திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அவசரம் காட்டியதா? மறுபரிசீலனை கோரும் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை!
இந்த வேண்டுகோள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில், மாண்புமிகு இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னும், இந்திய மக்கள் முன்னும் வைக்கப்படுகிறது.
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதால், மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதில் அதிக ஆர்வம் கொண்ட ஒரு குழுவின் அழுத்தத்தின் காரணமாக, ஒரு பக்கம் சார்ந்து நிற்க அரசை நிர்ப்பந்திக்கக் கூடாது. திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் விவகாரம் தொடர்பாக இந்திய உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய இடைக்கால உத்தரவு, இயற்கை நீதியின் கோட்பாடுகளுக்கு எதிரானது. மேலும் சில சுயநல சக்திகளின் தூண்டுதலால் கோவில் சடங்குகளில் தேவையற்ற தலையீடு செய்வதாகவும் அமைகிறது.
வழக்கு இறுதியாக முடிவு செய்யப்படும் வரை தற்போது உள்ள நிலையை அப்படியே பராமரிப்பதற்காவே இடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. ஆனால் இந்த வழக்கில் உள்ள இடைக்கால உத்தரவு, ஒரு மதச் சடங்கில் புதிய நடைமுறையை அனுமதிப்பதன் மூலம் இருக்கும் நடைமுறையை மாற்றுவது மிகவும் விசித்திரமானது.
ஒரு புதிய நடைமுறையை, அதிலும் நம்பிக்கை சார்ந்த வழிபாட்டு நடவடிக்கையில் புதிய நடைமுறையை, இதுவரை எந்த நீதிமன்றமும் இடைக்கால உத்தரவு மூலம் ஏற்படுத்தியது இல்லை.
நீதிமன்ற நடவடிக்கையில் இதுவரை இல்லாத ஒன்று திருப்பரங்குன்றம் வழக்கில் நடந்துள்ளது நியாயமற்றது.
ஒரு நீதிமன்றம் பொதுவாக இத்தகைய அவசர உத்தரவுகளை பிறப்பிப்பதைத் தவிர்க்கும்.
ஒரு நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மத்திய படைகளை பயன்படுத்த அனுமதிப்பது, கூட்டாட்சி அரசியல் அமைப்பின் கோட்பாடுகளுக்கு எதிரானது. இது தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை நீதிமன்றம் நம்பவில்லை என்பதையே குறிக்கிறது.
நீதிமன்றத்தின் உத்தரவு, அரசியலமைப்பின் 25 மற்றும் 26-வது பிரிவுகளின் கீழ் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறப்பட்ட வாதத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.
அப்படியானால், அனைத்து கோவில்களின் கருவறைக்குள்ளும் ஒவ்வொரு தனிநபரும் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். அடிப்படை உரிமைகள் தனிநபர்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டவை; ஒருவர் தான் விரும்பும் முறையில் வழிபட உரிமை உண்டு. ஆனால் மற்றொருவர் அதே உரிமையை அனுபவிப்பதைத் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. மத நடைமுறைகள் என்ற பெயரில், பெரும்பான்மை மக்கள் கருவறைக்குள் செல்வதைத் தடுக்க முடியாது. 25 மற்றும் 26-வது பிரிவுகளை ஒரு குழுவிற்கு ஒரு விதமாகவும், மற்றொரு குழுவிற்கு வேறு விதமாகவும் பயன்படுத்த முடியாது.
இந்த வழக்கில், மனுதாரர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படவில்லை; மாறாக, நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு அமல்படுத்தப்பட்டால், இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பே மாற்றப்பட்டு விடும்.
கார்த்திகை மாதத்தில் கார்த்திகை விளக்கு ஏற்றும் சடங்கான கார்த்திகை தீபம், நூற்றாண்டுகளாக திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தான் ஏற்றப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் அந்த ஏற்றுதலைக் காண கூடுகிறார்கள். திருப்பரங்குன்றம் மக்களுக்கும், பக்தர்களுக்கும் அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.
