தடுப்பூசி போடப்பட்ட சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்த 10 மாத பெண் குழந்தை!
தடுப்பூசி போடப்பட்ட சிறிது நேரத்தில்
பரிதாபமாக இறந்த
10 மாத பெண் குழந்தை!
தஞ்சை அருகே அங்கன்வாடி மையத்தில் தடுப்பூசி போடப்பட்ட சிறிது நேரத்தில் 10 மாத பெண் குழந்தை பரிதாபமாக இறந்தது.
இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை டாக்டர் மற்றும் செவிலியரை கைது செய்ய வேண்டும் எனக்கோரி அக்குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குழந்தையின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் மருத்துவமனை வளாகத்தில் பதட்டம் நீடிக்கிறது.
தஞ்சை அருகேயுள்ள மடிகை கிராமம் கீழத் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்(27). கம்பிகட்டும் தொழிலாளி. இவரது மனைவி கீதா. இவர்களது மகள் பத்து மாதமே ஆன தரணிகா.
இந்நிலையில், மடிகை கிராமத்தில் சுகாதாரத்துறை மூலம் குழந்தைகளுக்கு வழக்கம்போல் புதன்கிழமையான இன்று தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
பத்து மாத குழந்தையான தரணிக்கு தடுப்பூசி போட வேண்டுமென அதன் பெற்றோர்க்கு துறையூர் அங்கன்வாடி மையத்தில் இருந்து தொலைபேசி மூலம் அழைப்பு வந்துள்ளது.
அதன்படி, கீதா இன்று காலை குழந்தையை தூக்கிக் கொண்டு துறையூர் அங்கன்வாடி மையத்திற்கு சென்று அக்குழந்தைக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். விஜயா என்ற கிராம சுகாதார செவிலியர் தடுப்பூசி போட்டுள்ளார்.
தடுப்பூசி போட்ட வேகத்தில் குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்பட்டு, சுயநினைவை இழந்துள்ளது.
இதனால் அக்குழந்தையின் பெற்றோரும், கிராம சுகாதார செவிலியரும் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர், அக் குழந்தையை உடனடியாக அருகில் உள்ள காசவளநாடு புதூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தூக்கிச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தைக்கு மேலும் ஊசிகள் செலுத்தயுள்ளனர்.
இதனால் குழந்தையின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது.
இதையடுத்து, ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவரின் காரிலேயே அக் குழந்தையையும், பெற்றோரையும் தஞ்சை இராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தள்ளனர்.
ஆனால், அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் அக் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மருத்துவத்துறையினரின் அலட்சியம் காரணமாகவே அக்குழந்தை இறந்துவிட்டதாக அதன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
குழந்தையின் சாவுக்கு காரணமான சுகாதாரத்துறை பணியாளர்களை கைது செய்ய வேண்டும் எனக்கோரி அக்குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குழந்தையின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தஞ்சை வருவாய்க் கோட்டாட்சியர் (பொறுப்பு) பழனிவேல், வட்டாட்சியர் சக்திவேல், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சந்திரா மற்றும் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதனால் மருத்துவமனை வளாகத்தில் பதட்டம் நீடிக்கிறது.
இதற்கிடையே, எட்டு மாத குழந்தையான தரணிகாவுக்கு இதயத்தில் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இரு வாரங்களுக்கு முன் அக்குழந்தைக்கு சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த உண்மையை அக்குழந்தையின் தாய் கூறாமல் மறைத்துவிட்டார் என்கின்றனர் சுகாதராத்துறையினர்.
மடிகை அங்கன்வாடி மையத்தில் இன்று தரணிகாவையும் சேர்த்து மொத்தம் 9 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஏனைய 8 குழந்தைகளும் நலமுடன் உள்ளனர். தரணிகாவுக்கு இதயத்தில் பிரச்சினை இருப்பதால் ஒவ்வாமை ஏற்பட்டு இறந்துள்ளது என்கின்றனர் சுகாதாரத்துறை அதிகாரிகள்.