Saturday, November 28, 2026 | 2:19 PM IST

மைதானம் இனி மக்களுக்கல்ல… முதலாளிகளுக்கு! தனியார் வசமாகும் 95 விளையாட்டு அரங்குகள்!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

இதுவரையில் சென்னை மாநகராட்சியின் வசம் இருந்து வந்த 95 விளையாட்டு அரங்கங்களை மூன்று ஆண்டுகளுக்கான ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்க டெண்டர் கோரப்பட்டுள்ள விவகாரம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தற்சமயம் சென்னை மாநகராட்சியின் வசம் 253 விளையாட்டு மைதானங்கள்; 316 சிறார் விளையாட்டு மைதானங்கள்; 232 ஆண்கள் உடற்பயிற்சி கூடங்கள்; 60 பெண்கள் உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்டு 1343 விளையாட்டு மைதானங்கள் மற்றும் உள் அரங்கங்கள் இருந்து வருகிறது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

மைதானம் இனி மக்களுக்கல்ல...இவற்றிலிருந்து முதற்கட்டமாக, 51 பேட்மிட்டன் மைதானங்கள்; 19 டென்னிஸ் மைதானங்கள்; 23 ஸ்கேட்டிங் மைதானங்கள்; 2 டேபிள் டென்னிஸ் மைதானங்கள் உள்ளிட்டு 95 இடங்களை தனியாரிடம் ஒப்படைக்கப்போகிறது, சென்னை மாநகராட்சி.

மாநகராட்சியின் வருவாயைப் பெருக்குவதற்காக இந்த நடவடிக்கையாம். அடுத்து, மாநகராட்சி பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் சில விரும்பத்தகாக நிகழ்வுகள் நடப்பதாகவும், அதனை கட்டுப்படுத்தும் நோக்கிலான முயற்சி என்றும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கிறார்கள்.

சாமானியன் கால் எடுத்தே வைக்க முடியாது :

சென்னை மாநகராட்சியின் முக்கியமான 10 இடங்களில் அமைந்த 17 டென்னிஸ் மைதானங்களுக்கான ஆண்டு கட்டணமாக தற்போது ரூ 34.85 இலட்சமாக இருந்து வந்த நிலையில், தற்போது அவற்றுக்கு 111.20 இலட்சம் அடிப்படை ஏலத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இது தற்போதைய கட்டணத்தைவிட 219% அதிகம்.

அதேபோல, 24 முக்கிய இடங்களில் அமைந்த 42 உட்புற (indoor) பேட்மிட்டன் மைதானங்களுக்கான தற்போதைய ஆண்டுக்கட்டணம் ரூ 77.28 இலட்சமாக இருந்து வரும் நிலையில், அவற்றுக்கான அடிப்படை ஏலத்தொகையாக 155.56 இலட்சமாக நிர்ணயித்திருக்கிறார்கள். அதாவது, அப்படியே இருமடங்கு உயர்த்தியிருக்கிறார்கள்.

மைதானம் இனி மக்களுக்கல்ல...அதிலும் குறிப்பாக, அண்ணா நகர் AE பிளாக்  ரூ.4.10 இலட்சத்திலிருந்து ரூ. 15.50 லட்சமாகவும்; பெசண்ட் நகர் 3-வது அவென்யூ ரூ.6.15 இலட்சத்திலிருந்து ரூ. 25 இலட்சமாகவும்; ஜெயச்சந்திரன் பூங்கா ரூ 2.05 லட்சத்திலிருந்து ரூ 9.50 இலட்சமாகவும்; அண்ணா நகர் K பிளாக் ரூ 6.15 இலட்சத்திலிருந்து ரூ 19 இலட்சமாகவும்; ஜவஹர் நகர்  1-வது சர்குலர் சாலை ரூ 3.68 இலட்சத்திலிருந்து  ரூ13.5 இலட்சமாகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது.

ஏலத்தில் பங்கேற்கும் தனியார் நிறுவனங்கள் போட்டியை பொறுத்து இதைவிட கூடுதலான தொகை கொடுத்து ஏலத்தை எடுக்கும் வாய்ப்புகளே அதிகம். அவ்வாறு இத்தனை இலட்சங்களை கொட்டி ஏலத்தை எடுக்கும் தனியார் நிறுவனங்கள் நிச்சயம் சேவை மனப்பான்மையில் இயங்கப்போவதில்லை. ஏலத்தை எடுத்த கையோடு அவர்கள் முதலில் செய்யக்கூடிய காரியம் இத்தகைய மைதானங்களை பயன்படுத்துவோரிடமிருந்து நுழைவுக்கட்டணம், சேவைக்கட்டணம், பயிற்சிக்கட்டணம் என்ற பெயரில் பல்வேறு கட்டணங்களை நிர்ணயித்து எப்படியாவது போட்ட காசை வட்டியும் முதலுமாக சேர்த்து எடுத்துவிட வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கமாக இருக்குமேயொழிய, பாவம் ஏழைப்பட்ட பிள்ளைகள் விளையாடிவிட்டு போகட்டும் என்று ஒரு ஈ காக்கையைக்கூட இலவசமாக மைதானத்திற்குள் அனுமதிக்கப்போவதில்லை.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

