கோயில் நில ஏலத்தில் பட்டியலினத்தவருக்கு எதிர்ப்பு ! போலீசில் செயல் அலுவலர் புகார் !
துறையூர் அருகே சோபனபுரத்தில் உள்ள கோயில் நில ஏலத்தில் பட்டியலினத்தவர்களுக்கு விடக்கூடாது என ஒரு தரப்பினர் தகராறு செய்ததையடுத்து ஏலத்தை நிறுத்திய செயல் அலுவலர் இது தொடர்பாக உப்பிலியபுரம் போலீஸில் புகார் செய்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கொப்பம்பட்டி அருள்மிகு சப்தரிஷிஸ்வர் கோவில் நிர்வாகத்துக்கு கட்டுப்பட்ட உப கோவில்களான சோபனபுரத்தில் உள்ள பூஞ்சோலை அம்மன், காசி விஸ்வநாதர் மற்றும் ஓசரப்பள்ளியிலுள்ள வேணுகோபால் கோவில்கள் ஆகும்.
இந்தக் கோவில்களுக்கு சொந்தமான சுமார் 45 ஏக்கர் நிலங்கள் வருடந்தோறும் ஏலத்தில் விடப்படும். இதை ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் குத்தகை எடுப்பார்களாம். மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்களை ஏலத்தில் கலந்து கொள்ள விட மாட்டார்களாம். இந்த நிலையில் அக்கோவில்களின் பொறுப்பு செயல் அலுவலரான ராஜகோபால் இன்று காலை திட்டமிட்டபடி கோவில் நிலங்களை ஏலத்தில் விட சென்றார். அப்போது ஒரு தரப்பினர் கோவில் நிலங்களை ஏலத்தில் விடக்கூடாது என்றும், வழக்கம் போல் ஏலம் எடுப்பவர்களுக்கு நிலத்தை ஒதுக்கி தருமாறும் கூறினாராம். இதற்கு செயல் அலுவலர் ஒத்துக் கொள்ளவில்லை. முறையாக ஏலம் நடத்தப்படும் என்றார்.
இந்த நிலையில் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலத்தை ஏலத்தில் எடுக்க இந்த ஆண்டு பட்டியலினத்தைச் சேர்ந்த மக்கள் ஏலம் கேட்கத் தயாராகினராம். அப்போது வழக்கமாக ஏலக் குத்தகை கோருபவர்களும் அவர்களுடைய ஆதரவாளர்களும் செயல் அலுவலரை ஏலம் நடத்த விடாமல் தடுத்ததாகவும், பட்டியலின சமூகத்தினரை கோயிலை விட்டு வெளியேறச் சொல்லியும் , அங்கிருந்த நோட்டுகளை இழுத்து எறிந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் பாதுகாப்பிற்காக வந்திருந்த உப்பிலியபுரம் போலீசார் சமாதானப்படுத்தாமல் வேடிக்கை பார்த்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஏலத்தை நிறுத்திய செயல் அலுவலர் உப்பிலியபுரம் போலீஸில் இது தொடர்பாக புகார் செய்தார். மேலும் பட்டியலினத்தை சேர்ந்தவர்களும் இது குறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு புகார் அளித்துள்ளதாக தெரியவருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






Comments are closed, but trackbacks and pingbacks are open.