அங்குசம் பார்வையில் ‘என்ன விலை’
பல கொலைகளைச் செய்துவிட்டு, சட்டத்தின் ஓட்டை வழியாக தப்பி, சர்வசாதாரணமாக வெளியில் சுற்றுகிறார்கள் படுபாவிகள். ஆனால் ஒரு அப்பாவி சிக்கினால் அவனைச் சிதைத்து வாழ்க்கையையே சின்னாபின்னமாக்குகிறது அரச பயங்கரவாதம். இதை அப்பட்டமாகச் சொல்லி காவல்துறையின் தோலை உரித்திருப்பது தான் இந்த ‘என்ன விலை’. ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்துவிட்டு காசுகளை கடலில் வீசி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அந்த காசுகளை கடலில் முங்கி எடுத்து பிழைப்பு நடத்துகிறார் தவசி முத்து[ கருணாஸ்] கடலோரத்தில் ஓலைக்குடிசை, மனைவி பாலம்மா[ விஜயலட்சுமி வீரமணி], மகன் கமலேஷ் ஜெகன், தங்கை ஷாஷா சிவக்குமார் ஆகியோருடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார்.
ஒரு நாள் கடலில் முங்கி காசுகளை எடுக்கும் போது, வட்டவடிவில் விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட தங்க ஆபரணம் கிடைக்கிறது. கடற்கரை செக்போஸ்டில் இருக்கும் கான்ஸ்டபிள் மோகன்ராமிடம் அதைக் கொடுக்கிறார் தவசி. அதைப் பார்த்து சந்தேகமடைந்த மோகன்ராம், அதிலிருந்து ஒரு பச்சைக்கல்லை மட்டும் நைசாக திருடி வைத்துக் கொண்டு, அந்த ஆபரணத்தை கவரிங் எனச் சொல்லி தவசியிடமே கொடுத்துவிடுகிறார். வீட்டில் அதைப் பார்க்கும் தவசியின் மனைவி பாலம்மாள், அம்மிக்கல்லில் அதை உரசிப்பார்த்துவிட்டு, தங்கம் என்பதை அறிந்து பதறிப்போய், போலீசிடம் ஒப்படைக்கச் சொல்கிறார். அதன் பிறகு தவசியின் வாழ்க்கையே சின்னாபின்னமாகிறது. தவசிக்காக கோர்ட்டில் ஆஜராகிறார் வக்கீல் காஞ்சனா[ நிமிஷா சஜயன்].
ராமேஸ்வரம் கோர்ட்டிலிருந்து, இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்திற்குப் போகிறது. அப்பாவி ஏழையான தவசிமுத்துவின் மானத்திற்கு என்ன விலை? இதான் காஞ்சனாவின் கேள்வி.
தவசிமுத்துவாக கருணாஸ் நடிப்பு தான் படத்திற்கு சரியான விலை. ஸ்டேஷன் லாக்கப்பில் அடிவாங்கி கதறுவது, தற்கொலைக்கு முயன்று கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் கிடக்கும் மகனின் நிலையைச் சொல்லி நிமிஷாவிடம் கதறுவது, க்ளைமாக்ஸில் எனக்கு ஒரு ரூபாய் கூட வேணாம் என கோர்ட்டில் கம்பீரமாகச் சொல்வது என மனுஷனின் நடிப்பு அபாரம். வக்கீலாக நிமிஷா சஜயன். அடேங்கப்பா… கோர்ட் சீன்களில் இவரின் வசன உச்சரிப்பு, பாடிலாங்குவேஜ், தேசத்துரோகி என தவசி சித்தரிக்கப்பட்டதும், கண்ணீர்விட்டுக் கதறி, கேஸில் ஆஜராக முடியாது என ஷாஷாவிடம் சொல்லும் சீனில் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறார் நிமிஷா. கருணாஸின் மனைவியாக நடித்திருக்கும் விஜயலட்சுமி வீரமணி, தங்கை ஷாஷா சிவக்குமார், பெண் சாமியார் கல்கியம்மாவாக தீபா சங்கர், மோகன்ராமுடன் நடித்திருக்கும் மூன்று கான்ஸ்டபிள்கள் என அனைவருமே நினைவில் நிற்கிறார்கள்.
முதல்வராக க்ளைமாக்ஸில் எண்ட்ரியாகிறார் நம்ம இளையதிலகம் பிரபு. “மக்கள் ஜெயித்தால் தான் மக்களாட்சி” என அவர் பேசும் டயலாக் இப்போதைய தற்குறிகள் கவனிக்க வேண்டியது. அட்வகேட் ஜெனரலாக ஒய்.ஜி.மகேந்திரனும் சரியான தேர்வு.
சாம் சி.எஸ்.சின் பின்னணி இசை, குறிப்பாக ராமேஸ்வரம் நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்றக் காட்சிகளில் மிகவும் சிறப்பு. ராமேஸ்வரத்தை வேறொரு கோணத்தில் காட்சியிருக்கார் கேமராமேன் ஆல்பி ஆண்டனி.
அந்த தங்க ஆபரணம் யாருடையது என்பதற்கு க்ளைமாக்ஸில் நம்பும்படியாக ஒரு ட்விஸ்ட் வைத்துள்ளார் டைரக்டர். எளிய மக்களின் பக்கம் நின்று நீதிக்காகப் போராடும் கதைக் களைத்தைத் தேர்ந்தெடுத்த டைரக்டர் சஜீவ் பழூரைப் பாராட்டலாம்.
அங்குசம் பார்வையில் ‘என்ன விலை’ 50/100
— ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.