவடிகளும் அடக்கம்.
சரஸ்வதி மஹால் நூலகம்:
அடுத்ததாக, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு உட்பட அனைத்து மொழிச் சுவடிகளையும் சேர்த்து, கிட்டத்தட்ட 8,000 ஓலைச்சுவடிகள் சேகரித்துவைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல பல மொழிகளில் எழுதப்பட்ட 39,000 ஓலைச்சுவடிகள், 69,000 புத்தகங்களுடன் தஞ்சை சரஸ்வதி மகால் இயங்கிவருகிறது.
சோழர்களின் கட்டடக்கலைக்கு பெரிய கோயிலும் அறிவுக் களஞ்சியத்துக்கு சரசுவதி மஹால் நூலகமும் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக, 100 ஆண்டுகளைக் கடந்து நிற்கிறது.
தஞ்சாவூர் சரசுவதி மஹால் நூலகம், 49,000 ஓலைச்சுவடிகள், 70,000த்துக்கும் அதிகமான அரியவகை நூல்களைக்கொண்டு உலகத்துக்கே எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ‘ இந்த நூலகம் அரசுடைமையாக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், அரசு இதன்மீது போதிய அக்கறையைக் காட்டவில்லை’ என வரலாற்று ஆய்வாளர்கள் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்.
தஞ்சை சரசுவதி மஹால் நூலகம் அரசு உடைமையாக்கப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, இதன் நூற்றாண்டு விழா இன்று விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பெரியகோயிலைப் போலவே சரஸ்வதி மஹால் நூலகமும் தஞ்சாவூரின் தனி அடையாளமாகத் திகழ்ந்துவருகிறது. சோழர்களின் கட்டடக்கலைக்கு பெரிய கோயிலும் அறிவுக் களஞ்சியத்துக்கு சரசுவதி மஹால் நூலகமும் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
இந்த நூலகத்துக்கு வந்து ஆய்வில் ஈடுபடும் வெளிநாட்டினர், இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் மாணவர்கள், இங்குள்ள ஓலைச்சுவடி மற்றும் நூல்களிலிருந்து குறிப்பெடுத்துச் செல்கின்றனர். ஓலைச்சுவடிகளை ஸ்கேன் செய்து டிஜிட்டல் ஆக்கும்முறை கடந்த சில வருடங்களாகவே நடைபெற்றுவருகிறது. இதேபோல், காகிதச் சுவடிகளும் ஸ்கேன் செய்து டிஜிட்டல் ஆக்கப்பட்டுவருகின்றன.
சரசுவதி மஹால் நூலகம்:
இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர்கள் சிலர் ”தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ளது, சரசுவதி மஹால் நூலகம். ஆசியாவின் மிகப் பழைமையான நூலகங்களில் ஒன்றாகவும் உலகில் முதன்மையானதாகவும் விளங்கி வருகிறது. ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட இந்நூலகம், சோழர்களால் சரசுவதி பண்டாரம், புத்தகப்பண்டாரம் என அழைக்கப்பட்டுவந்துள்ளது. இந்த நூலகத்தில் பணிபுரிந்தவர்கள், சரசுவதி பண்டாரிகள் என அழைக்கப்பட்டு வந்துள்ளனர். கி.பி 1122-ம் ஆண்டு முதலே இந்த நூலகம் இருந்ததற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன.
அதன்பிறகு ஆங்கிலேயேர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள் ஆகியோரது ஆட்சிக் காலங்களில் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு, பல்வேறு வளர்ச்சிகளை அடைந்து, காலங்களைக் கடந்து பெரும் அறிவுப் பொக்கிஷமாக விளங்கி வருகிறது. குறிப்பாக, மராட்டிய மன்னரான இரண்டாம் சரபோஜி மன்னர், நூல்கள்மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இதனால், நூலகத்தின் வளர்ச்சிக்குப் பெரும்பங்கு வகித்ததுடன், நூல்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்தினார். இங்கு தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருதம், மராத்தி, இந்தி என 49,000 ஓலைச்சுவடிகள் உள்ளன.
