1991 பேட்ச் குரூப் 1 அதிகாரிகளின் தரப்பட்டியலில் தனியிடம் இருக்கிறது பெரியய்யாவுக்கு. சட்ட ஒழுங்கு , குற்றப்புலனாய்வு , போக்குவரத்து , ஸ்பெஷல் விங் என்று எங்கு தூக்கி அடித்தாலும் அங்கும் தன் பெர்பார்மன்சால் முத்திரை பதித்தே மீண்டு வருவார். ஆட்சி மாற்றங்களால் இவரது பதவி அடிக்கடி பந்தாடப்படும். அரசியல் முத்திரைக்கு அப்பாற்பட்டவர்.
தென் சென்னையும் , வடசென்னையும் பெரியையாவின் வேட்டைக்கு பயந்து பிரபல தாதாக்களும் ரவுடிகளும் தலைமறைவானார்கள். பூக்கடை துணை கமிஷ்னராக இருந்தபோது நடைபெற்ற ஒரு ஆதாய கொலையில் , கடையில் வேலை செய்த ஒரு விசுவாசி குற்றவாளிகளால் கொல்லப்பட்டான். குற்ற வழக்கில் பாதிக்கப்பட்டவர்களை பற்றி எந்த உயர் அதிகாரியும் கவலை கொள்வதில்லை. ஆனால், கடையின் உரிமையாளரை அழைத்துப் பேசி கணிசமான பண உதவியை இழந்தவரின் மனைவிக்கு வாங்கி கொடுத்திருக்கிறார்.
போலீஸ் பயிற்சி பள்ளி , போலீஸ் அகாடமி , ஊர்க்காவல் படை என்று இவரை தொடர்ந்து டம்மியான பதவிகளிலேயே அடைத்து வைத்திருந்தனர் ஆட்சியாளர்கள் . தூக்கி அடிக்கப்பட்ட துறைகளிலும் தூள் கிளப்பினார். போலீசில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காவலர்களுக்கு பயிற்சி அளிக்க தமிழக காவல்துறையில் இரண்டே இரண்டு பயிற்சி பள்ளிகளே (PRS) இருந்தன . ஆனால், பெரியையா தன் கடும் முயற்சியாலும் , ஈடுபாட்டாலும் மாவட்ட ஆட்சியர்களிடமும் வருவாய் துறையினரிடமும் போராடி , தமிழக காவல்துறைக்கு கூடுதலாக 6 பயிற்சிப் பள்ளிகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்.

தேர்தல் பணிக்காக , இதன் சரித்திரத்தில் இதுவரை இல்லாத அதிசயமாய் அன்று (2017) நடைபெற்ற தேர்தலில் சுமார் 16,500 ஊர்க்காவல் படையினரை தேர்தல் கமிஷனுக்கு துணையாக அனுப்பியிருக்கிறார் பெரியைய்யா.
அடுத்த சவாலான பயணம் சிட்டி போலீசின் போக்குவரத்து பிரிவில். அடிஷனல் கமிஷ்னர் பதவியில் அமர்ந்தவுடன் இவர் வேட்டையாடியது வாகன ஓட்டிகளை அல்ல. மாறாக, சாலையில் மறைவில் நின்று கொண்டு வாகன ஓட்டிகளை வழிமறித்து , வலுக்கட்டாயமாக வழக்கு பதிவு செய்ய்யும், போக்குவரத்து காவல்துறையின் பெருமையை சீர்குலைப்பவர்களின் சங்கில் கத்தியை வைத்து விட்டார் பெரியைய்யா.
அடுத்த பயணம் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு பிரபலமான கோயம்புத்தூர் நகர கமிஷனர்.மக்கள் பணியில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். கிடப்பில் போடப்பட்ட வழக்குகளை தூசி தட்டி கையிலெடுத்தார். காய சான்றுகள் (Wound Certificate ) பெறுவதிலும் தாமதம் காட்டக் கூடாது. முதியோர் பாதுகாப்பில்( Senior Citizen protection) பாரா முகமாக இருக்கக் கூடாது. லோக்கல் போலீசார் அலைகழிக்கின்றனர் என்று யாரும் அழுத கண்ணோடு என் கேபினுக்கு வந்து நிற்கக்கூடாது. மிஸ்ஸிங் வழக்குகளில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இவரது அதிரடி உத்தரவுகளால் அதிர்ந்து போனார்கள் கோவை மாநகர போலீசார். எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் போலீசிலிருந்து பிரியாவிடை பெற்று இருக்கிறார்.
– இந்திரஜித்






Comments are closed, but trackbacks and pingbacks are open.