”வேலையே வேண்டாம் … ஆளைவிடு சாமி” – உச்சகட்ட விரக்தியில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் !
”வேலையே வேண்டாம் … ஆளைவிடு சாமி” – உச்சகட்ட விரக்தியில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்!
‘அரைக்காசு சம்பளம் என்றாலும் அரசாங்க உத்யோகம்’ என்ற வழக்கு மொழியாகட்டும்; நூற்றுக்கணக்கான காலி பணியிடங்களுக்கு இலட்சக்கணக்கில் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் தேர்வை எதிர்கொள்ளும் போட்டியாளர்களாகட்டும் இவை உணர்த்தும் உண்மை அரசு பணியின் மீதான மோகம் இன்னும் குறையவில்லை என்பதைத்தான்.
இந்த சூழலிலும், அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர், ”இந்த வேலையே வேண்டாம்”னு தலைமுழுக தயாராகிவிட்டார் எனில், எந்தளவுக்கு கல்விச்சூழல் பாழ்பட்டு கிடக்கிறது என்பதற்கு எடுப்பான உதாரணமாக அமைந்துவிட்டது.
”1-5 வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் மதிப்பீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தனித்தனி வகுப்புகளாக பாடநூல்கள் மூலம் கற்பிக்காமல் வகுப்புகளை ஒன்றிணைத்து பயிற்சி புத்தகங்கள் மூலம் கற்பிக்க கட்டாயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்” தான் பதவி விலகி கொள்வதாக நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டார கல்வி அலுவலருக்கு கடிதம் எழுதியிருக்கிறார், கொல்லிமலை ஆலத்தூர்நாடு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றிவரும் கே.கே.குப்பண்ணன்.
ஆசிரியர்களுக்கு என்னதான் பிரச்சினை? என்ற கேள்விகளோடு ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் வா.அண்ணாமலை அவர்களிடம் பேசினோம். ” எண்ணும் எழுத்தும் திட்டமே ஒரு விளம்பரத் திட்டம். நிதி ஒதுக்கீடு வவுச்சர் பயன்பாட்டிற்கான திட்டமாகத்தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முன்னேறிய மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தால் எவ்வித ஊக்கமும் இல்லை. மெல்ல கற்கும் மாணவர்களுக்கு எவ்வித முன்னேற்றமும் ஏற்படுவதற்கு வாய்ப்பும் இல்லை. அரும்பு, மொட்டு மலர் என்கிற அந்த அழகான வார்த்தைகளைத் தவிர வேறு எவ்வித முன்னேற்றமும் இல்லை. ஆசிரியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடிய எண்ணும் எழுத்தும் திட்டத்தையே தொடரக் கூடாது என்று ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்தத் திட்டத்தினை மதிப்பீடு செய்வதற்கு பி.எட் மாணவர்களை பள்ளிகளுக்கு அனுப்பி வைத்து ஆசிரியர்களை அவமதிக்கிறார்கள்.
எமிஸ் இணையதள சித்திரவதை, பிரிட்ஜ் கோர்ஸ் திட்டமான எண்ணும் எழுத்தும் திட்டத்தால் கல்வி நலனுக்கும், கற்பித்தல் திறனுக்கும் ஏற்பட்டுள்ள பெருத்த பாதிப்பு…
பயிற்சியை நடத்துவதற்கு குறைந்த எண்ணிக்கையில் உள்ள ஆசிரியர்களை கருத்தாளர்களாக நியமனம், எதுவாளர்களாக நியமனம், பயிற்சி கட்டகம் தயாரிப்பதற்கு மாதக்கணக்கில் நியமனம் ஒட்டுமொத்தத்தில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு வாய்ப்பளிக்காத திட்டங்களாக இவை அமைந்திருக்கின்றன.
பொதுத்தேர்வே வேண்டாம் என்கிறோம். மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசாங்கம் வைக்கக்கூடிய பொதுத் தேர்வினை கடுமையாக எதிர்க்கிறோம். ஆனால் எண்ணும் எழுத்தும் திட்டத்தில் வாராவாரம் வெள்ளிக்கிழமை தமிழ்நாடு முழுவதும் 1-5 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு போல் மதிப்பீடு திறன்பேசி (செல்போன்) வழியாக நடைபெறுகிறது.
ஆறு, ஏழு, எட்டு வகுப்பு மாணவர்களுக்கு ஒரே வினாத்தாள் வைத்து மாநிலம் முழுவதும் பொதுத்தேர்வினை நடத்துகிறார்கள். SCERT இயக்ககம் பொதுத்தேர்வினை திட்டமிட்டு நடத்துவதில் உறுதியாக உள்ளார்கள்.
ஒட்டுமொத்தத்தில் தேசியக் கல்விக் கொள்கையினை பகிரங்கமாக SCERT இயக்ககம் தமிழ்நாட்டில் அமல்படுத்தி வருகிறது. SCERT இயக்ககம் மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை போன்று நவீன குலக்கல்வி திட்டத்தை அமல் படுத்துவதில் முனைப்புடன் மத்திய அரசின் கிளையாக செயல்பட்டு வருகிறார்கள்.
பள்ளிக்கல்வித் துறை தனியார் கம்பெனிகள் நிர்வாகத்தில் சிக்கித் திணறுகிறதா? சுயாட்சி பெற்ற அதிகார நிர்வாக மையமாக SCERT இயக்ககம் செயல்பட்டு வருகிறதா? ” என காட்டமான கேள்விகளை முன்வைக்கிறார், ஐபெட்டோ அமைப்பின் தேசியச் செயலாளர் வா.அண்ணாமலை.
எழுத்தாளரும் அரசுப்பள்ளி ஆசிரியருமான சுகிர்தராணிகூட, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை பட்டியிலிட்டு பேசாமல் வேலையை ராஜினாமா செய்வதைத்தவிர வேறு வழியில்லை என்பதாக கருத்து தெரிவித்திருந்தார்.
பள்ளி அறைகளுக்கு அப்பால் இலக்கியவாதி என்ற தடத்திலும் பயணிக்கும் சுகிர்தராணி போன்றோர்களாலேயே சமாளிக்க முடியாத அளவுக்குத்தான் கல்வித்துறையின் நெருக்கடிகள் இருக்கின்றன. ஆசிரியர்களின் நியாயமான குரலுக்கு செவிசாய்ப்பாரா, கல்வி அமைச்சர்?
– வே.தினகரன்.