அரசுக்கு ‘கோடிக்கணக்கில் இழப்பு…’அமைச்சர் பெயரிலோ நன்றி அறிவிப்பு…
அரசுக்கு ‘கோடிக்கணக்கில் இழப்பு…’அமைச்சர் பெயரிலோ நன்றி அறிவிப்பு…
தமிழக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பால் அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.ஆனால் இந்த விவரம் புரியாத அமைச்சரோ முதல்வருக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் வெளியிட்டது அரியலூர் மாவட்டத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரில் தர மான பழுப்பு நிலக்கரி கிடைப்பதால் அங்கு நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் மற்றும் அனல்மின் நிலையம் போன்றவை இயங்கி வருகின்றன. தொடர்ந்து இந்த பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியிலும் பழுப்பு நிலக்கரி கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டன.
தொடர்ந்து கடந்த 1996 ம் ஆண்டில் ஜெ.எல்.பி.பி என்ற பெயரில் நிலக்கரி சுரங்கம் மற்றும் 800 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில் நிலம் கையகப் படுத்தும் பணிகள் தொடங்கின.
ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 11 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கின. மொத்தம் 11 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்ட மிடப்பட்டு, தனியார் வசம் இருந்த 8 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்த ப்பட்டது. அரசு நிலம் 3 ஆயிரம் ஏக்கர் பயன்பாட்டுக்கு எடுக்கப்பட்டது. இதில் தனியார் நிலங்களுக்கு அரசு மதிப்பீட்டின்படி நஷ்ட ஈடு நிர்ணயம் செய்யப்பட்டது.
சாலையை ஒட்டிய நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடும், சற்று உள் அடங்கிய நிலங்களுக்கு குறைந்த தொகையும் நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்படி ரூபாய் 35 ஆயிரம் முதல் 15 லட்சம் வரையும் இழப்பீடாக விவசாயிகள் பெற்றனர். தொகையை பெற்ற விவசாயிகள் அரசின் உறுதி மொழி பத்திரத்தில் கையெழுத்து இட்டனர். சிலர் தங்கள் நிலத்துக்கான இழப்பு தொகை போதாது என்று வழக்கு தொடர்ந்தனர்.
இதற்காக சிறப்பு கோர்ட் ஒன்று ஜெயங்கொண்டம் நகரில் அமைக்கப்பட்டது. அந்த கோர்ட் வெளியிட்ட தீர்ப்பில் மனுதாரர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் செலவினங்கள் கூடுதலாக ஏற்படுவதால் மேற்படி திட்டமே கைவிடப்படுவதாக அரசு அறிவித்தது. இதையடுத்து ஏற்கனவே பணம் பெற்ற மற்றும் வழக்கு தொடர்ந்த விவசாயிகள் வழக்கம்போல தங்கள் நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட 8373 ஏக்கர் நிலங்களை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு திரும்ப வழங்கு வதாகவும், அவர்கள் பணம் பெற்றிருந்தால் அந்த பணமும் திரும்ப பெறப்பட மாட்டாது என்றும் முதல்வர் அறிவித்தார். முதல்வரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பெயரில் ஜெயங்கொண்டம் நகரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதில் வேடிக்கை என்னவென்றால் நிலமும் விவசாயிகளிடம் உள்ளது. இழப்பீடு தொகையும் பெற்று செலவுகள் செய்து விட்டனர்.
இப்போது அரசு நிலத்தை திருப்பி கொடுத்து தொகையும் வேண்டாம் என்று கூறி விட்டது. இதில் கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் சிலரை திருப்தி செய்வதற்காக அமைச்சர் பெயரில் போஸ்டரா என்று அரியலூர் மாவட்ட மக்கள் நக்கலாக சிரிப்பது குறிப்பிடத்தக்கது.
-சட்டநாதன்