எழுதவில்லை – விதைகளை விதைக்கிறேன் ! எழுத்தாளர் நான்சி கோமகன் !

சிறார் இலக்கியம்- எழுத்தாளா் அறிமுகம்-11

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

சிறார்  எழுத்தாளர், கதைசொல்லி மற்றும்  மேடைப் பேச்சாளர், அரும்புகள் நாடக்குழு – ஒருங்கிணைப்பாளர், நாடக இயக்குநர் உள்ளிட்ட பன்முக அடையாளம் கொண்ட ஆளுமை எழுத்தாளர் நான்சி கோமகன்.

தனியார் பள்ளியில் 15 வருடங்கள் ஆசிரியராக பணிபுரிந்தவர், கோமகன் என்ற மாலைநேர படிப்பகத்தை நிர்வகித்து வருகிறார். அப்பாவும் அவரது நண்பர்களும் சேர்ந்து தொடங்கிய அரும்புகள் நாடகக்குழுவின் வழியே சமூகநீதி நாடகங்களை இயக்கியும் நடித்தும் வருகிறார்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசி, (2021) வளையாபதி(2022)  செய்யுள்களை , கதை வடிவில் சிறார் படிக்கும் வண்ணம் எளிய தமிழில், “பூக்களின் புதுமொழி”  எனும் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். காட்சிப் பிழை என்பது இவரது மற்றொரு சிறுகதை தொகுப்பு. சமம் என்ற இளையோர் குறுநாவலையும் படைத்திருக்கிறார்.

தாத்தா கம்பராயன்,  தந்தை கோமகன் ஆகியோரை தொடர்ந்து, இலக்கியத்தடத்தில் தற்போது நான்சியும் பயணிக்கிறார். குழந்தையாகவே மாறி எழுத வேண்டும் எனும் நான்சிகோமகன், குழுந்தைகளுக்காக எழுதுவது இலக்கியப்பணி மட்டுமல்ல; அது ஒரு சமூகப் பொறுப்பும்கூட எனும் நான்சிகோமகன்,  ” நான் வெறும் கதைகளை எழுதவில்லை; மனிதர்களின் மனங்களில் மாற்றத்திற்கான விதைகளை விதைக்கிறேன்” என்கிறார்.

நான்சி கோமகன்
நான்சி கோமகன்

ஆசிரியா் அறிமுகம் சிறப்பு நேர்காணல்

1.தங்களைக் குறித்து கூறுங்கள்?

நான்சி கோமகன். சிறார்  எழுத்தாளர், கதைசொல்லி மற்றும்  மேடைப் பேச்சாளர், அரும்புகள் நாடக்குழு – ஒருங்கிணைப்பாளர், நாடக இயக்குநர்.

2.சிறார் இலக்கியத்தை தாங்கள் தேர்வு செய்ததற்கான காரணம்?

குழந்தைகளின் உலகத்தில் பயணிக்கும் ஒருவராக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஒரு குழந்தை படிக்கும் கதை, அதன் சிந்தனையையும் எதிர்காலத்தையும் மாற்றும் சக்தி கொண்டது. அதனால் குழந்தைகளுக்காக எழுதுவது ஒரு இலக்கியப் பணி மட்டுமல்ல; அது ஒரு சமூகப் பொறுப்பும் கூட. குழந்தைகளின் மனதில் அன்பு, இயற்கை, சமத்துவம், மனிதநேயம், கேள்வி கேட்கும் திறன் ஆகியவற்றை விதைக்க வேண்டும் என்ற எண்ணமே என்னை சிறார் இலக்கியத்திற்குள் அழைத்து வந்தது. இன்றைக்கு பல சிறார் எழுத்தாளர்கள் எழுதிக் கொண்டு இருக்கிறார்கள்.  அவற்றை எல்லாம் சிறார்களிடம் யார் கொண்டு போய் சேர்ப்பது. பெரும்பான்மையான பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்குமே தெரிந்திராத எழுத்தாளுமைகளையும் அவர்களின் புத்தகங்களையும் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்யவே சிறார் இலக்கியத்தை தேர்வு செய்தேன்.

