படம் சொல்லும் செய்தி…1
நெசவாளி நூல் நூற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்தவருக்கு வியப்பு மேலிட்டது. மெதுவாக அவர் அருகில் சென்று, ”உங்கள் இடது கையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருக்கிறதே! ஏன்?” என்றார். ”தொட்டிலில் உள்ள குழந்தையை ஆட்டுவதற்காக குழந்தை அழுதால் இதை இழுப்பேன்” என்றார். அருகில் ஒரு நீண்ட குச்சியிருந்தது. “இந்த குச்சி எதற்கு?” மீண்டும் வழிப்போக்கன் வினாத் தொடுக்க, ”’வெளியே என் மனைவி தானியங்களைக் காயப்போட்டிருக்கிறார் இந்தக் குச்சியின் மறு முனையில் கருப்புக் கொடியைக் கட்டியிருக்கிறேன். இதை அசைத்தால் பறவைகள் அருகில் வராது” என்றான். ”அது என்ன இடுப்பில் மணி?” மீண்டும் வழிப்போக்கன். ”வீட்டில் ஒரு எலி இருக்கிறது. அதன் தொல்லையைச் சமாளிப்பதற்காக இந்த மணியை ஒலித்தால் ஓடிவிடும்’ என்று பதில் சொன்னான். அவனது வீட்டின் ஜன்னலுக்கு வெளியே நாலைந்து சிறார்களின் முகம் தெரிந்தது. நெசவாளியைப் பார்த்து, “அவர்கள் என்ன செய்கிறார்கள்?” என்று கேட்க, ”’நூற்பு வேலை செய்யும் போது வாய் சும்மா தானே இருக்கிறது. அதனால் அவர்களுக்கு எனக்குத் தெரிந்த பாடங்களை நடத்துகிறேன். அவர்கள் வெளியே இருந்து கேட்டுக் கொள்வார்கள்” என்றான். ”ஏன் வெளியே இருக்கிறார்கள்? உள்ளே வரலாம்தானே” எனத் தொடர, “அவர்கள் காதுதான், நான் நடத்தும் பாடங்களைக் கேட்கப்போகிறது”, ஆகவே அவர்களை என் வீட்டுக்கு முன்னால் சாயமேற்றிய நூலை உலர்த்த காயப்போட்டு இருக்கிறேன். யாரும் அதை ஏதும் தொந்தரவு செய்து விடாமல் பாதுகாத்துக் கொண்டே பாடம் கேட்பார்கள்” என்று முடித்தார் நெசவாளி. ஒரே நேரத்தில் இவ்வளவு செயல்களைச் ஒருவரால் செய்ய முடியுமா? என வினா எழுந்தால் ”முடியும்” என உரத்துப் பதிவு செய்வதற்கே இந்தக்கதை.
இப்படி நகமும் சதையுமாக இந்த பிரபஞ்சத்தில் வாழ்ந்த ஆல்பிரட் ஐன்ஸ்டீன். அவரே சொல்கிறார். ”எனது அகவாழ்வும், புறவாழ்வும் மறைந்த மற்றும் உயிருடன் இருக்கிற பிற மனிதர்களின் உழைப்பை அடிப்படையாகக் கொண்டது என்பதை தினசரி நூறு தடவையாவது நினைத்துப் பார்ப்பேன். இதுவரை பெற்றதற்கும், இன்று பெறுவதற்கும் கடன்பட்டுள்ளேன் என்ற உணர்வோடு உழைக்க வேண்டும் என்று நினைப்பேன். இந்த நினைப்பு என்னை சிக்கன வாழ்விற்கு ஈர்த்ததோடு, சகமனிதர்களின் உழைப்பை கூடுதலாக அனுபவிப்பதுபோல் என் மனசாட்சி உறுத்திக்கொண்டே இருந்தது” என்று. அவர் இறந்த அன்று (1955), அவர் எடுக்கப்பட்ட படம் இது. முடிந்த ஆராய்ச்சிகள், முடிவு எழுதப்படாத ஆராய்ச்சிகள், தொடங்கிய ஆராய்ச்சிகள், திட்டமிடப்பட்டிருந்த ஆராய்ச்சிகள், என எத்தனை எத்தனை என்பது அவருக்கு மட்டுமே தெரியும். ஆனால் ஒன்றுமட்டும் உறுதி. இந்தப்படம் உழைப்பின் மீதான நம்பிக்கையையும், உழைப்பதற்கான உறுதியையும் சாமானியனுக்கும் தருகிறது. எனவேதான் வரலாறாய் உயர்ந்து நிற்கிறது.
-ஜோ.சலோ