பேப்பாடு பெரும்பாடுபட்ட ‘நாயாடி’ குழு !
அங்குசம் பார்வையில் ‘நாயாடி’ திரைப்படம் எப்படி இருக்கு !
அங்குசம் பார்வையில் ‘நாயாடி’ திரைப்படம் எப்படி இருக்கு !
தயாரிப்பு: ஆதர்ஷ் மதிகாந்தம் பிக்சர்ஸ் & மாயா கிரியேஷன்ஸ் மோகன்தாஸ் புல்லானிகட். இணைத்தயாரிப்பு& டைரக்ஷன் & ஹீரோ: ஆதர்ஷ் மதிகாந்தம். மற்ற நடிகர்—நடிகைகள்: காதம்பரி, ஃபேபி, நிவாஸ் சரவணன், அரவிந்த்சாமி( இவர் வேற அரவிந்த்சாமி), ரவிச்சந்திரன், கீதாலட்சுமி, ஒளிப்பதிவு: மோசஸ் டேனியல், இசை: அருண், எடிட்டிங்: சி.எம்.இளங்கோவன். பி.ஆர்.ஓ.நிகில் முருகன்.
பல நூறு வருடங்களுக்கு முன்பு கேரளாவில் வாழ்ந்த பழங்குடியின மக்களில் ஒரு பிரிவினர் தான் ‘நாயாடி’. இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் பகலில் ஊருக்குள் வரக்கூடாது, ஆதிக்க சாதியினர் யாரையும் பார்க்கக்கூடாது. இதை மீறினால் அவர்களை கல்லால் அடித்தே கொன்றுவிடுவார்கள். இந்தக் கொடுமைக்கு முடிவு கட்டவும் தங்களை சித்ரவதை செய்பவர்களை பயமுறுத்தவும் பில்லி, சூனியம், மாந்த்ரீகங்களைக் கற்று அதன் மூலம் விசேச சக்தியைப் பெறுகிறார்கள் நாயாடிகள்.
ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏதாவது மனித உயிரைக் கொன்று, அந்த உடலுக்குள் நாயாடிகள் புகுந்து வாழ்ந்து கொண்டே இருப்பது தான் அந்த விசேச சக்தி. என்னடா இது ‘நாயாடி’கள்னு டைட்டில் வச்சிருக்காயங்கன்னு நாம நினைச்சதுக்கு டைட்டில் போடும் போதே சித்திரக் காட்சிகள் மூலம் தெளிவாகச் சொல்லிவிடுகிறார் டைரக்டரும் ஹீரோவுமான ஆதர்ஷ் மதிகாந்தம்.
கட் பண்ணா… கரண்ட் சிச்சுவேஷன். அதாங்க, இப்ப உள்ள ஆண்ட்ராய்டு சிச்சுவேசன். யூடியூப் கண்டெண்டுக்காக காத்திருக்கிறது ஆதர்ஷ், காதம்பரி, ரவிச்சந்திரன், அரவிந்த்சாமி, கீதாலட்சுமி டீம். அவர்களிடம் ஒரு எஸ்டேட் ஓனர் வருகிறார். தான் வாங்க நினைக்கும் பங்களாவில் நாயாடிகள் ஆவி இருப்பதாக அந்தக் காட்டுப் பகுதி மக்கள் சொல்கிறார்கள். அப்படிப்பட்ட ஆவி இருக்கா இல்லையான்னு நீங்க வந்து கவரேஜ் பண்ணிச் சொல்லுங்கனு ஒரு பெரிய அமெளண்டை டீல் பேசுகிறார். அந்த இளவட்ட டீம் எஸ் என்கிறது. அந்த பங்களாவை நோக்கி காட்டுக்குள் பயணிக்கிறது.
ஐவரில் மூவர் பலியாக ஆதர்ஷும் காதம்பரியும் மட்டுமே மிஞ்சுகின்றனர். அஞ்சி நடுங்கிய அவர்களும் கடைசியில் பலிபீடத்தில் ஏற்றப்படுகிறார்கள். அதிலிருந்து உயிருடன் மீண்டார்களா? என்பது தான் இந்த ‘நாயாடி’.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவராம் இந்தப் படத்தின் ஹீரோவும் டைரக்டருமான ஆதர்ஷ்மதிகாந்தம். அங்கே மெட்ரோ ரயிலில் வேலை பார்த்து சம்பாரித்ததைக் கொண்டு, ‘நாயாடி’ மூலம் தமிழ் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறார். திகில் படங்களில் ஒரு தினுசாகத் தான் க்ளைமாக்ஸ் வரை போகிறது. க்ளைமாக்சில் தான் நெருப்பு வளையம், அக்னிக்குண்டம், ஆஆ….ஊஊ….என்ற மந்திரவாதியின் சவுண்ட் என தமிழ் சினிமாவின் வழக்கமான திகில் படங்கள், பேய்ப்படங்கள் ட்ராக்கில் கொண்டு போய்விட்டார். இரண்டாவது குழப்பம், கதை எந்த ஏரியாவில் நடக்குதுங்கிறது நாம பார்த்த வரைக்கும் புரியல. இருந்தாலும் ‘நெக்ஸ்ட்’ பெஸ்டா வரட்டும் ஆதர்ஷ் மதிகாந்தம் சகோதரா.
மற்றபடி நடித்தவர்கள் அனைவருமே ஓரளவு மெச்சூரிட்டியுடன் தான் நடித்திருக்கிறார்கள். லொக்கேஷனும் மிரட்டலாத்தான் இருக்கு. கேமராமேனும் மியூசிக் டைரக்டரும் ‘நாயாடி’க்கு நன்றாகவே வேலை செய்திருக்கிறார்கள்.
பேப்பாடு பெரும்பாடுபட்ட கதை!
இந்தப் படத்தை ஜூன் 16—ஆம் தேதியே ரிலீஸ் பண்ணுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, தினசரிகளில் விளம்பரமும் கொடுத்துவிட்டார் ஆதர்ஷ்மதிகாந்தம். ஆனால் ஜூன்.15—ஆம் தேதி சென்னையில் மட்டும் இரண்டே இரண்டு தியேட்டர்கள், அதுவும் இரண்டே காட்சிகள் தான் என்ற சேதியைக் கேட்டதும் உண்மையிலேயே திகிலடித்துப் போய்விட்டார் ஆதர்ஷ். இதை பத்திரிகையாளர்கள் காட்சிக்கு முன்பாக ஓப்பனாகச் சொல்லி அழுதேவிட்டார் ஆதர்ஷ். “எங்க தப்பு நடக்குது, எப்படி நடக்குதுன்னே புரியலங்க.
இரண்டு தியேட்டர், இரண்டே ஷோன்னா எப்படிங்க எங்களால ஜீரணிக்க முடியும். இதையெல்லாம் நீங்க வெளில சொன்னாத்தான் எங்கள மாதிரி சின்னப்படங்களைத் தயாரிப்பவர்களின் கஷ்டம் தெரியும். இதுக்கு மேல சொல்றதுக்கு ஒண்ணுமில்லங்க. படத்தைப் பாருங்க, நிறை—குறைகளை தாராளமா எழுதுங்க. ரொம்ப நன்றிங்க” என ரொம்பவே உருக்கமாகப் பேசினார் ஆதர்ஷ்மதிகாந்தம்.
ஆதர்ஷின் ஆதங்கத்தையும் எழுதிட்டோம், படத்தைப் பத்தியும் எழுதிட்டோம்.
–மதுரைமாறன்