திருச்சியில் போலிநகை கொடுத்து ஏமாற்றும் பலே கில்லாடிகள் சிக்கியது இப்படிதான்….!
திருச்சியில் போலிநகை கொடுத்து ஏமாற்றும் பலே கில்லாடிகள் சிக்கியது இப்படிதான்….!
திருச்சி ஸ்ரீரங்கம் மாணிக்கம் பிள்ளை தெரு பகுதியை சேர்ந்தவர் சந்திரா. இவர் கடந்த 6ம் தேதி காலை ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள காய்கறி சந்தைக்கு சென்றுள்ளார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த இரண்டு பெண்கள் எங்களுக்கு அவசரமாக பணம் தேவை இருக்கிறது. ஆகையால் நாங்கள் எங்களிடம் உள்ள தங்க நாணயத்தையும், நகைகளையும் அடகு வைத்து பணம் பெறலாம் என்று வந்தோம். ஆனால் இங்கே உள்ள அடகு கடைக்காரர்கள் யாருக்கும் எங்களை தெரியாத காரணத்தினால் அடகுக்கோ அல்லது விலைக்கு யாரும் எடுத்து கொள்ள மாட்டீகிறார்கள் என்று கூறி உள்ளனர்.
பின்னர் தங்களிடம் உள்ள தங்க நாணயத்தையும் மற்றும் 10 பவுன் நகையை வைத்துக் கொண்டு சந்திராவிடம் பத்தாயிரம் ரூபாய் பணம் கேட்டுள்ளனர். 10 பவுன் நகை என்றவுடன் சந்திராவும் என்னவென்றே தெரியாமல் கையில் பணம் இல்லாத காரணத்தினால் தான் அணிந்திருந்த 7 பவுன் நகையை கழட்டி அவர்களிடம் கொடுத்ததுடன் வீட்டிலிருந்த 4,000 ரூபாய் பணத்தையும் எடுத்து வந்து கொடுத்துள்ளார்.
பின்னர் அவர்கள் கொடுத்த நகையை அனைத்தையும் வீட்டிற்கு வந்து பார்த்து பின்னர் குடும்பத்தாரிடம் ஆலோசித்த போது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு நகைக் கடையில் சென்று நகையை பரிசோதித்தபோது அவை அனைத்தும் கவரிங் நகை என்று தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திரா இரண்டு நாட்கள் மன உளைச்சலில் திருச்சி மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அதன்பின் கடந்த 6ஆம் தேதி நடந்த சம்பவம் குறித்த புகாரினை ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையரிடம் அளித்துள்ளார்.
அதன்மூலம் புகாரை ஏற்ற காவல் உதவி ஆணையர் மகேந்திரன், ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் உமா சங்கரி தலைமையிலான தனிப்படை அமைத்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட நபர்கள் யாரென்று விசாரணையை தொடங்கினர். அதில் முதற்கட்டமாக சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் தரவு செய்தபோது அதில் இரண்டு பெண்களின் உருவம் சிக்கியது அதனை வைத்து புகார்தாரர் சந்திரா கூறிய அடையாளங்களை வைத்து சம்பந்தப்பட்டவர்கள் யார் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் தேடப்படும் குற்றவாளிகள் சேலம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியினை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் கடந்த 12/01/2021 சம்பந்தப்பட்ட குற்றவாளியை பிடித்து விசாரித்ததில் கண்டமங்கலம் பகுதியை சேர்ந்த இந்திரா (வயது- 30) என்றும், அவரது கூட்டாளி தலைமறைவாக உள்ளதாகவும் இருவரும் சேர்ந்து தான் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், தெரிவித்துள்ளனர்.
அதனடிப்படையில் தனிப்படை போலீசார் 7 பவுன் நகையை மீட்டு கொண்டு வந்தனர்.
அதன்மூலம் ஸ்ரீரங்க காவல் உதவி ஆணையர் சம்பந்தப்பட்ட நபர் மீது இந்திய தண்டனைச் சட்டம் IPC-420 வழக்கு பதிந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பாக மாநகர குற்றப்பிரிவு துணை காவல் ஆணையர் பேசியபோது..
