அங்குசம் பார்வையில் ‘டோரதி’

தயாரிப்பு : குனீத் மோங்கா கபூர், ஜோதி தேஷ்பாண்டே, அச்சின் ஜெயின். எழுத்து & இயக்கம் : கார்த்திக் சுப்பராஜ், நடிகர்-நடிகைகள், கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், முத்துக்குமார், ராமச்சந்திரன் துரைராஜ், திருநங்கை  ஜீவா சுப்பிரமணியன், கஜராஜ், செளந்தர்ராஜா,  முத்துப்பாண்டி. இசை : இசைஞானி இளையராஜா, ஒளிப்பதிவு : எஸ்.திரு [எ] திருநாவுக்கரசு, எடிட்டிங் : கணேஷ் சிவா, ஆர்ட் டைரக்டர் : குமார் கங்கப்பன், ஸ்டண்ட்: தினேஷ் சுப்பராயன், பி.ஆர்.ஓ.: சுரேஷ் சந்திரா & ஏ.அப்துல்நாசர்.

மதுரையின் ஒரு கிராமம் தான் கதைக்களம். அங்கே சாதி வெறியுடன் வாழும் வீரய்யாவின்[முத்துக்குமார்] மகன்கள் செளந்தர்ராஜா, சனந்த் இருவரும் அம்மாவை இழந்தவர்கள்.  சிறுவயதிலேயே அப்பாவை இழந்துவிட்டதால் அம்மாவின் அரவணைப்பில் வாழும் ரிஷிகாந்தும் சனந்தும் பள்ளிப்பருவத்திலிருந்து நெருங்கிய நண்பர்கள். நண்பன் ரிஷிகாந்தை யாராவது தொட்டால் அடித்து துவைத்துவிடுகிறார் சனந்த். அப்படிப்பட்ட ரிஷியை தனது வீட்டிற்கு அழைத்து வருகிறார் சனந்த். அங்கே அவனது அப்பா மற்றும் அண்ணனின் சண்டியர்த்தனத்தையும் சாதி வெறியையும் பார்க்கிறான் சிறுவன் ரிஷிகாந்த். ரிஷியின் அம்மாவின் பாசம் சனந்துக்கு மகிழ்ச்சி தருகிறது.

‘டோரதி’இவர்கள் இருவரும் வளர்ந்த பின், ரவுடியாகிறார்கள். இந்த நிலையில் தான் அண்ணன் செளந்தர் ராஜா, டோரதியை[கீர்த்தி சுரேஷ்] திருமணம் செய்து வீட்டுக்கு கூட்டி வருகிறான். அம்மாவும் அக்காவும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட பிறகு வீட்டிற்கு வரும் பெண்ணான டோரதி மீது தனிப் பாசம் கொண்டு அன்புடன் பழகுகிறார் சனந்த். எந்நேரமும் அண்ணியுடனேயே இருக்கிறார் சனந்த்.

‘டோரதி’ என்றால் கடவுள் தந்த பரிசு என அர்த்தம். அந்த கடவுள் தந்த பரிசு யார்? என்பதை மதுரை மண்ணின் மணத்துடன், பலதரப்பட்ட  மனிதர்களின் குணத்துடன் அச்சு அசலாக மனசுக்கு ரொம்பவும் நெருக்கமாக பதிவு செய்து உலுக்கியுள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.

1995-ல் கதை நடக்கிறது. இடைவேளை வரை வீரய்யாவின் சாதித் திமிர், கந்துவட்டி அடாவடி, செளந்தர்ராஜா & முத்துப்பாண்டியின் குடிக்கூத்து, பனியாரம் விற்று பிழைப்பு நடத்தும் ரிஷிகாந்தின் அம்மா, கோவில் திருவிழா, திருமணம் என ஒருவித ஆவணப்பட சாயலில் பிளாக் & ஒயிட் டோனில் படம் நகர்வதால் லைட்டா கண் அசந்தது.

