“நாம் திராவிடக் குடும்பம்” மியூசிக் அகாடமியில் கமல் சுளீர் !
‘பாரத ரத்னா’ எம் எஸ் சுப்புலட்சுமியின் சுய சரிதையான ‘எம் எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN ‘ திரைப்படத்தின் தொடக்க விழா.
தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த்- ராக்லைன் வெங்கடேஷ்- பென்னி வாசு – கௌதம் தின்னனூரி- ராஷ்மிகா மந்தானா- அனிரூத் – கூட்டணியில் உருவாகும் ‘எம் எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN ‘ படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது
‘இசை மேதை’, ‘பாரத ரத்னா’ எம். எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறை தழுவி தயாராகும் திரைப்படம் ‘எம். எஸ்.: எ லெகசி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN ‘ படத்தின் பாரம்பரியமான தொடக்க நிகழ்வை மாநிலங்களவை உறுப்பினரும், இந்திய திரையுலகின் நட்சத்திர நடிகருமான கமல்ஹாசன் கிளாப் அடித்து, தொடங்கி வைத்தார்.
தேசிய விருதை வென்ற இயக்குநரான கௌதம் தின்னனூரி இயக்கத்தில் உருவாகும் ‘எம். எஸ். : எ லெகசி ஆன் ஸ்கிரீன்- திரைப்படத்தில் எம். எஸ். சுப்புலட்சுமியாக ‘நேஷனல் கிரஷ்’ நடிகை ரஷ்மிகா மந்தானா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ்- ராக் லைன் என்டர்டெய்ன்மென்ட் – பென்னி வாசு பிலிம்ஸ் – ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த் – ராக்லைன் வெங்கடேஷ்- பென்னி வாசு ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்தின் தொடக்க விழா எம் எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத இசை அரங்கமாக திகழ்ந்த சென்னையில் உள்ள தி மியூசிக் அகாடமி அரங்கத்தில் நடைபெற்றது. இதில் எம் .எஸ். சுப்புலட்சுமியின் குடும்ப வாரிசுகளும் , அவருடைய நலம் விரும்பிகளும், திரை உலகத்தை சார்ந்த தயாரிப்பாளர்களும், முன்னணி நட்சத்திர நடிகர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும் இந்த விழாவில் எம். எஸ். சுப்புலட்சுமியின் இனிமையான குரலில் ஒலித்த பாடல்களை.. இசை கலைஞர்கள் ஒன்றிணைந்து இசைத்து, அவருக்கு இசையஞ்சலியும் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இயக்குநரான கௌதம் தின்னனூரி பேசுகையில்,
”மரியாதைக்குரிய எம். எஸ். சுப்புலட்சுமி குடும்பத்தினருக்கு முதல் நன்றி. மதுரையில் இசையின் பின்னணியில் பிறந்து வளர்ந்த பத்து வயது சிறிய பெண். இசை துறையில் நுழைந்து தென்னிந்தியாவிற்கு உலகளாவிய பெருமை தேடி தந்தார். எம். எஸ். அம்மாவின் வாழ்க்கையை பார்க்கும்போது பாரத ரத்னா விருது – ஏராளமான தியாகங்கள்- மிகப் பெரிய மேடைகளில் இசை கச்சேரி நிகழ்த்தியது- ஆகியவை அவருடைய வாழ்க்கையின் ஒரு பகுதியாகத்தான் இருந்தது. ஆனால் இதற்குப் பின்னணியில் அவர் மிகுந்த மனித நேயம் கொண்ட பெண்மணியாக திகழ்ந்தார்.
மகள்- பாடகி- நடிகை- பெண்மணி- கலைஞர்- என பன்முக ஆளுமை திறன் கொண்டவராக இருந்தாலும்.. அடுத்த தலைமுறைக்கான அழுத்தமான செய்திகளும் அவருடைய வாழ்க்கையில் இருக்கிறது
எங்களுடைய படக் குழு- அவர் மீது முழுமையான மரியாதையும், அன்பையும் வைத்திருக்கிறது. எம் எஸ் அம்மாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக உருவாக்குவற்கு கிடைத்த வாய்ப்பிற்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இங்கு வருகை தந்திருக்கும் அனைவரின் ஆசிகளுடனும், வாழ்த்துகளுடனும் எம் எஸ் அம்மாவின் அர்ப்பணிப்பு- பக்தி- ஆகியவற்றை அவர்களுடைய சுயசரிதையாக தயாராகும் இந்த படைப்பில் நேர்த்தியாக கொண்டு வருவதற்கு உண்மையாக உழைப்போம் ” என்றார்.