3.தங்களின் கல்வி மற்றும் பணியைக் குறித்து கூறுங்கள்?

தனியார் பள்ளியில் ஆசிரியாக 15 வருடங்கள் பணிபுரிந்தேன்.  2018 – ல் கோமகன் அகாடமி எனும் மாலைநேர படிப்பகத்தை தொடங்கி, 2023 -ல் இருந்து அதில் முழுநேரமாக செயல்பட்டு வருகிறேன். நமது அகாடமியில் சிறுவர், பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகள்  வழங்கப்பட்டு வருகிறது.

அரும்புகள் நாடகக் குழு எனது அப்பாவும் அவரது நண்பர்களும் இணைந்து 5000க்கும் மேற்பட்ட வீதி, மேடை நாடகங்களை வெற்றிகரமாக நடத்திய பிரபலமான நாடக்குழு. மீண்டும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அக்குழுவின் வழியே சமூகநீதி நாடகங்களை இயக்கி நடித்து வருகிறேன்.

எழுத்து, கதைசொல்லல், நாடகம், வாசிப்பு இயக்கம், இலக்கியப் பயிற்சி என குழந்தைகளையும் பெண்களையும் மையமாகக் கொண்ட பல்வேறு செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன்.

4.தங்களின் குடும்பம் குறித்து கூறுங்கள்?

என் அத்தனை செயல்பாடுகளுக்கும் அடிப்படையாக இருப்பது என் குடும்பம்தான். மறைந்த என் தாத்தா (அப்பாவின் அப்பா) கம்பராயன் அரசு பள்ளியில் தலைமையாசிரியராக இருந்து பின் ஓய்வு பெற்றறவர். எழுத்தாளர்.  அவரது கதைகள் டெல்லி பல்கலைக்கழகத்தில் பாடமாக இருந்தது. ஆறுவடச் சங்கலி அவரது புகழ் பெற்ற கதை. அப்பா கோமகன் பன்முக ஆளுமை. கவிஞர், பேச்சாளர், நாடக ஆளுமையாக இருந்தவர். இவர்களின் வழி இன்று மூன்றாவது தலைமுறையாக செயல்பட்டு வருகிறேன். அம்மா ஷீலா ஓய்வு பெற்ற செவிலியர், என்னோடு இணைந்து நாடகங்களில் பங்கேற்று வருகிறார். கணவர் ரமேஷ் புகைப்படக் கலைஞர் நாடக கலைஞர். மகள் சஹானா கல்லூரி மாணவி. இவர்களின் ஆழ்ந்த புரிதலும் ஊக்கமுமே எனக்கான உந்துசக்தி.

5.தற்கால சிறார் இலக்கியம் குறித்து தங்களின் கருத்து?

இன்று சிறார் இலக்கியம் புதிய பரிமாணங்களை அடைந்துள்ளது.   குழந்தைகளை வெறும் தகவல்களால் நிரப்பும் புத்தகங்களைவிட, அவர்களின் உணர்வுகளை வளர்க்கும் புத்தகங்களே அதிகம் தேவை. அறிவையும் அன்பையும் சமமாகக் கற்றுத்தரும் இலக்கியம்தான் காலத்தை வெல்லும். குழந்தைகள் விரும்பும் சாகச, அறிவியல் சார்ந்த சிறு கதைகளும், நாவல்களும் இன்னும் நிறைய தேவை. குழந்தைகளுக்கு நெருக்கமாக இருக்கும் ஆசிரியர்கள் சிறார் இலக்கியத்திற்கு தேவை. ஏனெனில் குழந்தைகளுக்கு சற்றும் சம்பந்தமில்லாத எழுத்தாளர்களால் குழந்தைகளின் தேவையை அறிய முடியாது.

6.தங்களின் சிறார் இலக்கிய பங்களிப்பு குறித்தும், தங்கள் சிறார் இலக்கியப் படைப்புகளின் சிறப்புகள் குறித்தும் கூறுங்கள்?

