Friday, November 20, 2026 | 9:50 PM IST

OUT OF COURT SETTLEMENT – ஆளைப் பிடித்து ஜெயிலில் போடுங்க !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

நியோமேக்ஸ் வழக்கில், நீதிமன்றத்திற்கு வெளியே செட்டில்மெண்ட் என்பதாக பேசும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்களை உடனடியாக சிறையிலடைக்கும்படி நீதியரசர் உத்தரவு பிறப்பித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

மிகவும் சிக்கலான வழக்கை நீதிமன்றம் அதிமுக்கியத்துவம் கொடுத்து, தீர்வை நோக்கி நகர்த்தி செல்லும் நிலையில் நீதிமன்றத்தின் சட்டரீதியான நடவடிக்கைக்கு பல்வேறு வகைகளில் சீர்குலைக்கும் நடவடிக்கையில் சிலர் தொடர்ந்து ஈடுபட்டு வருவது பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த பின்னணியில்தான் இப்படி ஒரு உத்தரவு வெளியாகியிருக்கிறது.

நவம்பர் – 20 ஆம் தேதியன்று நடைபெற்ற விசாரணையின் பெரும்பகுதியை விஷால் ப்ரோமோட்டர்ஸ் விவகாரம் எடுத்துக் கொண்டது. நியோமேக்ஸ் நிறுவனத்துடனான விஷால் ப்ரோமோட்டராஸின் வணிகரீதியான ஒப்பந்தங்களை மீறியதாக இருதரப்பிலும் ஆவணங்களின் அடிப்படையிலான விவாதங்கள் நடைபெற்றது. சொர்ணபூமி ஹில்டாப் மற்றும் அட்வெண்சர் பார்க் அமைப்பது தொடர்பாக இருதரப்பிலும் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தமே தற்போது சர்ச்சையாகியிருக்கிறது. விஷால் ப்ரோமோட்டர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் இளங்கோவனும் நியோமேக்ஸ் துணை நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவர் என்பதும்; அவரும் குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார் என்பதிலிருந்தும் விஷால் ப்ரோமோட்டர்ஸ் தொடர்பான சொத்துக்கள் அனைத்தையும் அட்டாட்ச்மெண்ட் செய்து ஏலத்துக்கு கொண்டுவர வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் முன்வைக்கும் கோரிக்கையாக இருக்கிறது.

தேவக்கோட்டையை சேர்ந்த முத்துக்குமார் மற்றும் கபில் ஆகியோர் நியோமேக்ஸ் நிறுவனம் வழக்கில் சிக்கிய காலத்திற்கு பிறகும் தங்களது சொத்துக்களை விற்ற விவகாரத்தில், விற்ற சொத்துக்களின் மதிப்பிலான பணத்தை நீதிமன்றத்தில் செலுத்தும்படி டான்பிட் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் உத்தரவிட்டிருந்தார். அதில் விலக்கு கேட்டு உயர்நீதிமன்றத்தில் அவர்கள் தரப்பில் முறையிட்டிருந்த நிலையில், பணமாக செலுத்தவதற்கு பதிலாக அதற்கு இணையான சொத்துக்களையாவது வழங்குமாறு தளர்வை வழங்கியிருந்தது உயர்நீதிமன்றம். மேலும், இதனை தவறும்பட்சத்தில் பிணையை ரத்து செய்யுமாறும் உத்தரவிட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில், நியோமேக்ஸ் நிறுவனத்திடமிருந்து அதன் இயக்குநர்களாக அவர்கள் எழுதி வாங்கியிருந்த சொத்துக்களையே மீண்டும் சமர்ப்பிப்பதற்கும் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில் ஆட்சேபணையை தெரிவித்திருக்கிறார்கள்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இதுவரையிலான ஏலத்தில் பங்கேற்று இடங்களை  தேர்வு செய்தவர்கள் எம்.எஸ்.டி.சி. நிறுவனத்துக்கு பணம் செலுத்தாதவர்கள் மற்றும் பாண்டு மதிப்பைவிட கூடுதலான தொகைக்கு ஏலம் எடுத்தவர்கள் அதன் வித்தியாச தொகையை செலுத்தாதவர்களின் ஏலத்தை ரத்து செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில், இதுபோன்ற ஏல நடவடிக்கைகளை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில் வலியுறுத்துகிறார்கள். குறிப்பாக, இதுவரையில் யாரெல்லாம் ஏலத்தில் பங்கெடுத்து எந்தெந்த இடங்களை ஏலத்தில் எடுத்தார்கள் என்ற விவரத்தை வெளியிட வேண்டும் என்பதாகவும் கோரிக்கையை முன்வைக்கிறார்கள்.

நிறைவாக, அரசு தரப்பில் உருவாக்கிய சாஃப்ட்வேரின் செயல்பாடுகள் குறித்து பரிட்சார்த்த முறையில் சோதித்து பார்க்கப்பட்டதாகவும்; அதிலிருந்து எழுந்த சில தொழில்நுட்ப சிக்கல்கள் குறித்து எல்காட் நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றிருப்பதாகவும் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அடுத்த விசாரணையில் எல்காட் அதிகாரிகளையும் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நீதியரசர் குறிப்பிட்டிருக்கிறார்.

குறிப்பாக, 500-க்கும் மேற்பட்ட திட்டங்களுடன் சிக்கலான செயல் நடைமுறைகளுடன்கூடிய நியோமேக்ஸ் வழக்கு விவகாரத்தில், முழுமையான அம்சங்களை உள்ளடக்கிய சாஃப்ட்வேர் இல்லாமல், புகார்களின் உண்மைத்தன்மையை உறுதிபடுத்தும் பணியைக்கூட சிக்கலின்றி கடக்க முடியாது என்பதை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில் முன்வைக்கிறார்கள்.

சாஃப்ட்வேர் விவகாரத்தில் நீதிமன்றம் என்ன முடிவை எடுக்கப்போகிறது? புகார்களை எப்படி சரிபார்க்கப் போகிறார்கள்? பாண்டுகளை சரிபார்க்கும் கமிட்டியை எப்படி – எப்போது அமைக்கப்போகிறார்கள்? என்பது உள்ளிட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வழக்கின் விசாரணை டிசம்பர்-3 அன்று ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

–     அங்குசம் புலனாய்வுக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.