விருது என் குடும்பத்தின் பசியைப் போக்கவில்லை !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

நான் சுந்தரையர். தேசிய விருது பெற்ற பாடகர், திரை நடிகர். திரைப்படப் பாடலுக்காக தேசிய விருது பெற்ற முதல் தமிழன் என்ற பெருமை எனக்கு உண்டு. இதுவரை தமிழ் திரைப்படப் பாடலுக்கு நான்கு ஆண் பாடகர்கள் தேசிய விருதை வாங்கியிருக்கிறார்கள். எஸ். பி. பி, சங்கர் மகாதேவன், உன்னிகிருஷ்ணன் மற்றும் நான்.

ஃபிலிம்பேர், ரேடியோ மிர்ச்சி உள்ளிட்ட விருதுகளையும் பெற்றிருக்கிறேன். ஆனால் இன்று அந்த விருதுகளுடன் ஒரு சிறிய வாடகை வீட்டில் என் மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வறுமையில் வாழ்கிறேன். விருது என் குடும்பத்தின் பசியைப் போக்கவில்லை; என் குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றவில்லை.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

தருமபுரி மாவட்டத்தில் பிறந்த நான், முப்பது ஆண்டுகளாக வீதி நாடகங்கள், அரசு கலை நிகழ்ச்சிகள், சமூக விழிப்புணர்வுப் பணிகள் எனக் கலைத்துறையில் தொடர்ந்து சேவை செய்தவன். கலை மீதான காதலால் பல நேரங்களில் ஊதியமின்றி உழைத்திருக்கிறேன். நடிப்பும் பாடலும் மட்டும்தான் எனக்குத் தெரிந்தவை. கலையை நம்பியே வாழ்க்கையை அமைத்துக்கொண்டவன்.

சுந்தரையர்
சுந்தரையர்

2016-ஆம் ஆண்டில் ராஜு முருகன் இயக்கிய ஜோக்கர் திரைப்படத்தில் ஷான் ரோல்டன் இசையில் “ஜாஸ்மின்”பாடலைப் பாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் பாடிய அந்த முதல் பாடலுக்கே தேசிய விருது கிடைத்தபோது, என் வாழ்க்கை மாறும் என்றும், தொடர்ந்து பாடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் நம்பினேன்.

ஆனால் விருது கிடைத்து பத்து ஆண்டுகள் கடந்தும், பத்து பாடல்கள் கூட எனக்குக் கிடைக்கவில்லை. கிடைத்த பாடல்களுக்கோ உரிய ஊதியமும் கிடைக்கவில்லை.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

பாடல் வாய்ப்புகள் இல்லாததால் திரை நடிகனாக மாறி குடும்பத்தைக் காப்பாற்ற முயன்றேன். அப்படிக் கிடைத்த வாய்ப்புதான் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த வேட்டையன் திரைப்படம். அதில் என் நடிப்பைப் பாராட்டி ரஜினிகாந்த் அவர்கள் என்னை அழைத்துப் பேசினார். அந்தப் பாராட்டு புதிய நம்பிக்கையைத் தந்தது. ஆனால் அதன் பிறகும் நிலையான வருமானமோ வாய்ப்புகளோ எனக்குக் கிடைக்கவில்லை.

உப்பு போட்ட ரேஷன் அரிசியுடன் நாட்களை நகர்த்த வேண்டிய நிலை. பாடலும் நடிப்பும் என்னைக் காப்பாற்றும் என்கின்ற நம்பிக்கை சிதையத் தொடங்கியிருக்கிறது.

நான் இசைக் கல்லூரியில் மூன்றாண்டு “இசைக் கலைமணி”பட்டயப் படிப்பையும், இசை ஆசிரியர் பயிற்சியையும் முடித்திருக்கிறேன். அதோடு சிறந்த பாடகனுக்கான தேசிய விருதையும் பெற்றிருப்பதால் அரசு இசை ஆசிரியர் பணி கிடைக்கும் என்று அதற்காக கடுமையாக முயற்சி செய்தேன். நேரடியாக மனுக்கள் அளித்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை.

தற்போது மீண்டும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களுக்கும் தபாலில் மனு அனுப்பியிருக்கிறேன்.

தயவுசெய்து என் நிலைமையை, எனது கோரிக்கையை அவர்களிடம் கொண்டு சேர்க்க உதவுங்கள்.

சுந்தரையர்

நடிகர் | தேசிய விருது பெற்ற பின்னணிப் பாடகர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.