‘டோரதி’ஆனால் இடைவேளைக்குப் பின் கீர்த்தி சுரேஷ் வந்ததும் திரையில் ஒரு புத்துணர்ச்சி, புத்தெழுச்சி. இதுவே படத்தின் பிரதானமாகவிடக் கூடாது என கரெக்டா யோசித்த கார்த்திக் சுப்பராஜ், கீர்த்தி சுரேஷுக்கு முடிவுரை எழுதி, அங்கேயிருந்து வேறொரு தொடக்கவுரையை எழுதி, க்ளைமாக்ஸில் இதயம் கனக்க வைக்கிறார்.

“ஆம்பள அழக்கூடாது” என ரிஷியிடம் சனந்த் சொல்வதற்கும் “பொம்பள அழக்கூடாது” என சனந்திடம் கீர்த்தி சுரேஷ் சொல்வதற்குமிடையே இருக்கும் ஆயிரமாயிரம் அர்த்தங்களை திரையில் காட்சிப்படுத்த கார்திக் சுப்பராஜ் ரொம்பவே பாடுபட்டிருப்பதை நம்மால் நன்றாகவே உணர முடிகிறது.

ரிஷிகாந்தும் சனந்தும் போட்டி போட்டு நன்றாக, மிகநன்றாக நடித்து பிரமிக்க வைக்கிறார்கள். தம்பிகளா இம்புட்டு நாளா எங்கப்பா இருந்தீக?முத்துக்குமாரின் சினிமா கேரியரில் இதான் பெஸ்ட் படம்.

தான் ஒரு மிகச்சிறந்த சீனியர் ஒளிப்பதிவாளர் என்பதை நிரூபித்திருக்கிறார் திரு [எ] திருநாவுக்கரசு. கிராமத்தில் பிளாக் & ஒயிட், அதன் பின் லைட்டா கலர் ஷேட், பிற்பகுதியில் நேச்சுரல் லைட் என மனுஷன் சும்மா புகுந்துவிளையாடிவிட்டார். அதிலும் க்ளைமாக்ஸில் ரிஷியும் ராமச்சந்திரன் துரைராஜும் பேசும் சீனில் அந்த பாறை பின்னணியில் கதையையே காட்சியாகக் காட்டியிருக்கிறார் திரு.

‘டோரதி’“சாதி, மதம், இனம், மொழி கடந்து அனைவராலும் கடைப்பிடிக்கப்படுவது பாலின பாகுபாடு” கார்த்திக் சுப்பராஜின் இந்த டயலாக் தான் டோரதியின்  சவுண்ட்  ’டோன்’, ‘பேஸிக் டோன்’.

படத்தின் ஹீரோ சாட்சாத் நம்ம இசைஞானி இளையராஜா தான். “கல்யாண விருந்து”, “முத்துமணி” பாடல்கள் ஏற்கனவே செம ஹிட் தான். அதைப் படத்துடன் பார்க்கும் போது மனசு ஜிவ்வுங்குது. அதிலும் “முத்துமணி” பாடலை கார்த்திக் சுப்பராஜ் படமாக்கியவிதம் மெய்சிலிர்க்க வைக்கிறது. இடைவேளைக்குப் பிறகு மொத்தமே நான்கு பக்கங்கள் தான் வசனம். ஆனால்  பேசியதெல்லாம் இசைஞானியின் இசை தான். குறிப்பாக கடைசி இருபத்தைந்து நிமிடங்கள் நமக்குள் உணர்வு அலைகளை ஆர்ப்பரிக்க வைத்து பிரமிக்க வைக்கிறார் இசைஞானி. வாழ்க நீ எம்மான்…

‘டோரதி’ மாஸ் & கிளாஸ்.

அங்குசம் பார்வையில் ‘டோரதி’ 70/100

—    ஆண்டவர்

Comments are closed, but trackbacks and pingbacks are open.