திருச்சி மாநகரில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த குற்ற சம்பவங்களை மாநகர காவல் ஆணையரின் உத்தரவின்பேரில் குற்ற பிரிவு போலீஸார் விரைந்து முடித்து வருகிறார்கள். அதில் பல்வேறு வழக்குகளை தனிப்படை போலீசார் விரைந்து முடித்து தந்துள்ளனர். மாநகர பகுதியில் குற்ற சம்பவமிக்க பகுதிகளான ஸ்ரீரங்கம், கண்டோன்மெண்ட், உறையூர் பகுதிகளில் போலீசார் அதிதீவிரமாக பணியில் அமர்த்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அதில் குற்ற சம்பவம் வழக்குகள் சென்ற ஆண்டினை விட இந்த ஆண்டு 68 வழக்குகள் குறைவாக உள்ளன. அதேபோன்று வழிப்பறி வழக்குகள் சென்ற வருடம் 57 இருந்த நிலையில் தற்போது 22 குறைந்துள்ளது. மேலும் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை தனிப்படை போலீசார் ரகசிய உளவு பார்த்து வருகின்றனர். மீண்டும் பொதுமக்களுக்கு அவர்களால் பாதிப்பு ஏதும் ஏற்படுமாயின் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
குற்ற சம்பவங்களில் இளைஞர்கள் ஈடுபடுவது குறித்து பேசியபோது..
திருச்சி மாநகரில் தற்போது அதிகமாக காணப்படும் குற்ற சம்பவமாக செல்போன் திருட்டு உள்ளது. ரோட்டில் நடந்து செல்லும் பொதுமக்களிடம் அவசரம் என்று கூறி செல்போன் பேசுவதற்காக வாங்கி பேசுவதுபோல் நடித்து செல்போனை திருடி சென்று விடுவது, தனியாக செல்லும் நபர்களிடம் மிரட்டி உடமைகளை பறிப்பது என்பது இருந்து வருகிறது. இதில் பெரும்பாலும் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் அதிகம் காணப்படுகின்றனர். அப்படி ஈடுபடுகின்ற சிறுவர்கள் அனைவரும் பெற்றோர் இருவரும் இல்லாத சிறுவர்களும் மற்றும் பெற்றோரில் ஒருவர் வளர்ப்பில் உள்ள சிறுவர்களும் இருந்து வருகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
திருச்சி இளைஞர்களுக்கு ஒளிவிளக்கு..
அதனடிப்படையில் தற்போது மாநகர காவல் ஆணையர் அவர்கள் ஒவ்வொரு பகுதியிலும் இளைஞர்களை நல்வழிப்படுத்தும் செயலாக கவின் உலகு என்கின்ற இத்திட்டத்தை ஏற்படுத்தி அதன்மூலம் ஒவ்வொரு பகுதி சிறுவர்களையும் கண்டறிந்து ஆலோசனை நல்கி தொடர் கண்காணிப்பில் குற்ற சம்பவங்களில் ஈடுபடாதவாறு சீர்திருத்தப்பட்டு வருகின்றனர் என்றார்.
சமீபத்தில் ஸ்ரீரங்கத்தில் நடந்த போலி நகை ஏமாற்றம் குறித்து பேசியபோது..
ஸ்ரீரங்கத்தில் கடந்த 6ஆம் தேதி பெண் ஒருவரிடம் போலி நகையை கொடுத்து ஏமாற்றப்பட்ட சம்பவம் பெரிதும் அதிர்ச்சியை உண்டாக்கியது இருப்பினும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் ஆணையர் மகேந்திரன் மற்றும் உதவி ஆய்வாளர் உமா சங்கரி தலைமையிலான தனிப்படையினர் விரைந்து செயல்பட்டு கிடைத்த ஆதாரங்களை வைத்து 6 நாட்களில் குற்றவாளிகளை பிடித்தது. காவல்துறை வட்டாரங்களில் பாராட்டுக்குரிய ஒன்றாக கருதப்படுகிறது என்றார்.
ஜித்தன்