நூல் கொடி காட்ட வந்தவன்
நூலாசிரியர்: ரேவதி
பதிப்பகம்: கதைவண்டி பதிப்பகம்,
செல்:- 7502340787.
விலை ரூ 110/-.
இந்நாவலின் கதாநாயகனான மோகன் என்ற 12 வயது சிறுவன் ஆங்கில அதிகாரிகளின் குழந்தைகள் படிக்கும் ஆங்கிலப்பள்ளியில் படிக்கிறான். நாட்டுநடப்பு தெரியாமல் இருக்கும் சிறுவன் தன் தாத்தா நடத்தும் துணிக்கடை முன்பும், கள்ளுக்கடை முன்பும் விற்பனையைத் தடுத்து மறியலில் ஈடுபடும் காந்தி இயக்கத் தொண்டர்களைக் கண்டு, காந்தி ஒரு கலகக்காரர் என்ற முடிவுக்கு வருகிறான். பின் அந்த மறியல் போராட்டத்தின் உண்மையான நோக்கத்தையும், விடுதலைக்களத்தில் காந்தியடிகளின் பங்கையும் அவன் எப்படித் தெரிந்து கொண்டான் என்பது மீதிக்கதை. காந்தியடிகளின் சேவையையும், இந்திய விடுதலைப் போரில் அவர் ஆற்றிய பங்கையும் இந்நாவலின் வழியே குழந்தைகளிடம் கொண்டு சேர்த்திருக்கிறார் ஆசிரியர்.
இதில் காந்தியின் ஆணையை ஏற்றுத் தம் தென்னந்தோப்புகளை அழித்துவிட்டுக் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டுச் சிறை சென்ற தந்தை பெரியார் குறித்த செய்தியும் இடம் பெற்றுள்ளது சிறப்பு. கள்/மது குடிப்பதால் குடும்பம் எப்படிச் சீரழிகிறது? சுதேசி இயக்கத்தின் அடிப்படை நோக்கமென்ன? அந்நியப் பொருட்களை வாங்கிக் குவிப்பதால் நாட்டின் பொருளாதாரம் எப்படிப் பாதிக்கப்படுகிறது? காந்தியடிகள் இடுப்பில் ஒரு துண்டு மட்டும் உடுத்த ஏன் முடிவு செய்தார்? உப்பு சத்தியாக்கிரகம் ஏன் நடத்தப்பட்டது போன்ற பல இந்திய விடுதலை நிகழ்வுகளை இக்கதையின் வழியே சிறார் தெரிந்து கொள்ளமுடியும்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.