ஊராட்சியில் 2 கோடிக்கு மேல் முறைகேடு ! இப்படி தான் எல்லா ஊராட்சிகளிலும் நடக்குதா ?
ஊராட்சி நிதியில் ரூ.2 கோடிக்கு மேல் முறைகேடு! ஊழலின் கோட்டையாக மாறிய கம்பரசம் பேட்டை புகாரில் சிக்கிய தலைவர், து.தலைவர், உறுப்பினர்கள் திருச்சி மாவட்டம் கம்பரசம்பேட்டையின் ஊராட்சி நிதியை கோடிக்கணக்கில் முறைகேடு செய்ததாக பஞ்.தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்என கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி மாவட்டம் கம்பரசம்பேட்டையை சேர்ந்த மகேந்திரன் என்பவர் கலெக்டரிடம் மனு கொடுக்க போகிறோம் என்று திருச்சி பத்திரிகையாளர் அலுவலகத்தில் பேட்டி கொடுத்தனர்.

இது குறித்து அவரிடம் அங்குசம் இதழ் சார்பாக பேசிய போது… கம்பரசம் பேட்டை ஊராட்சித் தலைவர் ஊராட்சி நிதியில் பல்வேறு முறைகேடுகள் செய்திருப்பதாகவும், ஆகவே, ஊராட்சித் தலைவர் மற்றும் துணைத்தலைவர் காசோலைகளில் கையொப்பமிடும் அதிகாரத்தை ரத்து செய்து, கடந்த 28.03.2022 அன்று அப்போதைய கலெக்டர் .சிவராசு உத்தரவிட்டதாக பத்திரிகை செய்தியில் அறிந்தேன்.
ஆகவே, ஊராட்சித் தலைவர் செய்திருக்கும் கையாடல் மற்றும் முறைகேடுகள், ஊழல்கள் அனைத்தையும் ஆவணபூர்வமாக பெற்று, ஊராட்சித் தலைவர் மற்றும் துணைத்தலைவக்கு துணை போன வார்டு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்து அனைவரையும் பணி நீக்கம் செய்து, கம்பரசம்பேட்டை ஊராட்சிக்கு ஏற்பட்ட நிதி இழப்பினை அவர்களிடம் இருந்து திரும்ப கம்பரசம்பேட்டை ஊராட்சிக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த 6.07.2022 அன்று தகவல்அறியும் உரிமை சட்டத்தின்படி, கம்பரசம்பேட்டை ஊராட்சி செயலர், தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் 9 பேருக்கும் பதிவுத் தபால் மூலமாக ஊராட்சி சம்மந்தமான ஆவண நகல்கள் மற்றும் சில தகவல்கள் கேட்டு அதற்கான உரிய கட்டணம் செலுத்துகிறேன் என்ற விவரத்தோடு விண்ணப்பம் செய்தேன்.

நான் விண்ணப்பம் செய்த மனுவிற்கு 30 நாட்கள் கடந்தும், எனக்கு எந்த விதமான பதிலும் வழங்கப்படவில்லை. கடந்த 8.8.2022 அன்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி மேல்முறையீட்டு அலுவலரான உதவி இயக்குநருக்கு (ஊராட்சிகள்) நான் அனுப்பிய அனைத்து மனுக்களின் நகல்களையும் இணைத்து, நான் கோரிய தகவல்கள் மற்றும் ஆவண நகல்களை பெற்றுக் கொடுக்குமாறு கேட்டு பதிவுத் தபால் மூலமாக விண்ணப்பம்செய்தேன்.
அதன் பிறகு நான் விண்ணப்பித்த மனுவிற்கு மேல்முறையீட்டு அலுவலரான உதவி இயக்குநர், கடந்த 24.8.2022 தேதியில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி, நான் கேட்டிருந்த அனைத்து தகவல்களையும் எனக்கு பெற்றுக் கொடுக்குமாறு அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்ட கடித நகல் எனக்குப் பதிவு தபால் மூலமாக கிடைத்தது.
