அங்குசம் பார்வையில் ‘அப்பா குட்டி’
தயாரிப்பு: ‘விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்’ ஃபாத்திமா விஜய் ஆண்டனி, டைரக்டர்: மு.மாறன், ஆர்டிஸ்ட்: விஜய் ஆண்டனி, ப்ரீத்தி அஸ்ரானி, பேபி லிதன்யா, ஹரி ப்ரியா, ஜென்சன் திவாகர், முருகானந்தம், ஹரிப்ரியா இசை, அருவி மதன், ஹரிதா, பகவதி பெருமாள், லிஸி ஆண்டனி, பிரவீனா, முத்துக்குமார் ,மூணார் ரமேஷ், சித்ரா லட்சுமணன், ஒளிப்பதிவு: ராஜீவ் ராஜேந்திரன், இசை & எடிட்டிங்: விஜய் ஆண்டனி, பிஆர்ஓ: ரேகா
சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் கைக்குழந்தை[பெண்]யுடன் இருக்கும் விஜய் ஆண்டனியை, பிச்சைக்காரி ஒருத்தியின் ரவுடிக் கும்பல் துரத்துகிறது. அவர்களோடு ஃபைட் பண்ணி, குழந்தையுடன் ஊட்டியில் போய் இறங்குகிறார் விஜய் ஆண்டனி. அங்கே சினிமா ஷூட்டிங் லொக்கேஷன் மேனேஜராக வேலை செய்து கொண்டு, குழந்தையைப் படிக்க வைத்து ஆளாக்குகிறார். “அப்பா குட்டி…அப்பா குட்டி…” என ஆசையாக விஜய் ஆண்டனியை அழைக்கிறாள் குழந்தை லிதன்யா. அந்தப் பள்ளியின் டீச்சரான ப்ரீத்தி அஸ்ரானிக்கு லிதன்யா மீது தனிப்பிரியம். ”இவளின் அம்மாவாக இருக்க நான் ஆசைப்படுகிறேன்” என ப்ரீத்தி விஜய் ஆண்டனியிடம் சொல்ல, அதை ஏற்க மறுக்கிறார் விஜய் ஆண்டனி.
இந்த நிலையில் லிதன்யாவுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்படுகிறது. ரத்த ஓட்டத்தில் பிரச்சனை இருப்பதாகவும், அதை ஸ்டெம் செல் மூலம் தான் குணப்படுத்த முடியும், அதற்கு நீங்கள் இருவரும் இணைந்து இன்னொரு குழந்தையை பெற்று, அதன் ஸ்டெம்செல்லை வைத்தால் தான் சரிப்படும் என்கிறார்கள் டாக்டர்கள். இந்த இக்கட்டான நேரத்தில் தான் குழந்தையைப் பற்றிய பெரிய உண்மையை ப்ரீத்தி அஸ்ரானியிடம் சொல்கிறார் விஜய் ஆண்டனி. அந்தக் குழந்தை யாருடையது? அதை ஏன் விஜய் ஆண்டனி எடுத்து வளர்க்கிறார்? இதான் இந்த ‘அப்பா குட்டி’ கதை.
முதல் பாதி முழுக்க பாசமிகு உருக்கமிகு செண்டிமெண்ட் சீன்களால் நிரம்பி வழிகிறது. லிதன்யா மீது அளவில்லாத பாசம், அவளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் விஜய் ஆண்டனி, பாசமிகு அப்பாவாகவே காட்சி தருகிறார். ஆனால் ஆக்ஷன், லவ்., செண்டிமெண்ட் ஏரியாக்களில் ஒரே மாதிரி எக்ஸ்பிரஷனைத் தான் அவரால் தர முடிகிறது.
பிச்சைக்காரக் கும்பலின் தலைவன் முத்துக்குமாரிடம் அந்தக் குழந்தை எப்படி சிக்கியது? என்பதைத் தேடி விஜய் ஆண்டனியும் ப்ரீத்தியும் பயணிக்கும் ஏரியா கொஞ்சம் கவனிக்க வைக்கிறது. ஆனால் அதன் பின், அந்த குழந்தையின் ஒரிஜினல் அம்மாவான ஹரிப்ரியா இசை. இவருக்கும் அருவி மதனுக்குமிடையே லவ்வாகும் போது கல்யாணம் பண்ணாமலேயே பிறந்த குழந்தை தான் இது. அதற்காக ஹரிப்ரியா இசை, இவரின் இப்போதைய கணவன் பகவதி பெருமாள், மாஜி காதலன் அருவி மதன் இவர்களையெல்லாம் சந்தித்து காலில் விழுந்து விஜய் ஆண்டனி கதறியழுவது என , க்ளைமாக்ஸ் வரை பக்கா டி.வி.சீரியல் மாதிரி சவச்சவென இழுக்கிறார் டைரக்டர் மு.மாறன். இது பத்தாதுன்னு விஜய் ஆண்டனியின் மாஜி லவ்வர், அவருக்கு வேறொருவனுடன் கல்யாணம் என குறுக்கு சால் ஓட்டியும் கிறுகிறுக்க வைத்துவிட்டார் மாறன். படத்தில் கொஞ்சம் ஆறுதலாக இருப்பது ப்ரீத்தி அஸ்ரானியின் நடிப்பு தான்.
ஊட்டியில் விஜய் ஆண்டனிக்கு உதவுபவராக வரும் ஜென்சன் திவாகரின் காமெடி சுத்தமா அவுட். க்ளைமாக்ஸுக்கு சற்று முன்பாக முருகானந்தம் வெடிக்கும் காமெடி சரவெடி தியேட்டரை கலகலப்பாக்குகிறது. “அப்பாவைப் போல யாரு….” பாடலில் மியூசிக் டைரக்டர் விஜய் ஆண்டனி மின்னுகிறார்.
மகாராஷ்டிரா மாநில புனேவில் வீணா என்ற குழந்தைக்கு நடந்த ஸ்டெம் செல் ஆபரேஷன் என்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தை உருவாக்கியிருப்பதாக கடைசியில் டைட்டில் கார்டு போடுகிறார் டைரக்டர் மு.மாறன். ஆனால் எல்லா சீன்களும் மேம்போக்காகவே போவதாலும் க்ளைமாக்ஸ் கோர்ட் சீன் கூட பார்வையாளனை அழ வைக்க வேண்டும் என வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டதாலும் ‘அப்பா குட்டி’க்கு ”அடடா” போட முடியவில்லை.
அங்குசம் பார்வையில் ‘அப்பா குட்டி’ 43/100
— ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.