காந்திகிராமப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் த. கண்ணா கருப்பையா அறக்கட்டளைச் சொற்பொழிவு தொடக்க விழா
காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் பேராசிரியர் த.கண்ணா கருப்பையா ஆய்வு மாணவர்கள் அறக்கட்டளைச் சொற்பொழிவு தொடக்கவிழா 14.10.2026 அன்று தமிழ்த்துறையின் குறள் அரங்கத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் ந.பஞ்சநதம் தலைமை வகித்தார். சென்னை துவாரகதாஸ் கோவர்த்தனதாஸ் வைஷ்ணவக் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியரும் நாட்டுப்புற ஆய்வாளருமான முனைவர் மு.ஏழுமலை “தமிழ்ப்பண்பாட்டில் திரௌபதி” என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
தமிழ்த்துறைத்தலைவர் மற்றும் அறக்கட்டளை ஒருங்கிணைப்பளரான பா.ஆனந்தகுமார் தனது வரவேற்புரையில் “இந்த அறக்கட்டளை நிறுவனரான த.கண்ணா கருப்பையா காந்திகிராமப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் முன்னாள் ஆய்வு மாணவர். திருநெல்வேலி ம.தி.தா., இந்துக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர். நாட்டுப்புறவியல் ஆய்வுகள் குறித்த சிந்தனைகளை, ஆய்வுகளை மாணவர்களிடையே அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்த அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது” என்றார்.
பல்கலைகழகத் துணைவேந்தர் ந.பஞ்சநதம் தனது தலைமையுரையில் “பல்துறை ஆய்வுகள், சிந்தனைகள் வளர்த்தெடுக்கப்பட இதுபோன்ற அறக்கட்டளைகள் நிறுவப்பட்டு துறைசார்ந்த அறிஞர்களின் சொற்பொழிவுகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். கல்வியின் முன்னேற்றமே நாட்டை உயர்த்தும். இரவீந்தநாத் தாகூரின் விஸ்வபாரதி பல்கலை நிதிப்பற்றாக்குறையினால் மூடப்படும் சூழல் வந்தபோது, ‘காந்தியடிகள் மாணவர்களின் கல்விக்காகப் பிறரிடம் கையேந்தவும் தயங்கமாட்டேன் ’ என்றார்.
அத்துடன், 1921ஆம் ஆண்டிலேயே 1 கோடி நிதி வசூல் செய்து வழங்கினார்” என்றார். நாட்டுப்புற ஆய்வாளர் முனைவர் மு.ஏழுமலை தனது உரையில், “தமிழகத்தில் திரௌபதியம்மன் வழிபாடு குறித்த ஆங்கிலேயரின் ஆய்வுகள் திரௌபதி என்னும் மகாபாரதக் கதாபாத்திரம் திரௌபதி அம்மனாக உருமாற்றம் அடைந்ததன் சமூகப் பண்பாட்டுக் காரணிகளை ஆராயவில்லை.
ஆனால், தமிழகத்தில் திரௌபதி வழிபாடு உருவானபோது உள்ளூர் பண்பாடுகளை உள்வாங்கிக்கொண்ட விதம் ஆராயத்தக்கது. ஒரு இனத்தின் சமூக வரலாற்றை, பண்பாட்டைக் கட்டமைக்க நாட்டார் தெய்வங்களின் வழிபாடுகளை மீட்டெடுத்தலும் ஆய்வு செய்தலும் அவசியம் ” என்றார். பேராசிரியர் த.கண்ணா கருப்பையா ஆய்வு மாணவர்கள் அறக்கட்டளையின் செயலாளர் முதுமுனைவர் மு.ஐயப்பன் நன்றியுரை ஆற்றினார்.
நிகழ்வில் முதுமுனைவர் மு.ஐயப்பன் அவர்களின் ‘நீரைத் தேடுகிற வேர்’ என்னும் நூல் வெளியிடப்பட்டது. தொடக்க விழாவில் அறக்கட்டளை நிறுவனரான பேராசிரியர் த.கண்ணா கருப்பையா, மேனாள் மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.கருப்பையா, நாட்டுப்புற ஆய்வாளர் இரா.மனோகரன், பேராசிரியர் த.கண்ணா கருப்பையா ஆய்வு மாணவர்கள் அறக்கட்டளையின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தமிழ், இந்தித்துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் , கௌரவ விரிவுரையாளர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் பார்வையாளராகப் பங்கேற்றனர்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.