பரோட்டா புராணம் !
தமிழகத்தில் 60-களில் அறிமுகமான உணவு மைதா மாவினால் தயாரிக்கப்படும் பரோட்டா. அதற்கு இணையாக வழங்கப்படும் குருமா எனும் சால்னாவுக்காகவே பெருமை பெற்றது. பரோட்டாவின் தாயகம் சிலோன் (இலங்கை) என்கிறார்கள். முதன்முதலில் மாவை நாலா பக்கமும் விசிறி சதுர வடிவில்தான் மடித்தார்கள். இன்றும்கூட, சிலோன் பரோட்டா என்றால் சதுரமாகத்தான் கிடைக்கும். பிறகு, இலங்கையிலிருந்து கேரளாவில் அறிமுகமானது. கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு பரோட்டா வந்ததாக உணவியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
நார்ச்சத்து இல்லாதது; மற்ற உணவுகளை ஒப்பிடுகையில் நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்தக்கூடிய உணவு என்பதாலேயே, நீண்டதூரம் பயணிக்கும் லாரி ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்களின் விருப்பத்தேர்வாக பரோட்டா மாறியது. குறைந்த செலவில் வயிற்றை நிரப்பும் உணவு என்பதால், ஏழை, நடுத்தர மக்களின் பட்ஜெட் உணவாகவும் மாற்றம் பெற்றது.
தோசைக்கல்லில் எண்ணெய் தெளித்து வாட்டி எடுக்கப்பட்ட பரோட்டாவை, எண்ணெய் சட்டிக்குள் மூழ்கடித்து பொறித்துக் கொடுத்து ஆயில் பரோட்டா என்றொரு புதிய வகையை அறிமுகப்படுத்திய பெருமையை விருதுநகர் மாவட்டம் பெற்றது. தூத்துக்குடியில் பொரித்த பரோட்டா என பெயர் பெற்றது. எதையும் கொஞ்சம் மாற்றி யோசிக்கும் மதுரைக்காரர்கள், பன் பரோட்டா, நூல் பரோட்டா, கொத்து பரோட்டா, சில்லி பரோட்டா, வாலையிழை பரோட்டா என பல அவதாரங்களை வழங்கி தன் பங்குக்கு பரோட்டாவின் புகழ் மணக்க செய்தது, மதுரை.
கேரள எல்லையில் இருப்பதால் என்னவோ, பரோட்டா – சால்னா காம்பினேஷனில் டாப்கியரில் சக்கைப்போடுகிறது, தென்காசி. அதுவும் மட்டன், சிக்கன், பீப் சால்னாவில் தனித்துவமாக மனம் வீசும் நாட்டு மசாலாவுக்காகவே இந்த இடத்தை தக்கவைத்துவிட்டது தென்காசி.
ஒரு காலத்தில், நகரங்களில் மட்டுமே கிடைத்து வந்த பரோட்டா இன்று குக்கிராமங்களில் இயங்கும் ஹோட்டல்களிலும் தவிர்க்கவியலாத மெனுவாக மாறிப்போனது. காலை 6 மணி முதல் நள்ளிரவு தாண்டியும் காத்திருந்தால் சுடச்சுட பரோட்டா கிடைக்கும் என்ற நிலையும் பெற்றது.
தென்காசி – செங்கோட்டை எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பரோட்டா கடை தேங்காய் எண்ணெயில் வறுத்தெடுக்கப்படும் நாட்டுக்கோழி, காடைக்காகவே சுற்றுலாப்பயணிகள் குவியும் இடமாகிப்போனது.
தென்காசி நகருக்குள் மொறுமொறுப்பான ரஹமத் புரோட்டா; பள்ளிவாசல் தெரு / சாம்பவர் வீதியில் உதயம் புரோட்டா; அப்புறம், கிரீன்ஸ் லேண்ட் ரெஸ்டாரண்ட், தொப்பி வப்பா பிரியாணி & ஹோட்டல்களில் கொத்து, வீச்சு, பன் பரோட்டாவுக்கான தனி இடத்தைப் பிடித்தது.
அதிலும் குறிப்பாக, சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட தென்காசி – கடையநல்லூர் வட்டாரத்தில் பாய்கடை என அழைக்கப்படும் மூலி பரோட்டா கடை சுவையான பீப் சால்னாவுக்கு பெயர் போனது. பஞ்சுபோன்ற பரோட்டாவுக்கு பெயர் பெற்ற கடையநல்லூர் அய்யாபுரம் ஹமீது புரோட்டா கடை இங்கே படு பிரபலம்.
கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்துக்கு எதிரே அமைந்துள்ள சுங்கமுத்து பரோட்டாக்கடை, காலை 6 மணிக்கே களை கட்டிவிடும். நீண்ட தொலைவுக்கு வரிசை கட்டி நிற்கும் கூட்டத்தில் நின்று ஒரு மணி நேர காத்திருப்புக்குப் பிறகுதான் பரோட்டாவை வாங்கவே முடியும்.
தென்காசியின் தனித்துவமான தட்பவெப்பச் சூழலும், மக்களின் உணவுப் பிரியமும், உள்ளூர் உணவு வணிகர்களின் உழைப்பும் சேர்ந்து புரோட்டாவை அம்மாவட்டத்தின் அடையாள உணவாகவே மாற்றிவிட்டது.
— ஆதவன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.