இனிக்கும் இமாம்பசந்து..!
இனிக்கும் இமாம்பசந்து..!
சங்க இலக்கியங்கள், புராண இதிகாசங்களில் முக்கனிகளில் ஒன்றாகிய மாம்பழம் தனிச் சிறப்பு வாய்ந்தது. மாம்பழங்களில் பலப்பல ரகங்கள் அவ்வப்போது அந்தந்தப் பகுதிகளில் விளைந்து கொண்டு தான் இருக்கின்றன. அவைகளில் இமாம்பசந்து மாம்பழம் தனித்துவம் ஆனது. தனிச்சுவையினைக் கொண்டது. இமாம் பசந்து மாம்பழம், இதற்கு மாம்பழங்களில் அரசன் என்கிற சிறப்புப் பட்டமும் உண்டு. காரணம், அதன் இனிப்பு. அத்தனை தித்திப்பு. சில மாம்பழ வகைகளில் இனிப்புடன் சற்றே புளிப்புச் சுவையும் மிதமாகக் கலந்திருக்கும். இமாம்பசந்து அப்படியல்ல. நூற்றுக்கு நூறு இனிப்புச் சுவை கொண்டதாகும். ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீமான் தாத்தாச்சாரியார் தோட்டங்களில் மட்டுமே விளைந்து வருகிறது.
“மொத்தம் சுமார் ஆயிரத்து ஐநூறு மா மரங்கள் உள்ளன. அவைகளில் எழுபது சதவிகிதம் மா மரங்கள் இமாம்பசந்து மற்றும் பங்கனப்பள்ளி. வகை மா மரங்கள் தான். மாம்பழச்சுவை பந்தயத்தில் இமாம்பசந்துக்கு அடுத்த வந்து நிற்கக் கூடியது பங்கனப்பள்ளி. மாங்கன்றுகள் வைத்ததில் இருந்து நான்கு வருடங்களில் காய்க்கத் தொடங்கி விடும். கோடை காலங்களில் இவைகளுக்குத் தண்ணீர் விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். மார்கழி தை மாதங்களில் மாம்பூக்கள் பூக்கத் தொடங்கும். அப்போது இவைகளுக்கு பனியும் வெயிலும் நண்பர்கள். பெரு மழையானது பெரும் பகைவன். பெரு மழைக்காலங்களில் மாம்பூக்கள் தரையில் உதிர்ந்து விடும். மாசி பங்குனி சித்திரை மாதங்களில் காய்கள் காய்க்கத் தொடங்கும். சித்திரை பதினைந்து தேதிக்கும் மேல் மாங்காய் அறுவடை செய்யலாம். மாங்காய் அறுத்து அவைகளைப் பழுக்க வைக்கலாம். ஓரளவுக்கு ஆடிப்பதினெட்டு வரை மாம்பழங்களின் தனியான வாசம் வீசிக் கொண்டேயிருக்கும்.” என்கிறார் வேளாண் ஆலோசகர் அக்ரி ராமலிங்கம்.
“பெட்டிகளில் வைக்கோல் போட்டு பேக் பண்ணித் தரப்படும் இமாம்பசந்து மாங்காய்கள் மூன்று நான்கு நாட்களில் நன்றாகப் பழுத்து விடும். அதனை நான்கைந்து நாட்களுக்கு வைத்துச் சாப்பிடலாம். மேலும் தாத்தாச்சாரியார் தோட்டத்தில் ஆப்பிள் பச்சரிசி, மால் பச்சரிசி எனும் மாங்காய்கள் விளைந்து வருகின்றன. இந்த இரண்டு வகை மாங்காய்களும் வேறு எங்கும் கிடையாது. மாங்காய்னா புளிக்கணும் இல்லியா? மேற்கண்ட இரண்டு வகை மாங்காய்களும் புளிக்கவே புளிக்காது. ஆப்பிள் பச்சரிசி மாங்காய் கடித்துத் தின்று பார்த்தால், ஆப்பிள் மாதிரியே இருக்கும். இதனை “கிரீன் ஆப்பிள்” என்றும் சொல்லப்படுவது உண்டு. தோட்டத்தின் நிர்வாகியான சதிஸ்குமார் மருதமுத்து.
ஸ்ரீரங்கம் தாத்தாச்சாரியார் தோட்டத்தி லும், மாம்பழச்சாலை கடைகளி லும் இமாம்பசந்து, பங்கனப்பள்ளி, ருமானி, செந்தூரம், கல்லாமணி, நீலம் மற்றும் பலவகை மாம்பழங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. “எங்கள் தோட்டத்தில் மாமரங் களுக்கு இயற்கை உரமே (தழையுரம்) அதிகம் பயன்படுத்துகிறோம். இமாம்பசந்து என்பது எங்கள் சித்தப்பா தானாகவே தனியாக உருவாக்கிய ஒட்டுரக மாங்கன்று ஆகும். அவர் காலத்திலும் அதற்குப் பின்னரும் எங்கள் தோட்டங்களில் ஒட்டுரகமான “இமாம்பசந்து” மாங்கன்றுகள் நிறையவே வைத்து வளர்க்கத் தொடங்கி விட்டோம். எங்கள் தோட்டத்து இமாம்பசந்து மாம்பழத்தின் தனி ருசிக்கு, களிப்புக் கலந்த வண்டல் மண் தான் முக்கியக் காரணம். அது மட்டுமல்லாது எங்களின் தொய்வில்லாத நேரடி கண்காணிப்பும் மிகமிக முக்கியம் ஆகும். இங்கு விளையும் இமாம்பசந்துக்கு “ஸ்ரீரங்கத்துக் கல்கண்டு” என்கிற அடைமொழியும் உண்டு.” என்கிறார் ஸ்ரீரங்கம் தாத்தாச்சாரியார் தோட்டங்களின் உரிமையாளர் மற்றும் பொறுப்பாளருமான நந்தகுமார்.
-ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு