பதிவுத்துறை அலுவலர்கள் : ஜுலை 25-க்குள் சொத்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!
பதிவுத்துறை அலுவலர்கள் :
ஜுலை 25-க்குள்
சொத்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!
பதிவுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தங்களது சொத்து அறிக்கையை ஜுலை 25-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
பதிவுத்துறையில் பணியாற்றும் அனைத்து நிலை ஊழியர்களின் சொத்து அறிக்கையைப் பெற்று சரிபார்க்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு பணியாளர் நடத்தை விதிகள் 1973 விதி 7 (3) ல், அரசு பணியாளர் ஒவ்வொருவரும் அவர்களுடைய சொத்து அறிக்கையை ஒவ்வொரு ஐந்து ஆண்டுகால இடைவெளியில் உரிய படிவத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சார்-பதிவாளர், அதற்கு மேல் உள்ள அலுவலர்கள், மற்ற பணியாளர்கள் அனைவரும் தங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தொடர்புடைய நபர்களின் சொத்து அறிக்கையை ஆதார் எண், நிரந்தர கணக்கு எண் ஆகியவற்றுடன் இணைத்து ஒருவாரத்திற்குள் மாவட்டப் பதிவாளர்கள், துணைப் பதிவுத்துறை தலைவர்கள் அல்லது பதிவுத்துறை தலைவரிடம் ஜுலை 25-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.