40 நிமிடப் பேச்சு! கிறுகிறுக்க வைத்த லியோனி மகன்!
பட்டிமன்றப் புகழ் & திமுக விஐபி திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் ஹீரோவாக நடித்து, வரும் 27-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகிறது ‘டெலிவரி பாய்’ என்ற படம். ஹீரோயினாக பிரிகிடா சாகா, முக்கிய கேரக்டரில் ராதிகா சரத்குமார், செகண்ட் ஹீரோவாக துஷ்யந்த் உட்பட பலர் நடித்துள்ளனர். நாமக்கல் தொகுதியின் திமுக எம்.பி. வி.எஸ்.மாதேஸ்வரன் டெலிவரி பாயை தயாரித்துள்ளார். நானி டைரக்ட் பண்ணியுள்ளார்.
படத்தின் டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நவம்பர் 20-ஆம் தேதி நடந்தது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் தன்ஞ்செயன், கண்ணன் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
“இந்தப் படத்திற்காக எனது மகனும் படக்குழுவும் கடுமையாக உழைத்துள்ளனர். மீடியாக்கள் நல்லாதரவு தரவேண்டும்” என மிகவும் சுருக்கமாகப் பேசினார் லியோ சிவக்குமாரின் தாயார் அமுதா லியோனி.
படத்தின் ஹீரோயின் மற்றும் நடிகர்கள், டெக்னீஷியன்கள் இரண்டே வரிகளில் பேசி அமர்ந்தனர்.
மைக் முன் வந்த லியோ சிவக்குமார், “நானும் டைரக்டர் நானியும் பத்து வருட நண்பர்கள். இந்தக் கதையை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பல தயாரிப்பாளர்களிடம் சொல்லி, எதுவும் நடக்கவில்லை. இந்த நேரத்தில் தான் அண்ணன் மாதேஸ்வரன் எங்களுக்கு உதவ முன்வந்து படத்தைத் தயாரித்துள்ளார்” என ஆரம்பித்தவர், ”எஸ்.எஸ்.எல்.சியில் 430 மார்க் வாங்கினேன், ப்ளஸ் டூவில் இத்தனை மார்க் வாங்கினேன். இன்ஜியரிங் காலேஜில் அரியர்ஸ் வச்சு பாஸ் பண்ணினேன், ஜார்கண்ட் மாநிலத்தில் நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை பார்த்தேன். அப்பெல்லாம் நான் சிவக்குமார் தான். ஆனா சினிமாவுக்கு வந்ததும் எங்க அப்பா பெயர் சேர்ந்தது. இனிமே என்னை தனியா அடையாளப்படுத்துங்க” இப்படி பழைய கதைகளையெல்ல்லாம் சொல்லி, அதுக்கப்புறம் படத்தின் ஹீரோயின், ஸ்டண்ட் மாஸ்டர், கேமராமேன், மியூசிக் டைரக்டர், எடிட்டர் என அனைவரின் பெயரையும் சொல்லி, அவர்கள் எப்படி வேலை பார்த்தார்கள் என்பதையும் சொல்லி, அப்புறம் அவரின் ஃபிரண்ட் இளங்கோவைப் பற்றியும் சொல்லி… இப்படி பலவகைகளிலும் 40 நிமிடங்களுக்கு மேல் பேசி அரங்கில் உள்ளவர்களை கிறுகிறுக்க வைத்தார் லியோ சிவக்குமார்.
அதன் பின் தான் சிறப்பு விருந்தினர்களுக்கும் லியோ சிவக்குமாரின் அப்பா லியோனிக்கும் மைக் கிடைத்தது..
“வாரத்திற்கு நான்கு படங்களை மட்டும் ரிலீஸ் பண்ணுங்கன்னு தயாரிப்பாளர்களிடம் சொல்லிக்கிட்டே இருக்கேன். யாரும் கேட்குற மாதிரி தெரியல. இப்படியே போனா ரொம்ப கஷ்டம்”என்றார் தனஞ்செயன்.
“மேடை நாடகங்களில் அதிகமாக நடிச்சிருக்கேன். அரசியல் பயணத்தால் அதை நிறுத்திட்டேன். இப்ப இந்தப் படத்தில் ஒரு கேரக்டரில் நடிச்சிருக்கேன்” என்றார் தயாரிப்பாளர் மாதேஸ்வரன்.
வழக்கம் போல் ஜம்பம் அடித்தார் கண்ணன் ரவி.
தனது மகனுக்கு மீடியாக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்தார் திண்டுக்கல் லியோனி.
— ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.