அப்பாவின் கனவு நோட்டு !

வெந்ததும் வேகாததும் - கவிராயர் பக்கம் - 06

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

தன் எண்பத்து ஓராவது வயதில் இவ்வுலக வாழ்வை நீத்த என் தந்தை ஒரு ஓய்வு பெற்ற தமிழாசிரியர். புத்தக வாசிப்பிலேயே தன் ஓய்வுக் காலத்தின் பெரும்பகுதியைக் கழித்தவர். அவரிடம் அரிதான புத்தகங்களின் தொகுப்பு இருந்தது. இப்புத்தகங்களில் பல அவர் மறைந்த பிறகு என் புத்தக அலமாரியில் ஐக்கியமாயின. என்னிடம் இருப்பவற்றிலேயே அரதப் பழசான புத்தகங்கள் அப்பாவுடையவைதாம். எப்போதாவது அந்தப் பழைய புத்தகங்களை எடுத்துப் பார்ப்பது உண்டு. அவற்றில் ஒன்று என் பழைய ஞாபகங்களைக் கிளறிவிட்டது. அந்தப் புத்தகத்தின் பெயர்: ‘சொப்பன சாஸ்திரம்’ என்கிற கனாநூல்.

இந்தப் புத்தகத்தை அவர் உயிரோடு இருந்தபோதே என்னிடம் காண்பித்து “இதைப் படித்துப்பார். நீ கதை எழுத இதில் நிறைய விஷயம் கிடைக்கும்” என்பார். புரட்டிப் பார்ப்பேன். பக்கங்கள் பொலபொலவென்று உதிரும். அப்படியே வைத்துவிடுவேன்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

கவிராயர் பக்கம்“சொப்பனச் சாஸ்திரம் என்றால் என்ன அர்த்தம்?” என்று அப்பாவிடம் கேட்டேன்.

“கனவுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து அந்தக் காலத்தில் ஓலைச்சுவடியில் எழுதியதைக் காகிதத்தில் எழுதிச் சரசுவதி மகால் நூலகத்தில் வைத்திருந்தார்கள். மகாராஜா சரபோஜி இந்தப் புத்தகத்தை அடிக்கடி தருவித்துப் படிப்பாராம்”

“அது எப்படி உங்களுக்குத் தெரியும்?”

“என் தகப்பனார் – அதான்டா உன் தாத்தா சரசுவதி மகாலில் காப்பியிஸ்டாக அதாவது பழைய தெலுங்கு கிரந்தங்களில் இருந்து பழைய செய்யுள்களைக் காகிதத்திற்குப் படியெடுக்கும் வேலை பார்த்தார்…. அவர் இப்படி அரண்மனை விஷயங்கள் ஏராளமாகச் சொல்லுவாராம்…”

“இந்தப் பழைய கந்தாயங்களைக் கட்டி கொண்டு அழுவதை விட்டுவிட்டு உருப்படியாக ஏதாவது செய்வதுதானே?” என்று அவரிடம் கேட்டேன்.

“இவை எல்லாம் நல்ல உருப்படிகள்” என்று சொல்லிச் சிரித்தார் அப்பா.

“சிக்மண்ட் பிராய்டு” என்ற அறிவியல் அறிஞர் ”கனவுகள் என்பவை மனதின் நிறைவேறாத ஆசைகள்” என்கிறார்.

மற்றொரு அறிஞர் ”மனம் ஒரு கலைடாஸ்கோப்” என்கிறார். இதில் ”நம் பார்வையில் எண்ணத்தில் படுகிற துண்டு துண்டான கண்ணாடிச் சில்லுகள் மாதிரியான காட்சிகளை வைத்து மூளை போட்டுப் பார்க்கும் அழகான கோலங்கள்” என்கிறார் ஞானி நீட்ஷே.

எகிப்தியர்கள் ”கனவுகளைக் கடவுளிடம் இருந்து வரும் செய்தி” என்கிறார்கள். சீன மரபு கனவுகளை ஆன்மாவின் அனுபவங்கள் என்கிறது….” என்று அப்பாவிடம் குட்டி லெக்சர் அடித்தேன்.

