பெருமாள்மலையில் 2 பெண் சடலங்கள் மீட்பு ! போலீசார் விசாரணை .
துறையூர் பெருமாள்மலையில் 2 பெண் சடலங்கள் மீட்பு. போலீசார் விசாரணை !
திருச்சி மாவட்டம், துறையூர் பெருமாள்மலையில் முதல் திருப்பத்தில் பாலத்திற்கு அடியில் 2 பெண் சடலங்கள் கிடப்பதாக துறையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் பார்த்த போது, பாலத்திற்கு கீழே புதர்களுக்கு மத்தியில் சுமார் 50 வயதுக்கு மேல் மதிக்கத்தக்க 2 பெண் சடலங்கள் கிடந்தன.

மேலும் அருகில் ஒரு பையில் ஆதார் அட்டை , குடும்ப அட்டை மற்றும் வங்கி பாஸ்புக் உள்ளிட்டவை கிடந்தன. அவற்றைக் கைப்பற்றி போலீசார் பார்த்த போது , மூன்று ஆதாரங்களிலும், துறையூர் அடுத்த பகளவாடியைக் கிழக்குத் தெருவைச் சேர்ந்த சம்பூர்ணம், கணவர் பெயர் கிருஷ்ணன் என்றும் இருந்தது, இது பற்றி போலீசார் விசாரித்த போது இறந்தவர் சம்பூர்ணம் என்பதும், இவருக்கு தனலட்சுமி, காவியா என 2 மகள்களும், விஜய் என்ற ஒரு மகனும் உள்ளார் எனவும், கணவர் கிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டார் எனவும் தெரிய வந்தது.
சம்பூர்ணத்துடன் இறந்து கிடந்த மற்றொரு பெண் அதே ஊரைச் சேர்ந்த ராஜா என்பவரின் மனைவியான பெரியம்மா என்பதும் தெரிய வந்தது. சில நாட்களுக்கு முன்பாக இறந்திருக்கலாம் என்ற நிலையில் இருவரது முகமும் உடல்களும் அடையாளம் காண முடியாத நிலையில் கிடந்தது.
2 சடலங்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 2 பெண்கள் இறந்ததற்கு குடும்பப் பிரச்னையா அல்லது வேறு காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பெருமாள் மலையில் இரண்டு பெண்கள் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
– ஜோஸ்