அதன் பிறகும் எனக்கு எந்தவித பதிலும் வர வில்லை. கடந்த 16.9.2022ம் தேதி அன்று தகவல் அறியும் உரிமை சட்ட பிரிவின்படி, தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு, கடந்த 6.7.2022 அன்று விண்ணப்பம் செய்த மனுவின் நகல்கள், மற்றும் கடந்த 8.8.2022 அன்று மேல் முறையீடு 3 செய்த மனுவின் நகல்களையும் இணைத்து, நான் கோரியிருந்த ஆவண நகல்கள் மற்றும் தகவல்களை பெற்றுக் கொடுக்குமாறும், எனக்கு உரிய காலத்திற்குள் தகவல் மற்றும்ஆவணங்களை வழங்காத ஊராட்சி செயலர், தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் 9 பேர்களின் மீதும் தகவல் அறியும் உரிமை சட்ட பிரிவின்படி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு, நான் கோரிய தகவல்கள் மற்றும் ஆவண நகல்களை பெற்றுக் கொடுக்குமாறு பதிவுத் தபால் மூலமாக விண்ணப்பம் செய்தேன்.

விண்ணப்பம் செய்த அனைத்து மனுக்களையும் தமிழ்நாடு தகவல் ஆணையம் முழுமையாக ஆய்வு செய்யாமல், தகவல் அறியும் உரிமை சட்ட பிரிவின் படி மனு செய்யவில்லை என்றும், மேல்முறையீடு செய்ய வில்லை என்றும், நேரடியாக தகவல் ஆணையத்தை அணுகியதாகவும், தவறாக எனது மனுக்களை தள்ளுபடி செய்து, 7.11.2022 அன்று பதிவு தபால் மூலமாக கடிதம் வந்தது.
அதன் பிறகு, தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் சட்டவிரோதமான அநீதியான நடவடிக்கையை எதிர்த்து, நான் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தேன். அதனடிப்படையில் எனது கோரிக்கையினை ஐகோர்ட் ஏற்றுக்கொண்டு, கடந்த 14.12.2022 அன்று நீதியரசர் கார்த்திகேயன் பிறப்பித்த உத்தரவின் படி, கடந்த 19.12.2022 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணிக்குள் நான் தகவல் ஆணையத்தை நேரில் அணுகி அனைத்து மனுக்களையும் கொடுத்து, அவ்வாறு நான் கொடுக்கின்ற மனுக்களை தகவல் ஆணையம் ஏற்றுக் கொண்டு, ஒரு வார காலத்திற்குள் நான் கோரியிருந்த தகவல்கள் மற்றும் ஆவண நகல்களை எனக்கு பெற்றுக் கொடுக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
அந்த உத்தரவை மதித்து, நான் கடந்த 19.12.2022 அன்று தமிழ்நாடு தகவல் ஆணையத்தில், 10 மணியிலிருந்து மதியம் 1 மணிக்குள் சென்று, அனைத்து மனுக்களையும் தமிழ்நாடு தகவல் ஆணையத்திடம் வழங்கி, தமிழ்நாடு தகவல் ஆணையம் முத்திரை பதித்த நகல்களை பெற்றுக் கொண்டேன்.

அதன் அடிப்படையில், தமிழ்நாடு தகவல் ஆணையர் ஸ்ரீதர், என்னை போனில் தொடர்பு கொண்டு, 26.000 மனுக்கள் நிலுவையில் உள்ளதாகவும், தகவல் ஆணையர்கள் இருவர் மட்டுமே இருப்பதால், அனைத்து மனுக்களையும் விசாரிக்க இயலவில்லை என்றும், நீங்கள் உயர்நீதிமன்றத்திற்கு சென்றதால் ஊராட்சி செயலருக்கு விண்ணப்பம் செய்திருக்கிற ஒரு மனுவை மட்டும் விசாரிப்பதாக தெரிவித்து, கடந்த 11.1.2023அன்று முற்பகல் 10.30 மணிக்கு நேரடியாக ஆஜராகுமாறு அழைப்பாணை கொடுத்தார்.

