நியோமேக்ஸ் : பெயில் கேன்சல் ? கடுப்பான நீதியரசர் !
நியோமேக்ஸ் – பெயில் கேன்சல் ? கடுப்பான நீதியரசர் ! நீதிமன்ற விசாரணை
நியோமேக்ஸ் வழக்கு விவகாரத்தில் அதிரடி திருப்பங்களுள் ஒன்றாக, முக்கியமான ஏஜெண்டுகளான சிவகங்கையை சேர்ந்த முத்துக்குமார் மற்றும் சார்லஸ் ஆகியோரின் வீடுகள் தற்போது பொது ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.
ஏஜெண்டுகளின் வீடுகள், சார்லஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி, சார்லஸ் திருமண மண்டபம், விருதுநகர் பெட்ரோல் பங்க் உள்ளிட்டு 19 சொத்துக்களுக்கான ஏல அறிவிப்பை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டிருக்கிறார்கள். இதற்கான ஏலம் செப்டம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இந்நிலையில், செப்-03 அன்று நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில் ஏஜெண்டுகளின் வீடுகளை ஏலத்துக்கு கொண்டு வந்திருப்பதற்கு நியோமேக்ஸ் நிறுவன தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தார். குடியிருந்து வரும் வீட்டிற்கு பலரும் இடத்தை பார்வையிட வருவதாகவும், அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை குறுக்கிடும்படி அமைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
ஏஜெண்டுகளை நம்பி பணத்தை போட்டவர்கள் ஒற்றை ரூபாய்க்கு வழியில்லாமல் திண்டாடிவரும் நிலையில், கோடி கணக்கில் பங்களா கட்டி சொகுசாக வாழ்ந்து வருவதை அனுமதிக்க முடியாது என்பதாக பாதிக்கப்பட்ட தரப்பில் எதிர் வாதங்களை முன்வைத்தனர்.
ஏல அறிவிப்பு வெளியானபிறகும்கூட, நியோமேக்ஸ் நிறுவன தரப்பில் அடுத்தடுத்து ஆட்சேபனைகளை தெரிவித்த நிலையில் கடுப்பான நீதியரசர் பரதசக்ரவர்த்தி, “இனி பெயிலை கேன்சல் செய்தால்தான் புத்திவரும்” என்பதாக கடுமை காட்டியிருக்கிறார்.

இதுபோன்ற சர்ச்சைகளை தவிர்க்கும்பொருட்டு, இனி ஏலம் தொடர்பான அறிவிப்பில் வங்கிகள் பின்பற்றும் நடைமுறைபோல நபர்களின் பெயரில் வெளியிடாமல், அந்த இடம் பற்றிய விவரங்கள் மட்டும் இடம்பெற்றால் போதும் என்றும்; இனி ஏலத்துக்கு கொண்டுவரப்படும் சொத்துக்கள் குறித்த ஒரு சரிபார்ப்பு பட்டியலை தயார் செய்து அதன்படி அறிவிப்பு வெளியிடப்பட வேண்டுமென்றும் நீதியரசர் பரதசக்ரவர்த்தி வலியுறுத்தியிருக்கிறார்.
கும்பகோணத்தை சேர்ந்த ராஜா மற்றும் அவரது மகன் பரணிதரன் உள்ளிட்டோரின் முன் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து அவர்களை கைது செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை வழக்கறிஞர் ரஜினி தரப்பில் முன்வைத்தார். அவர்களும் முதலீடு செய்திருக்கிறார்கள். இந்த வழக்கில் ஏஜெண்டுகளாக குற்றஞ்சாட்டப்படுபவர்கள், அவர்களும் கணிசமான முதலீட்டை போட்டிருக்கிறார்கள். அவர்களும் பாதிக்கப்பட்டவர்கள்தான் என்பதாக அவர்கள் தரப்பில் வாதிட்டார் வழக்கறிஞர் வீரகதிரவன்.
இந்த வழக்கில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புதிய சாஃப்ட்வேர் தயாரிக்கும் பணி இறுதிகட்டத்தை எட்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, அதனை போலீசு அதிகாரிகள், இருதரப்பு வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் மத்தியில் சோதனை பதிவு நடத்துவதற்கான உத்தரவையும் பிறப்பித்திருக்கிறார்.
மிக முக்கியமாக, இனி வழக்கின் விசாரணையில் டான்பிட் நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரனும் உயர் நீதிமன்ற விசாரணையில் இணையவழி பங்கேற்பார் என்றும் நீதியரசர் பரதசக்ரவர்த்தி அறிவித்திருப்பதும் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. வழக்கின் அடுத்த விசாரணை செப்-18 அன்று நடைபெறும்.
– அங்குசம் புலனாய்வுக்குழு.






Comments are closed, but trackbacks and pingbacks are open.