மணற்கேணி ஆய்விதழ் சார்பில் ‘நிகரி’ சமத்துவ ஆசிரியர் விருது வழங்கும் விழா !
மணற்கேணி ஆய்விதழ் வழங்கும் நிகரி விருது ஏவிசி கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் சு.தமிழ்வேலுக்கு வழங்கப்பட்டது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும, விழுப்புரம் மக்களவை உறுப்பினருமான முனைவர் து.இரவிக்குமார் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் மணற்கேணி தமிழ் ஆய்விதழ் சார்பில் ஆண்டுதோறும் ‘நிகரி’ சமத்துவ ஆசிரியர் விருதினைக் கடந்த 13 ஆண்டுகளாகச் செப்டம்பர் மாதத்தில் வழங்கி வருகின்றது. இந்த ஆண்டு நிகரி விருதும் 10ஆயிரம் பொற்கிழியும் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி தமிழாய்வுத் துறையின் தலைவர் முனைவர் சு.தமிழ்வேலு அவர்களுக்கு வழங்கப்பட்டது.
கடந்த 19.09.26 சனிக்கிழமை மாலை திண்டிவனம் நகரில் நிகழ்ந்த நிகழ்வில் நிகரி விருது வழங்கும் விழாவிற்கு மக்களவை உறுப்பினர் முனைவர் து. ரவிக்குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசின் சமூகநீதித் துறை அமைச்சர் வன்னியரசு பேராசிரியர் சு.தமிழ்வேலுக்கு ’நிகரி’ சமத்துவ ஆசிரியர் விருதினை வழங்கினார்.
நிகரி விருதில், “13.03.1970இல் பிறந்த சு.தமிழ்வேலு முதுநிலைத் தமிழ், முதுநிலை மொழியியல், ஆய்வியல நிறைஞர் மற்றும் முனைவர் பட்டத்தையும் பெற்றவர். ஓலைச்சுவடி இயலில் சான்றிதழும் பெற்றுள்ளார். 350க்கும் மேற்பட்ட கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார். மாணவர்களுக்குப் பயிலரங்குகளை ஒருங்கிணைத்துள்ளார். அவரே முன்னின்று 50க்கும் மேற்பட்ட கருத்தரங்குகளை நடத்தியுள்ளார். கிராமடப்புறப் பகுதிகளிலிருந்து வந்து படிக்கும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் வகுப்புகளைச் சார்ந்த மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் உற்ற துணையாகவும் இருந்து உதவி வருகிறார்.
தற்போது மயிலாடுதுறைக்கு அருகே உள்ள மன்னன்பந்தலில் இருக்கும் அ.வ.அ. (ஏவிசி) கல்லூரியில் தமிழாய்வுத் துறையின் இணைப் பேராசிரியராகவும் தலைவராகவும் உள்ளார். கல்வி வளாகத்துக்கு உள்ளேயும், வெளியேயும் சமத்துவத்தைப் பேணி, கல்லூரி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாகச் செயல்பட்டு வரும் சு.தமிழ்வேலு அவர்களின் பணிகளைப் பாராட்டி 2026ஆம் ஆண்டுக்கான நிகரி விருதை வழங்குவதில் பெருமைப்படுகிறோம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.






Comments are closed, but trackbacks and pingbacks are open.