இதையடுத்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஆலோசகர் சீனிவாசனை அழைத்துக் கொண்டு நேரில் ஆஜரானோம். அப்போது எங்களை நேரில் அழைத்து விசாரணை செய்த தமிழ்நாடுதகவல் ஆணையர் ஸ்ரீதர், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சிஅலுவலராக பணிபுரியும் கம்பரசம்பேட்டை ஊராட்சி தலைவரின் உறவினர் சதீஷ் என்பவரை பொதுதகவல் அலுவலராக நியமித்து விசாரணை நடத்திய போது, 32,000 மனுக்கள் நிலுவையில் உள்ளதாகவும், அனைத்து ஆவணங்களையும் பரிசீலித்து பெற்றுக் கொடுக்க எனக்கு நேரமில்லை என்றும் தெரிவித்து, தோராயமாக 300 பக்கம் கொண்ட ஆவண நகல்களை பெற்றுக் கொடுக்குமாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் விதிகளை துளியும் மதிக்காமல் தீர்ப்பு வழங்கினார்.
மேலும், சதீஷ் என்பவர், அனைத்து ஆவண நகல்களையும் எடுத்து வர இயலவில்லை என்று என்னை அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். நானும், முழுமையான ஆவண நகல்கள் கிடைக்கப் பெற்றால், கம்பரசம்பேட்டை ஊராட்சித் தலைவர் செய்த கையாடல் மற்றும் முறைகேடுகளை வெளி கொண்டு வரும் நோக்கில் சம்மதித்து, அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரில் சென்று கேட்டபோது, ஊரக வேலை உறுதி திட்ட நிதி கணக்கு, வங்கி வரவினங்கள் மற்றும் அந்த கணக்குகளின் ரொக்க புத்தகம் தவிர கணக்கு எண் 1, 2, 3, 7, 8, 9 ஆகிய கணக்குகளின் வங்கி வரவினங்களும், ரொக்கபுத்தகத்தின் நகலையும் பெற்றுக்கொண்டேன்.

கணக்கு எண் 5, 6, 10, 11 ஆகிய கணக்குகள் ஊராட்சியில் பராமரிக்கவில்லை என்றும் தெரிவித்து கணக்கு எண் 4ன் வரவினங்கள் மற்றும் அதன் ரொக்கப்புத்தகத்தின் நகல்களை கேட்டபோது, நீங்கள் மறுபடியும் நீதிமன்றத்திற்கே சென்று பெற்றுக்கொள்ளுங்கள் என்று அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ் கூறிவிட்டார்.
அவ்வாறு நான் பெற்றுக் கொண்ட வங்கி வரவினங்கள் மற்றும் ரொக்க புத்தகத்தின் நகல்களில் கணக்கு எண் 1 (ஊராட்சி பொது நிதி), 1.1.2020 முதல் 6.7.2022 வரை வரவினங்கள் மற்றும் ரொக்க புத்தகத்தினை ஆய்வு செய்த போது கண்டறியப்பட்ட முறைகேடுகள் ஊழல்கள் மற்றும் கம்பரசம்பேட்டை ஊராட்சித் தலைவர் புஷ்பவள்ளி பெயரில் விடுவிக்கப்பட்டதொகை ரூ.2,26,400/- என தெரிந்தது.
மேலும் தனிபட்ட நபர்களின் பெயரில் வழங்கப்பட்ட தொகை விவரங்களை பார்க்கும் போது மொத்தம் ரூ.46 லட்சத்து 953 ஆகும். இதில் ஊராட்சித் தலைவர் புஷ்பவள்ளியின் 2வது மகனான பிரசாந்த் பெயரில் விடுவிக்கப்பட்ட தொகை மட்டும் ரூ.12,61,974,மற்றும் ஜெயபாரதி என்பவர் பெயரில் விடுவிக்கப்பட்ட தொகை ரூ.2,44,050/-. உமா என்பவர் பெயரில் விடுவிக்கப்பட்ட தொகை ரூ.2,31,750/-, வேல்முருகன் பெயரில் விடுவிக்கப்பட்டதொகை ரூ.3,48,000/- ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
தொடர்ந்து நிறுவனங்களான ஸ்ரீ கணேசா டிரேடர்ஸ், விஜய் எலக்டிரிக்கல்ஸ், ஸ்ரீ அம்மன் எலக்டிரிக்கல்ஸ், டால்பின் ஏஜென்சீஸ், ஆல்வின்ராஜ் இன்ஜினியரிங் ஒர்க்ஸ், ஸ்ரீ விக்னேஷ் இன்ஜினியரிங் ஒர்க்ஸ், பாத்திமா ஹார்டுவேர்ஸ், ஜார்ஜ்டவுன் வழங்கப்பட்ட தொகைகளில் விபரங்களை பார்த்தால் மொத்தம் ரூ.37 லட்சத்து 80ஆயிரத்து 832 ஆகும்.
