பாலின சமத்துவம் சார்ந்த கருத்துகளைச் சிறுவர்களுக்கான உணவு மற்றும் சமையல் கதைகள் வழியாகச் சொல்வது மிகவும் எளிமையான மற்றும் ஆற்றல் மிக்க ஒரு வழியாகும். சிறு வயதிலிருந்தே சமூகத்தில் வேரூன்றியிருக்கும் பாலின வார்ப்புகளை (Gender Stereotypes) உடைக்கச் சமையலறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் சிறந்த களமாக அமைகின்றன.
சிறுவர்களுக்கான அத்தகைய கதைகளை எழுதும் போது படைப்பாளர்களுக்கு கூடுதல் கவனமும், சமூக பொறுப்பும் அவசியம்.
சமையல் என்பது பொதுவான கலை என்ற கோணத்தைப் பாலினப் பாகுபாடின்றிச் சித்தரிக்க வேண்டும். சமையலறை என்பது பெண்களுக்கானது மட்டுமே என்ற பிம்பத்தை மாற்ற வேண்டும்.
வீடுகளில் வேலைகளைப் பகிர்ந்து கொள்வதை இயல்பாக்கும் வகையில் கதைகள் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, அம்மா வேலைக்குச் செல்லும்போது அல்லது ஓய்வெடுக்கும்போது அப்பாவும் மகனும் சேர்ந்து சமைப்பது போன்ற காட்சிகளை அமைக்கலாம்.
உணவுத் தயாரிப்பில் திறமைக்கு மட்டுமே முதலிடம் என்பதை உணர்த்தும் வகையில் “பெண்கள் மெதுவாக சமையல் செய்வார்கள், ஆண்கள் ஹோட்டல் ஸ்டைலில் செய்வார்கள்” போன்ற பொதுவான கருத்துகளைத் தவிர்க்க வேண்டும். சிறுவர்களும் சிறுமிகளும் தங்களுக்குப் பிடித்தமான உணவு வகைகளைச் செய்வதில் ஆர்வம் காட்டுவதைக் கதையின் மையமாக வைக்கலாம்.
உழைப்பின் மதிப்பு: உணவைச் சமைப்பது எவ்வளவு கடினமான மற்றும் மதிப்பிற்குரிய வேலை என்பதைச் சிறுவர்களுக்குப் புரியவைத்து, சமைப்பவர் யாராக இருந்தாலும் (அம்மா/அப்பா) அவர்களுக்கு நன்றி கூறும் பழக்கத்தை உருவாக்குதல் என்பதைப் போன்ற கதை நகர்வுகளைக் கொண்டு வரலாம்.
பாரம்பரியக் கதைகளிலிருந்து உணவு சமைத்தல் குறித்த மரபை மாற்றுதல்: தாத்தா சொல்லித் தரும் பாரம்பரியப் பாட்டி வடை அல்லது பழைய சமையல் குறிப்புகளை, பேரன் மற்றும் பேத்தி இருவரும் சமமாக நின்று கற்றுக்கொள்வது போன்ற நிகழ்வுகளை உருவாக்கலாம்.
மேலும் ‘உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு’ போன்ற வரிகளின் மரபை மாற்றி, சிறுவர்களுக்கான கதைகளில் இதுபோன்ற பாலின உணவுப் பாகுபாடுகளை உடைத்து எழுதுவது மிகவும் முக்கியம். உடலுக்குத் தேவையான சத்துக்களும் ஆற்றலும் எல்லாருக்கும் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் வகையில் கதைகளை உருவாக்கலாம்.
சிறுவயதிலிருந்தே நம் அனைவராலும் மிக இயல்பாக பாடப்பட்ட பாடலான “தோசையம்மா தோசை, அம்மா சுட்ட தோசை” எனும் வரிகளை, அப்பா சுட்ட தோசை என்று கூட மாற்றலாம். அதேபோல் அப்பாடலில் வரும் தோசையின் அளவு அம்மாவிற்கு மூன்று என்றும், அப்பாவிற்கு நான்கு என்றும் வரும். யாருக்கு எவ்வளவு பசிக்கிறதோ அவ்வளவு தோசைகள் உண்ணப்பட்டதாக சிறுவர்களுக்கான கதைகளையோ பாடல்களையோ வடிவமைக்கலாம்.
மேலும், பாடப்புத்தகங்களில் தொடங்கி, கதைகள் வரை எழுதப்பட்டு வரும் வரிகளான அப்பா செய்தித்தாள் படித்தார், அம்மா சமையலறையில் சமையல் செய்தார் என்பதை இருவரும் இணைந்தே சமையலறையில் சமைத்தனர். இருவரும் செய்தித்தாள் படித்தார்கள் என்பதைப் போன்ற இயல்பான கதைப்போக்குகளைக் கொண்டு வரலாம்.
மிக முக்கியமாக, கதைகளில் போதனையாக இல்லாமல், வண்ணமயமான படங்கள் மற்றும் சுவாரஸ்யமான உரையாடல்கள் மூலம் சமையலறையை ஒரு மகிழ்ச்சியான, பாலினப் பாகுபாடற்ற இடமாகக் காட்டுவதே குழந்தைகளின் மனதில் ஆழமாகப் பதியும்.
(தொடரும்)
— கார்த்திகா கவின்குமார்






Comments are closed, but trackbacks and pingbacks are open.