தானியங்கி இயந்திரம் மூலம் மஞ்சப்பை பெறும் திட்டம்: தொடங்கி வைத்த கலெக்டர்!
தானியங்கி இயந்திரம் மூலம் பொதுமக்கள் ரூ.10 செலுத்தி துணியாலான மஞ்சள் பை பெறும் திட்டத்தை தஞ்சை சரபோஜி மார்க்கெட்டில் மாவட்ட ஆட்சியர் திணேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் நெகிழி (பிளாஸ்டிக்) பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிiலையில், பொதுமக்கள் துணியாலான பைகளைப் பயன்படுத்தும் வகையில் ‘மீண்டும் மஞ்சப்பை’ என்ற திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
அதன் ஒருபகுதியாக, தஞ்சை கீழவாசல் பகுதியில் அமைந்துள்ள சரபோஜி மார்க்கெட்டில் பொருள்கள் வாங்க வரும் பொதுமக்களுக்கு எளிதாக மஞ்சள் பை கிடைக்கும் வகையில் தானியங்கி இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.
இத் தானியங்கி இயந்திரத்தில் பொதுமக்கள் ரூ.10 செலுத்தி மஞ்சள் பையை எடுத்துக் கொள்ளலாம். இத்திட்டத்தை மாவட்ட ஆட்சியர் திணேஷ் பொன்ராஜ் ஆலிவர் இன்று தொடங்கி வைத்தார்.
பொதுமக்கள் இனி நெகிழி பைகளின் பயன்பாட்டை முழுமையாக தவிர்த்து துணியாலான பைகளில் தங்களது பொருள்களை எடுத்துச் செல்ல இது பேருதவியாக இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அனைத்து கடைகளுக்கும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் முனைவர் குணசேகரன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் எம்.ஜி.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.