மேலும், கம்பரசம்பேட்டை ஊராட்சித் தலைவர் புஷ்பவள்ளியின் மகன் பிரசாந்த் ஊராட்சியில் ஒப்பந்ததாரராகவும், ஓஎச்டி ஆப்பரேட்டராகவும், சட்டவிதிகளுக்குபுறம்பாக பணியமர்த்தப்பட்டிருக்கிறார்.
பொது நிதி மூலமாக எடுக்கப்பட்ட தொகை கம்பரசம் பேட்டைஊராட்சியின் எந்த ஒரு வளர்ச்சிக்காகவும் எடுக்கப்படவில்லை. ஊராட்சி தலைவருக்கு வழங்கியிருக்கும் அதிகாரத்தினை சட்டவிரோதமாக பயன்படுத்தி கோடிகளில் தொகை எடுத்துள்ளார்.
மல்லியம்பத்து ஊராட்சியின் 2020 – 2021ம் ஆண்டின் தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் குற்றசாட்டுகள் தான் கம்பரசம்பேட்டை ஊராட்சியின் 2019–2020ம் ஆண்டு தணிக்கை அறிக்கை, 2020-2021ம் ஆண்டு தணிக்கை அறிக்கை மற்றும் 2021-2022ம் ஆண்டு தணிக்கை அறிக்கை ஆகிய 3 ஆண்டுகளின் 10 தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் மூன்று ஆண்டுகளுக்குரிய தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு கம்பரசம்பேட்டை ஊராட்சித்தலைவர் புஷ்பவள்ளி கொடுத்த விளக்கம் என்ன என்பதனை கலெக்டர் தான் சொல்ல வேண்டும் மேலும், 2019-2020ம் ஆண்டு தணிக்கை அறிக்கை பத்தி எண் 23ல் 2015-2016ம் ஆண்டு, தற்போதைய கம்பரசம் பேட்டை ஊராட்சி தலைவர் புஷ்பவள்ளி கணவர் ரவிச்சந்திரன் தலைவராக பதவி வகித்த காலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களுக்கு ரூபாய் 12 லட்சத்து 78 ஆயிரத்து 694 விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் ,அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களுக்கு 2019 – 2020ம் ஆண்டில் அத்தொகை வழங்கப்பட்டுள்ளதற்கு உரிய விளக்கம் அளித்திட வேண்டும் என்று தணிக்கையாளரால் கோரப்பட்டுள்ளது.

அவ்வாறு அதற்கான விளக்கத்தினை கம்பரசம்பேட்டை ஊராட்சித் தலைவர் புஷ்பவள்ளி அளித்தாரா என்பதனை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். கம்பரசம்பேட்டை ஊராட்சியில் 2019-20 ஆண்டு தணிக்கையின்படிரூ. ( ஒரு கோடியே 8 லட்சத்து 6 ஆயிரத்து 991ம், 2020-21 ஆண்டு தணிக்கையின்படி ரூ.42 லட்சத்து 86 ஆயிரத்து 849ம், 2021-22 ஆண்டு தணிக்கையின் படி ரூ.61 லட்சத்து 8 ஆயிரத்து 767ம் என்ற தொகையும் சேர்த்து சுமார் ரூ.2 கோடிக்கு மேல் முறை கேடாக ஊராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவரால் விடுவிக்கப்பட்டுள்ளது.
அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மல்லியம்பத்து ஊராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் மீது தமிழ்நாடு 11 ஊராட்சிகள் சட்டத்தன் படி நடவடிக்கை மேற்கொண்டு ரூ..74,02,574 கையாடல் செய்ததாக மல்லியம்பத்து ஊராட்சித்தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகியோரை கலெக்டர் பதவி நீக்கம் செய்துள்ளதை அறிந்தேன்.

மேலும், மல்லியம்பத்து தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகியோரை பதவி நீக்கம் செய்ததற்கான அறிக்கை நகல்களை நான் தகவல்அறியும் உரிமை சட்டம் வழியாக பெறப்பட்டு அந்த அறிக்கையினை முழுமையாக படித்து கவனத்தில் ஏற்றுக் கொண்டேன். மேலும் மல்லியம்பத்து ஊராட்சியின் 2020 – 2021ஆம் ஆண்டு தணிக்கை அறிக்கை நகலினையும் தகவல் அறியும் உரிமை சட்டம் வழியாக பெறப்பட்டு அந்த தணிக்கை அறிக்கையின் நகலினையும் முழுமையாக படித்து கவனத்தில் ஏற்றுக் கொண்டேன்.
அந்த தணிக்கை அறிக்கையின் அடிப்படையில் தான் கலெக்டர் மல்லியம்பத்து ஊராட்சிமன்றத் தலைவர் மற்றும் துணைத்தலைவர் மீது நடவடிக்கை மேற் கொண்டு பதவி நீக்கம் செய்துள்ளார் . அது போலவே, கம்பரசம்பேட்டை ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்களிடம் ஊராட்சிமன்றத் தலைவர் செய்திருக்கின்ற பணிகளின் விவரத்தினை நேரடியாக விசாரணை மேற்கொண்டால் ஊராட்சி தலைவரின் செயல்பாடுகள் குறித்து, கலெக்டர் நேரடியாக விசாரிக்க வேண்டும்.
கம்பரசம்பேட்டை ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவரால் ஏற்படுத்தப்பட்ட நிதி இழப்பினை திரும்பபெற்று, அவர்களுக்கு துணை போன கம்பரசம்பேட்டைஊராட்சி மன்ற 9 வார்டு உறுப்பினர்கள், தலைவரின் கணவர் ரவிச்சந்திரன்,தலைவரின் மகன்பிரசாந்த் மற்றும் அவர்களுக்கு துணையாக இருந்த அதிகாரிகள் மற்றும் அந்தநல்லூர் துணைவட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ் மீதும் குற்றவியல் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்ட ஆலோசகர் சீனிவாசனிடம் பேசிய போது…
ஒரு ஊராட்சி பஞ்சாயத்து மத்திய மாநில அரசு கொடுக்கும் நிதியை எப்படி எல்லாம் மோசடி செய்கிறார்கள் எடுத்துக்காட்டாகத்தான் கம்பரசம்பேட்டை ஊராட்சி உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு அந்தநல்லூர் ஊராட்சிக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மல்லியம்பத்து ஊராட்சியின் தலைவர் மீது இதே தணிக்கை குழு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் தலைவர் தகுதி நீக்கம் செய்த அதிகாரிகள், தற்போது இந்த கம்பரசம்பேட்டை ஊராட்சிமன்ற தலைவரை மட்டும் காப்பாற்ற காரணம் என்ன? இந்த மோசடிக்கு முழுவதும் அதிகாரிகள் துணை போயிருப்பார்ளோ என்கிற சந்தேகம் இருக்கிறது. அல்லது அரசியல் ரீதியான காரணம் எதுவும் இருக்கிறதா என்பதை அரசு தரப்பு தான் விளக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் இந்த புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் நியாயம் கிடைக்க வில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்றார்…
ஏற்கனவே அங்குசம் இதழில்… கம்பரசம் ஊராட்சி குறித்து வெளியான கட்டுரை
பளபளக்கும் பஞ்சாயத்து தலைவர்..!
பல் இளிக்கும் கிராம வளர்ச்சி..!
பளபளக்கும் பஞ்சாயத்து தலைவர்..! பல் இளிக்கும் கிராம வளர்ச்சி..!