“இந்த ஆராய்ச்சியெல்லாம் இருக்கட்டும். நான் ஒரு வேலை செய்து வருகிறேன்”

“என்ன வேலை?”

“கனவுகளை எல்லாம் அதாவது என் தூக்கத்தில் வருகிற கனவுகளை நோட்டுப் புத்தகங்களில் எழுதி வருகிறேன்”

“எதற்காக?”

“இரவில் கண்ட கனவைப் பகலில் படிக்கும்போது ஒரு வித்தியாசமான அனுபவமாக அது இருக்கும். என் நண்பர்களிடம்கூடக் காட்டியது இல்லை. நீ படிக்கிறாயா?”

அருகில் இருந்த பழங்கால மரப்பெட்டியில் இருந்து அந்த நோட்டுப் புத்தகங்களை எடுத்துப் போட்டார். நுணுக்கி நுணுக்கி தேதி வாரியாக அவர் எழுதி வைத்திருந்த கனவுகளைப் பார்த்துத் திகைத்துப் போனேன்.

“கொஞ்சம் இருங்கள். முதலில் சொப்பனச் சாஸ்திரம் என்ன சொல்கிறதென்று பார்த்துவிடலாம்.”

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

புத்தகத்தைப் புரட்டினேன். மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்ட அந்தக் கால விஷயங்கள் பாதிக்குமேல் புரியவில்லை. கனவுகளுக்கான பலன்கள் விசித்திரமாக இருந்தன.

தஞ்சாவூர் கவிராயர்
தஞ்சாவூர் கவிராயர்

கனவில் அழுக்கு மூட்டை கண்டால் பெரும் செல்வம் வந்து சேரும்.

எள்ளைக் கனவில் கண்டால் மரணம் நிச்சயம்.

பிணத்தைக் கனவில் கண்டால் பெருஞ்செல்வம் வந்து சேரும்.

மீன்களைக் கனவில் காண்பது பணவரவு. செல்வம் சேர்வதைக் குறிக்கும்.

காளியைக் கனவில் கண்டால் அரசர்களிடையே பெரும் போருண்டாகும்.

நாரை பறப்பதுபோல் கனவு கண்டால் மனக்கவலைகள் மறைந்து போகும்.

புத்தகத்தை மூடிவிட்டு அப்பாவின் கனவு நோட்டுகளைப் புரட்டினேன்.

விசித்திரமான கனவுகள் விபரீதமான காட்சிகள்.

ஒரு சாலையைக் கடக்கக் காத்திருக்கிறேன். இருட்டு. தூரத்தில் ஒரு லாரி வந்து கொண்டிருக்கிறது.

லாரியின் பின்புறம் சீராக வெட்டப்பட்ட விறகுக் கட்டைகள் அடுக்கப்பட்டிருப்பது தெரிகிறது. லாரி நெருங்கி வருகிறது. அதன் உறுமல் கேட்கிறது.

லாரி போகட்டும் என்று காத்திருக்கிறேன்.

லாரி மிகநெருங்கி வந்ததும் என்னைக் கடந்து போகவில்லை. அப்போதுதான் கவனித்தேன். லாரியின் முகப்பில் LASTVAN என்று எழுதியிருக்கிறது. லாரி என்னைக் கடந்து போகவில்லை. ஆனால், உறுமிக்கொண்டே நகர்கிறது. அவ்வளவுதான்.

அடுத்த கனவு.

கொல்லைப்புறம் நின்ற பெரிய வாதாமரம் வேரோடு சாய்ந்து வீட்டின்மேல் விழுகிறது. நல்லவேளையாக வீட்டிற்கு ஒன்றும் ஆகவில்லை.

அதுதான் கடைசி பதிவு. தேதி 11.2.2006 அப்பா மறுநாள் 12.2.2006 அன்று மாலை இறந்துபோனார்.

இனி அப்பாவின் கனவு நோட்டைப் படிக்கவும் வேண்டாம். அது பலிக்கவும் வேண்டாம்!

–              தஞ்சாவூர்க் கவிராயர்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.