சென்னையின் மாநகராட்சி மைதானங்களுக்கும் விளையாட்டிற்குமான பந்தம் தனித்துவமானது. அதிலும் பாரம்பரிய விளையாட்டுகளுக்கு பெயர் போனது வடசென்னை. இதுபோன்ற, மாநகராட்சியின் பராமரிப்பில் இருந்து வந்த விளையாட்டு மைதானங்களில் பயிற்சி பெற்று, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று ஒட்டுமொத்த தமிழகத்தின் பெருமை சேர்த்து, இந்தியாவின் அடையாளமுமாகவும் ஆன கண்ணகிநகர் கார்த்திகா, முல்லைநகர் நந்தகுமார் போன்ற விளையாட்டு வீரர்களை இனி ஒரு போதும் பார்க்க முடியாது.

தேசிய கால்பந்து அணியின் முன்னணி வீரரான நந்தகுமாரின் தந்தை சாதாரண ஆட்டோ ஓட்டுநர். கால்பந்து பயிற்சி எடுக்க மாதம் 10,000 பணம் கட்டியாக வேண்டுமென்ற நிர்ப்பந்தம் இருந்திருந்தால், இன்றைய சாதனை வீரர் நந்தகுமாரை தமிழகம் இழந்திருக்கும்.

முல்லை மலர் மோசமான முன்னுதாரணம் :

இதுபோன்ற, பொது விளையாட்டு வசதிகளைத் தனியார் வணிக நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் சென்னை மாநகராட்சியின் முடிவு ஒன்றும் புதிது அல்ல. இதற்கு முன்னர், 2019-ஆம் ஆண்டில் ‘முல்லை மலர் என்டர்பிரைசஸ்’ (Mullai Malar Enterprises) நிறுவனத்திடம்,  19 பேட்மிண்டன் மைதானங்கள், 16 ஸ்கேட்டிங் தளங்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட டென்னிஸ் மைதானங்களை தூக்கிக் கொடுத்தது.

முதலில், கட்டணம் செலுத்தாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நடைபயிற்சி உள்ளிட்டு பொது நோக்கத்திற்காக மைதானத்தை பயன்படுத்துவதற்கும்கூட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. போதுமான பயிற்சியாளர்களை நியமிக்காததன் காரணமாக, விளையாட்டு அரங்கங்களை பூட்டி வைத்தக் கொடுமையும் நடந்தேறியது.

மைதானம் இனி மக்களுக்கல்ல...அதாவது, மாநகராட்சி சொல்வதைப்போல விளையாட்டை ஊக்குவிப்பதான முயற்சியாக அல்லாமல், மைதானங்களை குத்தகைக்கு எடுக்கும் தனியார் நிறுவனங்களின் கல்லாப்பெட்டியை நிரப்புவதற்கான வழிமுறைகளாக மட்டுமே மாறிப்போயின. இவ்வாறு, பொது விளையாட்டு உள்கட்டமைப்பை உருவாக்கியதன் நோக்கமே சிதைக்கப்பட்டது. 2024 இல் முல்லைமலர் நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது, புதிய வடிவில் மீண்டும் அதே போன்றதொரு முயற்சியை சென்னை மாநகராட்சி மேற்கொண்டிருக்கிறது.

பொது ஒதுக்கீட்டு இடங்களுக்கும் குறி :

சென்னை மாநகராட்சியில் என்றில்லை. தமிழகம் முழுவதிலும் உள்ள விளையாட்டு மைதானங்கள் எதிர்கொள்ளும் அபாயமும் இதுதான். கோவை மாவட்டத்தில், கோவைப்புதூர் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான 10 ஏக்கர் காலியிடத்தில், எப்போதும், பொதுமக்கள், குழந்தைகள் விளையாட்டு வீரர்களால் நிரம்பி வழிந்த அந்த மைதானத்தை, 76 கோடிக்கு ஏலம் விட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. மக்களின் கடுமையான எதிர்ப்புகளால் பின்னர் அம்முயற்சி கைவிடப்பட்டது.

மைதானம் இனி மக்களுக்கல்ல...இதுபோல, புதிய மனைப்பிரிவுகளை உருவாக்கும்போது உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படும் பொது ஒதுக்கீட்டு இடங்களில் அமைந்த விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள் தொடர்ந்து குறி வைக்கப்படுகின்றன.

இவையெல்லாம் வருவாய் ஈட்டித்தரும் வணிகச் சொத்துகள் அல்ல. இவை பொது நிலத்தில், பொது வளங்களைப் பயன்படுத்தி, பொது மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட பொது விளையாட்டு வசதிகள். பொது மக்களுக்குச் சொந்தமானவை. சேரிப்பகுதியிலிருந்தும் சாதாரண, நடுத்தர குடும்பப் பின்னணியிலிருந்தும் தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களை உருவாக்கும் உலைக்களங்கள். அத்தகையோரின் உரிமையைப் பறித்து, பணம் படைத்தவர்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய வணிக மையங்களாக மாற்றப்படுவதை எப்படி சகித்துக்கொள்ள முடியும்?

—  அங்குசம் புலனாய்வுக்குழு.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.