பத்திரிகையாளர் என்ற பெயரில் பள்ளி தலைமை ஆசிரியருக்கு மிரட்டலா ?
திருச்சி துறையூரில் பத்திரிகையாளர் என்ற பெயரில், அரசுப்பள்ளிக்குள் அத்துமீறு நுழைந்து ஆசிரியர்களிடம் மிரட்டும் தொனியில் பேசிய; பள்ளி குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சம்பந்தபட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் போலீசில் புகார் அளித்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருச்சி – துறையூர் அருகே சித்திரப்பட்டியில் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு நவம்பர்-20 ஆம் தேதி மதியம் சுமார் 12.30 மணியளவில், தன்னை பத்திரிகையாளர் என்பதாக அறிமுகப்படுத்திக்கொண்டு ஒருவர் வந்திருக்கிறார். பணியில் இருக்கும் ஆசிரியர்களிடம் தலைமை ஆசிரியரின் தொலைபேசி எண் கேட்டிருக்கிறார். அவருடைய பெயரையோ, பணியாற்றும் பத்திரிகையின் பெயரையோ தெரிவிக்காமல் பொதுவில் ரிப்போர்ட்டர் என்பதாகக்கூறியதால், ஆசிரியர்களும் தலைமையாசிரியரின் தொலைபேசி எண்ணை வழங்க மறுத்துள்ளனர்.
இந்நிலையில், பள்ளி மாணவர்களை தூய்மைப்பணியில் ஈடுபடுத்தி வருவதாகவும்; பள்ளி நேரத்திற்கு முன்பாகவே மாணவர்களை அனுப்பி விடுவதாகவும்; பள்ளி தலைமை ஆசிரியரும் பள்ளி நேரத்திற்கு முன்பே பள்ளியை விட்டு சென்றுவிடுவதாகவும் குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது.
வீடியோவில் தோன்றும் மாணவி தங்களது பள்ளி மாணவியே அல்ல என்றும்; தூய்மைப் பணியில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்துவதில்லை என்றும்; வழக்கமாக பள்ளி முடியும் நேரத்திற்கு முன்பாக மாணவர்களை அனுப்பியதில்லை என்பதாகவும் போலீசுக்கு அளித்துள்ள புகாரில் மறுத்திருக்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியர்.
இந்த விவகாரம் குறித்து, பள்ளித் தலைமை ஆசிரியரிடம் அங்குசம் சார்பில் பேசியபோது, “கல்வித்துறை அதிகாரிகளின் முன் அனுமதி இல்லாமல் பேச முடியாது” என்பதாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
பள்ளித்தலைமை ஆசிரியரின் பெயரில் துறையூர் போலீசில் அளித்துள்ள புகாருக்கு, புகார் ரசீது வழங்கியிருக்கிறார்கள்.
வீடியோவில் தோன்றும் மாணவி அதே பள்ளியை சேர்ந்தவர்தானா? பள்ளி மாணவர்கள் தூய்மைப்பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்களா? பள்ளி நேரத்திற்கு முன்பே மாணவர்கள் அனுப்பி வைக்கப்படுகிறார்களா? என்பதெல்லாம் போலீசு மற்றும் கல்வித்துறை அதிகாரிகளின் விசாரணைக்குட்பட்ட விவகாரங்களாக அமைந்திருக்கின்றன. அவர்கள்தான் இதனை தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
அதேசமயம், தனது பெயரைக்கூட சொல்ல மறுத்து தான் பணியாற்றும் செய்தி ஊடகத்தின் பெயரையும் மறைத்து பள்ளிக்கு வந்து சென்ற நபர் உண்மையிலேயே பத்திரிகையாளர்தானா? இல்லை, சமூக ஆர்வலர் என்ற பெயரில் மிரட்டி பணம் பறிக்கும் ஆசாமியா? என்பதும் போலீசாரின் தொடர் விசாரணையின் முடிவில்தான் தெரியவரும்.
— ஜோஸ்






Comments are closed, but trackbacks and pingbacks are open.