இயற்கை, மனிதநேயம், சமூக அக்கறை, வாசிப்புப் பழக்கம், தன்னம்பிக்கை போன்றவற்றை எளிய தமிழில் குழந்தைகளிடம்  கதை சொல்லுவதன் மூலம் கொண்டு சேர்க்க முயன்று வருகிறேன்.

படைப்புகள் :

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசி, (2021) வளையாபதி(2022)

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

செய்யுள்களை , கதை வடிவில் சிறார் படிக்கும் வண்ணம் எளிய தமிழில் சிறுகதை.

சிறார்களின் சிறுகதைகளை கொண்ட பூக்களின் புதுமொழி  எனும் சிறுகதைத் தொகுப்பின் தொகுப்பாசிரியர். (2023)

காட்சிப் பிழை எனும் சிறுகதை தொகுப்பு.(2023)

சமம் – கதை (இளையோர் குறுநூல் ) 2025

புத்தகம் முடிந்த பிறகும் அந்தக் கதையை குழந்தை சிந்தித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதே என் எழுத்தின் நோக்கம்.

7.உங்கள் எழுத்துப் பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனை எது?

என் எழுத்துப் பயணத்தில் மறக்க முடியாத திருப்புமுனை, “சமம்” கதையை வாசித்த ஒரு பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் என்னிடம் கூறிய வார்த்தைகள்தான். “மேம்,  இந்தக் கதையைப் படித்த பிறகுதான் திருநர்களைப் பற்றிய என்னுடைய பார்வை மாறியது. அவர்களையும் நம்மைப் போன்ற மனிதர்களாகப் பார்க்கக் கற்றுக்கொண்டேன்,” என்று கூறினான்.

ஒரு எழுத்தாளருக்கு இதைவிடப் பெரிய அங்கீகாரம் வேறு இருக்க முடியாது. ஒரு கதை ஒருவரின் மனநிலையையும் சமூகப் பார்வையையும் மாற்ற முடியும் என்பதை அந்த தருணம் எனக்கு உணர்த்தியது.

அன்றுதான், நான் வெறும் கதைகளை எழுதவில்லை; மனிதர்களின் மனங்களில் மாற்றத்திற்கான விதைகளை விதைக்கிறேன் என்ற நம்பிக்கை எனக்குள் இன்னும் வலுவடைந்தது. அந்த அனுபவமே, இன்னும் அதிகப் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் சிறார் இலக்கியத்தில் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்ற உறுதியை எனக்குக் கொடுத்தது.

8.கடந்த கால சிறார் இலக்கியத்திற்கும் தற்கால சிறார் இலக்கியத்திற்கும் உள்ள வேறுபாடாக தாங்கள் கருதுவது?

முன்பு கதைகள் “எதைச் செய்ய வேண்டும்?” என்று குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுத்தன. இன்று கதைகள் “ஏன் செய்ய வேண்டும்?” என்று சிந்திக்க வைக்கின்றன. நீதிநெறிக் கதைகளைத் தாண்டி வந்ததே இன்றைய வெற்றி. இதுவே மிகப்பெரிய மாற்றம். இருப்பினும், எந்தக் காலமாக இருந்தாலும் குழந்தையின் கற்பனையை மதிக்கும் இலக்கியம்தான் சிறந்த சிறார் இலக்கியம்.

9.தற்கால சிறார்கள் வாசிப்பை நோக்கி நகர்வதற்கு பெற்றோர்களும், கல்விக் கூடங்களும் செய்ய வேண்டியவை?

வாசிப்பை ஒரு பழக்கமாக அல்ல, ஒரு கொண்டாட்டமாக மாற்ற வேண்டும். வீட்டில் புத்தகங்கள்  இருக்க வேண்டும்; பள்ளியில் கதைகள் ஒலிக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு நாள் ‘வாசிப்பு நாள்’, மாதத்திற்கு ஒரு நாள் ‘எழுத்தாளரைச் சந்திப்போம்’, அடிக்கடி கதைசொல்லல், நூலகப் பயணம் போன்ற முயற்சிகள் குழந்தைகளை வாசிப்பின் பக்கம் இயல்பாக ஈர்க்கும். முதலில் பெற்றோர் தொலைக்காட்சி, திறன்பேசிகளை தேவைக்கேற்ப பயன்படுத்தி, புத்தக வாசிப்பை மேற்கொள்ள வேண்டும்.