ஒரு இடைக்கால உத்தரவு பாரம்பரிய விளக்கேற்றுதல் நடைபெற மட்டுமே அனுமதிக்க முடியும்; அது புதிய நடைமுறையை அனுமதிக்க முடியாது. அது யாருக்கும் நிவாரணம் அல்ல; மாறாக, உண்மையான பக்தர்களுக்கு அது ஒரு தொல்லையே.
சுயநல நோக்கமும், உள்நோக்கமும் கொண்ட ஒரு குழு, கார்த்திகை தீப சடங்கோடு சற்றும் தொடர்பில்லாத ஒரு குறிப்பிட்ட தூணில் விளக்கேற்ற உரிமை கோருகிறது.
இதுவரை நடைமுறையில் இல்லாத ஒரு தூணில் விளக்கேற்ற அனுமதிப்பதன் மூலம், மாண்புமிகு இந்திய உச்ச நீதிமன்றம் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறது. இது உண்மையான பக்தர்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி.
இதுவரை இப்படி ஒரு நடைமுறை இல்லாத போது, நீதிமன்றம் ஏன் புதிய ஒன்றை அனுமதிக்க வேண்டும்? புதிய நடைமுறையை அனுமதித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றத்திற்கு என்ன அவசரம்?
கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்ட ஒரு சடங்கை நீதிமன்றம் இவ்வளவு அவசரமாக கையாள முடியாது. ஒரு நடைமுறை ஒரு முறை அனுமதிக்கப்பட்டு விட்டால், அது முற்றிலும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது என்பதால், அதை திரும்பப் பெறுவது கடினமாகி விடும்; எதிர்காலத்தில், இந்தப் பிரச்சனை உண்மைகளின் அடிப்படையில் அல்லாமல், உணர்ச்சிகளின் அடிப்படையிலேயே அணுகப்படும்.

ஒரு குறிப்பிட்ட குழு கோருவது போன்ற இந்தப் புதிய நடைமுறை, கடவுள் பக்தியைக் காட்டுவதை விட, குழப்பம் விளைவிப்பதையே நோக்கமாகக் கொண்டது. சுயநலம் கொண்டவர்கள் மக்களை உணர்ச்சிவசப்பட வைத்து, அவர்களின் அதிகரித்த உணர்ச்சிகளைப் பயன்படுத்தி அமைதியைக் குலைக்க விரும்புகிறார்கள்.
மாண்புமிகு உச்ச நீதிமன்றம் 2026 நவம்பர் மாதம் 20 தேதி அன்று பிறப்பித்த தனது இடைக்கால உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது. மேலும் இதுவரை நடைமுறையில் இல்லாத ஒரு தூணில் எந்தக் குழுவோ அல்லது தனிநபரோ விளக்கேற்ற அனுமதிக்கக் கூடாது. திருப்பரங்குன்றம் கோவிலில் கார்த்திகை தீபத்திற்காக பாரம்பரியமாக இதுநாள் ஏற்றப்படும் இடத்தில் மட்டுமே கார்த்திகை விளக்கு ஏற்றப்பட வேண்டும்.
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க நீதிமன்றங்களை சிலர் தவறாகப் பயன்படுத்த முயல்வதற்கு எதிராக குரலெழுப்புமாறும், இதுவரை நடைமுறையில் இல்லாத ஒரு தூணில் ஒரு குழு விளக்கேற்ற அனுமதிக்கும் நீதிமன்ற இடைக்கால உத்தரவைத் திரும்பப் பெறுமாறு உச்சநீதிமன்றத்தை வலியுறுத்துமாறும் இந்திய மக்களை பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.
நீதிமன்றத்தை பிரிவினைவாத சக்திகள் தங்களின் தீய நோக்கத்திற்கு பயன்படுத்த முற்படும் போது, இந்திய அரசியல் கட்சிகள் அமைதி காக்காமல், உச்சநீதிமன்றத்தை அணுகி நீதிமன்றத்தின் முடிவை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை வைத்து, புதிய நடைமுறை எதுவும் அனுமதிக்கப்படாமல், அமைதியான சூழல் தொடர்ந்திட தங்களின் கடமையை ஆற்றிட வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.
பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு
பொதுச் செயலாளர்,
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை (SPCSS-TN)






Comments are closed, but trackbacks and pingbacks are open.