ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4.45 மணிக்கு உற்சவர் நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து தேருக்கு புறப்பட்டு 5.15 மணிக்கு சித்திரை தேர் ஆஸ்தான மண்டபத்தை வந்தடைந்தார். காலை 5.30 மணி முதல் 6.15 மணிக்குள் தேரில் மேஷ லக்னத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
காலை 6.30 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. ஸ்ரீரங்கா கோஷம் விண்ணதிர பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கீழச்சித்திரை வீதியில் இருந்து புறப்பட்ட தேர் தெற்கு சித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி மற்றும் வடக்கு சித்திரை வீதி ஆகிய நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து பின் தேர் நிலைக்கு வந்தது. பின்னர் நம்பெருமாள் ரேவதி மண்டபம் சேர்ந்தார்.
தேரோட்டத்தையொட்டி போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர்கள், உதவி ஆணையர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.