23,169 காகிதச் சுவடிகள்,1,352 கட்டுகளில் தேவநாகரி எழுத்துகளால் எழுத்தப்பட்ட 3 லட்சம் மராத்தி எழுத்தான மோடி எழுத்துக்களால் எழுதப்பட்ட ஆவணங்களும் உள்ளன. இதில் அரிய வகை மூலிகைகள், மருத்துவம், ஆன்மிகம், ஜோதிடம் பற்றிய ஆச்சர்யமான குறிப்புகளும் உள்ளன. மருத்துவம் தொடர்பாகவும் சிகிச்சை தொடர்பாகவும் வியக்கவைக்கும் குறிப்புகள் உள்ளன. அத்துடன் மிகச்சிறந்த ஓவியங்களும் உள்ளன. உலகின் பல இடங்களிலிருந்தும் வரலாற்று ஆய்வாளர்கள் தொடங்கி மாணவர்கள் வரை இங்கு வந்து அனுமதிபெற்று, நூல்கள் மற்றும் ஓலைச்சுவடிகளில் உள்ளவற்றைப் பார்த்து, தங்களுக்குத் தேவையான குறிப்புகளை எடுத்துச்செல்கின்றனர். அவர்கள், இந்த நூலகம் உலகத்தின் பொக்கிஷம் எனப் பாராட்டுவதுடன், இதை அழியவிடாமல் பராமரிக்கும்படியும் சொல்லிவிட்டுச் சென்ற சம்பவங்களும் நிறைய நடந்திருக்கின்றன. மராட்டிய மன்னர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த நூலகத்தை ஆங்கிலேயர்கள் தங்களுடைய ஆட்சிக் காலத்தில்,1918-ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி அரசுடைமையாக்கி, பொது நூலகமாக அறிவித்தனர். அரசுடைமையாக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதற்கான விழா கொண்டாடப்படுவது மகிழ்ச்சியான ஒன்று.
சோழர்கள் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டு இன்றைக்கும் மக்களுக்குத் தேவையான குறிப்புகளைக் காலம் கடந்தும் வழங்கி வருகிறது. மேலும், இங்குள்ளதுபோல் வேறு எங்கும் பனை ஓலைச்சுவடிகள் அதிக அளவில் இல்லை. இதில் உள்ள ஓலைச்சுவடிகள், காகிதச் சுவடிகள் மற்றும் அரியவகை நூல்கள் என ஒவ்வொன்றையும் ஸ்கேன் செய்து டிஜிட்டல் ஆக்கும் முறை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதில் உள்ள பொக்கிஷங்களைப் பாதுகாப்பதற்கு, போதுமான வேலையாட்கள் இல்லை. இதனால் பல பணிகள் மந்த நிலையிலேயே நடந்துவருகின்றன. அரசு இதற்குப் போதிய நிதி ஒதுக்காததும் வளர்ச்சியின் மீது கவனம் செலுத்தாததுமே இதற்குக் காரணம். வரலாற்று ஆவணங்களைப் பாதுகாக்க, வருவாயைக் கணக்கில் கொண்டு செயல்பட முடியாது.
அரண்மனை வளாகம் நம் முன்னோர்கள் நமக்காக கொடுத்துவிட்டுச் சென்ற பொக்கிஷத்தைக் காக்கவேண்டியது அரசின் கடமை. இதில் இருந்த நூல்கள் பல காணாமல் போயிருக்கின்றன. இது தொடர்பான வழக்குகளும் உள்ளன. காணாமல் போன நூல்களைக் கண்டுபிடித்து, மீண்டும் கொண்டுவந்து சேர்க்க வேண்டும். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் இது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். நூற்றாண்டு விழாவுக்குப் பிறகாவது, சரசுவதி மஹால் நூலகத்துக்குக் கூடுதல் கவனம் செலுத்தி, போதிய நிதியை ஒதுக்கி அரசு பாதுகாக்க வேண்டும்” என்கின்றனர் வேதனையோடு.
— பரஞ்சி சங்கர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.