தமிழ்நாட்டிலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற திருச்சி கவுன்சிலர் !
தமிழ்நாட்டிலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில்
வெற்றிபெற்ற திருச்சி கவுன்சிலர் !
நடந்து முடிந்துள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதுமே திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. குறிப்பாக திருச்சி மாநகராட்சியில் திமுக தனிப் பெரும்பான்மையோடு வெற்றி பெற்றிருக்கிறது. தோல்வி அடைந்த இடங்கள் கூட திமுக வேட்பாளர்கள் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோல்வியடைந்து இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 57வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் முத்துச்செல்வம் 6,242 வாக்குகள் பெற்று எதிர்த்துப் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்துள்ளார். 57வது வார்டில் பதிவான 7,924 வாக்குகளில் திமுகவை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சிங்காரவேலன் 546 வாக்குகளை மட்டுமே பெற்றார். இதனடிப்படையில் திமுக வேட்பாளர் முத்துச்செல்வம் 5, 696 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மேலும் இவர் ஏற்கனவே இரண்டு முறை கவுன்சிலராக வெற்றி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது மூன்றாவது முறையாக தமிழ்நாட்டிலேயே இரண்டாவது அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற வேட்பாளராக முத்துச்செல்வம் உள்ளார்.
அதுமட்டுமல்லாது முத்து செல்வத்தின் தந்தை திருப்பாற்கடல் திராவிடர் கழகத்தில் பெரியாருடன் இணைந்து பணியாற்றியவர். ராஜாஜி குலக்கல்வி திட்டம் கொண்டு வந்தபோது சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடத்திய திருப்பாற்கடல், 1 வருடம் 7 மாதம் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். அந்த நேரத்தில் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தால் விடுதலை செய்வதாக அறிவித்த போதும் கூட திருப்பாற்கடல் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுக்க மறுத்து தண்டனையை அனுபவித்து வெளியே வந்தார். இவ்வாறு திராவிடப் பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்த முத்து செல்வம் திருச்சியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3வது முறையாக கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.