முதியோர் நலனில் அக்கறை
சமீபத்தில் திருச்சி மகாத்மா காந்தி மருத்துவமனை சென்றிருந்தேன். அங்கே ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் “மக்களைத் தேடி மருத்துவம்” என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு “நோய்” பற்றிய விளக்கமும் அதற்கான தீர்வுகளும் குறித்து, அங்கிருக்கும் “சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, இயற்கை மற்றும் யோகா மருத்துவர்கள் தங்கள் தங்கள் சிகிச்சையில் அதற்கான தீர்வுகளை சொல்கிறார்கள். இதனை நெறிப்படுத்துபவர் தலைமை மருத்துவர் “காமராஜ்” அவர்கள். இது கடந்த “30 வாரங்களாக” தொடர்ந்து நடந்து வருகிறது. நான் கடந்த 6 வாரங்கள் கேட்டு வருகிறேன். மிகவும் பயனுள்ள நிகழ்ச்சி.
“நேற்று முதியோர் நலனில் அக்கறை” என்ற தலைப்பில் ஒவ்வொரு மருத்துவர்களும், முதியோருக்கு வரும் நோய்கள், அதற்கான தீர்வுகள் குறித்து சொன்னார்கள்.
இறுதியில் மருத்துவர் காமராஜ் ஒரு ஸ்லோகன் சொன்னார் என்ன எனில் “கீழ் மட்டையை பார்த்து மேல் மட்டை சிரித்ததாம்” எவ்வளவு பெரிய உண்மை. இப்போதைய நடைமுறையை மனம் வெதும்பி, உதாரணங்களுடன் கூறினார்.
எனக்குக் கூட ஒரு கதை ஞாபகம் வந்தது,
உங்கள் அனைவருக்கும் தெரிந்த கதை தான். அப்பா நன்றாக உழைத்து மகனை படிக்க வைத்து பெரிய ஆளாக்குகிறார். அவன் ஒரு அப்பார்ட்மெண்ட் கட்டும் அளவிற்கு பெரிய பணக்காரனாக உயர்வதற்கு அவரின் அடித்தளம் தான் காரணம். ஆனால் மகனோ அவரை வீட்டின் பின்புறம் ஒரு குடிசை அமைத்து, அங்கு ஒரு பாயில் இருக்க வைக்கிறான். அதனை அந்த தந்தை மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்.
சாப்பிட ஒரு மண் ஓடு கொடுக்கிறான். அதில்தான் அவருக்கு தினமும் சாப்பாடு அளிக்கப்படும். அதுவும் கஞ்சியோ கூலோதான். இதுதான் இப்போதைக்கு நமக்கு தேவை என ஏற்றுக்கொண்டு மகிழ்வுடன் தந்தையும் இருக்கிறார்.
ஒருநாள் அந்த மண் ஓடு காணாமல் போய்விடுகிறது. யார் எடுத்தார்கள் என தெரியவில்லை. மகன் அப்பாவை திட்டுகிறான். அப்பா பொறுத்துக்கொண்டு எனக்கு கைகளில் ஊற்றப்பா ரொம்ப பசிக்கிறது என்கிறார். ஆனால் அதனை செய்ய மறுத்த அவன் கத்துகிறான்.
அப்போது அவன் குரல் கேட்டு மேல் மாடியில் இருந்த அவனது மகன் ஓடி வருகிறான். ஏன் அப்பா கோபமாக இருக்கிறீர்கள். இந்த “பெரிசு” தன் மண் ஓடை தொலைத்துவிட்டது என்கிறான்.
அதனை கேட்ட மகன் சொல்கிறான். அப்பா நான்தான் தாத்தா தூங்கும்போது அவருக்கு தெரியாமல் அதனை எடுத்து வைத்திருக்கிறேன். ஏனெனில் அது உங்களுக்கு நான் பிற்காலத்தில் சாப்பாடு கொடுக்க தேவைப்படும் இல்லையா? என்றான்.
உண்மையை மகன் உணர்த்த, திருந்தினான் அந்த பெரியவரின் மகன் என்கிறது கதை. இது இப்போது உண்மையில் நடந்து வருகிறது.
எல்லோரும் பணத்தை நோக்கி ஓடுகிறோம். பணம் வராத பகுதியை நோக்கி திரும்புவதே இல்லை. அது உறவுகளாகட்டும். வேறு எதுவாக இருக்கட்டும்.
முதியோர்களுக்கும் சின்ன அட்வைஸ்
பெற்றோர்கள் எல்லாம் அருவி போல். கொட்டுவதுடன் அதன் வேலை. குழந்தைகள் எல்லாம் நதியை போல. ஓடுவதற்கு படைக்கப்பட்டுள்ளன. உண்மைதானே.
முடிந்த அளவு முயற்சியுடன் இருங்கள். ஒரு கழுகோ, ஒரு சிங்கமோ தனது குஞ்சுகளை சார்ந்திருப்பதில்லை. வயதானாலும் அது இரைதேடித்தான் சாப்பிடுகிறது.
ஆறறிவு படைத்த மனிதன் தன் குழந்தைகள் செய்வார்கள் என எதிர்பார்த்து காத்திருக்கிறான். உங்களுக்கு நீங்கள்தான் எல்லாம் என்பதை உணர்ந்து முடிந்தவரை முயற்சியுங்கள். மீதியை கடவுளிடம் விட்டுவிடுங்கள்.
நன்றி.
மீனா அசோக்.