பாடலாசிரியர் மதன் கார்க்கி
“இதில் ஒவ்வொருவருக்கும் சவால் இருக்கிறது. இந்த சவாலை கடந்து வரும் துணிச்சலையும் எம்எஸ் அம்மா தான் கொடுப்பார். ஏனெனில் அவர் எதிர்கொண்ட சவால்களை விட நாங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறைவுதான். இதனால் இந்த திரைப்படத்தில் பணியாற்றுவது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது”
தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ்
“தற்போதைய சூழலில் ஒரு நல்ல கதை கிடைத்து, அதை திரைப்படமாக உருவாக்குவது என்பது கடினம். அதிலும் சுயசரிதையை திரைப்படமாக உருவாக்குவது என்பது மிகவும் கடினமானது. கடந்த ஏழு ஆண்டுகளாக பல ஆய்வுகளை செய்து, நான் -அல்லு அரவிந்த்- பென்னி வாசு- என மூவரும் இணைந்து இதற்காக திட்டமிட்டு உழைத்தோம்.
எங்களைப் போல் பலரும் எம்எஸ் அம்மாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக உருவாக்க ஆசைப்பட்டார்கள். ஆனால் எங்கள் மூவரையும் எம். எஸ். அம்மா தான் தேர்வு செய்திருப்பார்கள் என நம்புகிறேன். எங்களை மட்டுமல்ல இயக்குநரையும் எம் எஸ் அம்மா தான் தேர்வு செய்துள்ளார்கள்”.
நடிகர்கள் சிவக்குமார், சமுத்திரக்கனி, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோர் சுருக்கமாக வாழ்த்திப் பேசினர்.

தயாரிப்பாளர் அல்லு அரவிந்த்
“எம் எஸ் அம்மாவின் வாழ்க்கை வரலாறை ஏன் திரைப்படமாக தயாரிக்க வேண்டும்? .. அவர் ஒரு இசைக் கலைஞர். அவர் ஒரு பாடகி. அவர் ஒரு சாதனையாளர்.. ஆகிய அடையாளங்களை எல்லாம் கடந்து அவருடைய வாழ்க்கையில் பல சம்பவங்கள் நடந்திருக்கிறது. அதுதான் அவர்களுடைய வாழ்க்கை வரலாறை திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியது.
அவர் வாழ்க்கையில் பின்பற்றிய கொள்கை- ஒழுக்கம்- நேர்மை- அர்ப்பணிப்பு -அதுவும் அவருடைய பத்தாவது வயதிலிருந்து இருபது வயது வரையிலான வாழ்க்கையில், அதுவும் அவருடைய கடினமான தருணங்களில் தன்னுடைய தனித்துவத்தை விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்த வாழ்க்கை.. இசை மீது அவருக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும், பற்றும்.. என பல விசயங்கள் இதில் உள்ளது. இதைப் பற்றி நான் மேலும் விரிவாக சொல்ல விரும்பவில்லை. அனைத்தும் இந்தப்படத்தில் இடம் பிடித்திருக்கிறது”

ராஷ்மிகா மந்தானா
“இன்று நாங்கள் எம் எஸ் அம்மாவின் பிறந்த நாளை கொண்டாடுகிறோம். இதை பார்த்து இந்த அரங்கத்தில் எங்கேனும் அமர்ந்து ரசிப்பீர்கள் என்றும்.. உங்களிடத்தில் சிறிய அளவில் புன்னகை இருக்கும் என்றும்.. நம்புகிறோம். அதுவே எங்களுக்கு மகிழ்ச்சி.உங்களுடைய குரலில் தனித்துவமான தெய்வீக சக்தி இருக்கிறது. அதை கேட்கும் போதெல்லாம் எனக்கு கடவுள் முன் அமர்ந்திருப்பது போன்ற உணர்வு எழும்.அம்மா உங்களுடைய வாழ்க்கையில் சிறிய பகுதியாக இருப்பதற்கு என்னை தேர்வு செய்து இருக்கிறீர்கள். இதற்காக நான் எப்போதும் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டவராக இருப்பேன்”
கமல்ஹாசன்
“நான் ‘மரோ சரித்ரா’ படத்தின் நாயகன். நான் மட்டுமல்ல எனக்கு முன்னாடியே மற்றொரு ஹீரோவும் இருக்கிறார். அவர் நாகேஸ்வரராவ். அவர் நடித்த ‘தேவதாஸ்’ இங்கு வெற்றி பெற்றிருக்கிறது. அதனால் நாம் அனைவரும் ஒன்றிணைந்த திராவிட குடும்பம். இதில் அரசியலை நுழைத்து குழப்பிக் கொள்ள வேண்டாம்.
இசை அனைவரையும் ஒன்றிணைக்கும் ஆற்றல் வாய்ந்தது. அதிலும் எம் எஸ் அம்மாவின் குரல் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஆற்றல் பெற்றது . அவரது சுயசரிதையை உருவாக்குவதால் இந்தியா பெருமை கொள்கிறது. குறிப்பாக தமிழகமும் பெருமை கொள்கிறது. இந்தப் படத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்டதை நான் இந்தியனாகவும் பெருமிதம் கொள்கிறேன்”.
— ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.