ஆசிரியர்கள் நல்ல புத்தகங்களை, கதைகளை மாணவர்களிடம் சொல்வதன் மூலம் வாசிப்பை மேற்கொள்ள வைக்கலாம்.

10.தற்கால பெற்றோர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது

உங்கள் குழந்தைக்கு நீங்கள் தரக்கூடிய மிகப் பெரிய சொத்து புத்தகங்களும், அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமும் தான். மதிப்பெண்களை பற்றி மட்டுமே கேட்காதீர்கள்; “இன்று என்ன புத்தகம் படிச்ச?”, “என்ன புதிதாகக் கத்துக்கிட்ட?” என்றும் கேளுங்கள். ஒரு நல்ல வாசகராக வளரும் குழந்தை, நல்ல மனிதராகவும் வளரும்.

11.தற்கால சிறுவர்களின் வளர்ச்சிக்கு நாம் முன்னெடுக்க வேண்டிய முன்னெடுப்பு குறித்து

ஒவ்வொரு ஊரிலும் குழந்தைகளுக்கான நூலகங்கள் உருவாக வேண்டும். கதைசொல்லல் விழாக்கள், சிறார் புத்தகக் கண்காட்சிகள், இயற்கை வாசிப்பு முகாம்கள், நாடகப் பயிற்சிகள் போன்றவை அதிகரிக்க வேண்டும். குழந்தைகளை திரைக்கு முன்னால் அமர வைப்பதைவிட, புத்தகங்களின் உலகத்திற்குள் அழைத்துச் செல்ல வேண்டும். குழந்தைகளுக்காக நாம் உருவாக்கும் ஒவ்வொரு புத்தகமும், ஒவ்வொரு கதையும், ஒவ்வொரு வாசிப்பு இயக்கமும் நாளைய சமூகத்தை உருவாக்கும் முதலீடு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

12.ஒரு சிறார் நூலை “நல்ல நூல்” என்று தீர்மானிப்பது எது?

ஒரு சிறார் நூல் வெறும் கதையைச் சொல்வதால் மட்டும் நல்ல நூலாக மாறிவிடாது. அந்த நூல் குழந்தையின் மனதில் ஆர்வத்தைத் தூண்ட வேண்டும்; கற்பனையை விரிவுபடுத்த வேண்டும்; சிந்திக்கவும், கேள்வி கேட்கவும் ஊக்குவிக்க வேண்டும். புத்தகத்தை மூடிய பிறகும் அந்தக் கதையும் அதன் கதாபாத்திரங்களும் குழந்தையின் மனதில் வாழ்ந்துகொண்டே இருந்தால், அதுவே ஒரு நல்ல சிறார் நூலின் வெற்றி.

அதே நேரத்தில், குழந்தைகளுக்கு நேரடியாக அறிவுரை கூறாமல், கதையின் இயல்பான ஓட்டத்தின் வழியாக வாழ்க்கை மதிப்புகளையும் மனிதநேயத்தையும் அறிமுகப்படுத்த வேண்டும். மொழி எளிமையாக இருக்க வேண்டும்; ஆனால் சிந்தனை ஆழமாக இருக்க வேண்டும்.

என் பார்வையில், ஒரு குழந்தை அந்தப் புத்தகத்தை மீண்டும் மீண்டும் வாசிக்க விரும்பினால், அல்லது வாசித்துவிட்டு “இன்னொரு புத்தகம் இருக்கிறதா?” என்று கேட்கத் தூண்டினால், அதுவே அந்த நூலுக்குக் கிடைக்கும் மிகப் பெரிய அங்கீகாரம். ஒரு நல்ல சிறார் நூல் குழந்தையை நல்ல வாசகராக மட்டுமல்ல, நல்ல மனிதராகவும் உருவாக்க வேண்டும்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.