அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பணம் கேட்ட இளைஞருக்கு அடி உதை… !
சேலம் அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பணம் கேட்ட இளைஞருக்கு அடி உதை…
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அதிமுக சார்பாக, விலைவாசி உயர்வைக் கண்டித்தும், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க மறுக்கும் முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்தும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை தலைமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 2000 பேர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் சேலம் ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு, அதிமுக நிர்வாகிகள் ஒவ்வொருவரிடமும் நேரடியாக சென்று 200 ரூபாய் பணம் கொடுங்கள் என்று பேசிக் கொண்டிருந்தார். சிலர் 200 ரூபாய்க்கும் குறைவான பணத்தை கொடுக்க முயன்ற போது அதை சதீஷ் வாங்க மறுத்து திரும்பி சென்றார்.
இதேபோல் தொடர்ந்து சதீஷ் அனைவரையும் தொந்தரவு செய்து வந்ததால் அதிமுக நிர்வாகிகள் ஆத்திரமடைந்தனர். அப்போது சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் ஆர்ப்பாட்டம் முடித்துக் கொண்டு காரில் புறப்பட்டு சென்றார் .
அவரது கார் முன்பாக சென்ற சதீஷ், காரில் சாய்ந்தவாறு வெங்கடாசலத்திடமும் பணம் கேட்டார். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற அதிமுக நிர்வாகிகள் சதீஷை சரமாரியாக தாக்கினர்.
பின்னர் சதீஷின் சட்டையை பிடித்து தரதரவென இழுத்துச் சென்று அந்த இடத்தை விட்டு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சேலம் மாணவர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் காரில், ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தை விட்டுப் புறப்பட்டு சென்றார்.
இதனால் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
– சோழன்தேவ்