அங்குசம் பார்வையில் ‘ சித்தா ‘ படம் எப்படி இருக்கு ?
அங்குசம் பார்வையில் ‘சித்தா’.
தயாரிப்பு: ETAKI எண்ணெய் டெய்ன்மெண்ட்’ சித்தார்த். தமிழக ரிலீஸ்: ரெட் ஜெயண்ட் மூவிஸ். டைரக்டர்: எஸ்.யூ.அருண்குமார். ஆர்ட்டிஸ்ட்: சித்தார்த், நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர், சஹஷ்ரா, ஆபியா தஸ்னீம், பாலாஜி. டெக்னீஷியன்கள்: பாடல்கள் இசை: சந்தோஷ் நாராயணன், திபு நைனன் தாமஸ், பின்னணி இசை: விஷால் சந்திரசேகர். ஒளிப்பதிவு: பாலாஜி சுப்பிரமணியம், எடிட்டர்: சுரேஷ் பிரசாத், ஆர்ட் டைரக்டர்: சி.எஸ்.பாலசந்தர். பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா & ரேகா டி ஒன்.
பழனி நகராட்சியில் அதிகாரியாக இருக்கிறார் சித்தார்த். தனது அண்ணன் மறைவுக்குப் பிறகு அண்ணிக்கும் குழந்தை சுந்தரிக்கும் பாதுகாப்பாக இருக்கிறார். தனது சித்தப்பா சித்தார்த்தை “சித்தா” என செல்லமாக கூப்பிடுகிறது குழந்தை சுந்தரி.
சித்தாவுக்கு உலகமே சுந்தரி தான். அதே போல் சித்தா எங்கே இருக்கான்னு சித்தார்த் கேட்கும் போது இதயத்தில் கை வைத்து சொல்கிறது குழந்தை சுந்தரி. ஒரு நாள் சுந்தரியும் அவளின் வகுப்புத் தோழி பொன்னியும் சித்தாவிடம் சொல்லாமல் பள்ளி முடிந்ததும் மான்களை பார்க்க ஷேர் ஆட்டோவில் ஏறுகிறார்கள். ஆனால் திடீரென மனம் மாறிய சுந்தரி “நான் வரல” என ஆட்டோவில் இருந்து இறங்கிவிடுகிறாள்.

பொன்னி மட்டும் போகிறாள். போய் வந்ததில் இருந்து பொன்னியின் உடல் மொழியில் மாற்றம், நடுக்கம். “என்ன தான் உனக்கு பிரச்சினை” என சித்தா கேட்டபடி பொன்னியை ஆறுதலாக தொட, உடல் நடுங்குகிறது அவளுக்கு. பொன்னியை சீரழித்ததாக சித்தா மீது வழக்கு பாய்கிறது. அதிலிருந்து மீண்டு வெளியே வந்த சில நாட்களில் சுந்தரி காணாமல் போகிறாள்.
பொன்னியின் நிலைமைக்கு உண்மையான காரணம் யார்? சுந்தரி கிடைத்தாளா? என்பதை இரண்டரை மணி நேரம் உணர்வுப் பூர்வமாக, உயிரோட்டம் நிரம்பிய குடும்பக் கதை யாக நகர்த்தியிருக்கிறார் ‘சித்தா’ வின் டைரக்டர் அருண்குமார்.
சித்தார்த் பணிபுரியும் அதே பழனி நகராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலைக்குச் சேரும் நிமிஷா சஜயன் பல சீன்களில் பாஸ் மார்க் வாங்குகிறார். நிமிஷாவுக்கும் சித்தார்த்துக்கும் இடையிலான காதல் எபிசோடை டயலாக் மூலமே புரிய வைத்து கரண்ட் சிச்சுவேஷனுடன் கரெக்டா மேட்ச் பண்ணிவிட்டார் டைரக்டர். அது சரி குழந்தைகள் இரண்டும் சித்தார்த் தொட முயற்சிக்கும் போது நடுங்குகின்றன. அதுக்கு காரணம் இருக்கு.

ஆனால் இரண்டு சீன்களில் சித்தார்த் தொடும் போது நிமிஷாவின் உடலும் வெட வெடவென நடுங்குகிறதே ஏன் டைரக்டர் சார்? அதே போல் வசன ஒலிப்பதிவு தான் சித்தாவுக்கு மைனஸ் பாயிண்ட். பெண் குழந்தைகளை சீரழிக்கும் கொடூரன்களைப் பற்றியும் போக்சோ சட்டம் குறித்தும் அழுத்தமாக பேசியதற்காக டைரக்டரையும் படத்தை தயாரித்த சித்தார்த்தையும் பாராட்டலாம்.
ஆனால் சில வக்கிர சீன்களை அப்பட்டமாக காட்டுவது, குழந்தைகளை சோர்வாக காட்டுவது, மிகவும் பலவீனமான நிலையில் மருத்துவமனையில் சுந்தரி இருப்பது போன்ற சீன்களையெல்லாம் பார்த்தால் நமக்கு நெஞ்சே வெடிச்சிரும் போல இருந்துச்சு. குழந்தைகள் விசயத்தில் இப்படியெல்லாம் பொறுப்பற்ற தனமாக இருக்கக் கூடாது டைரக்டர் சார்.
-மதுரை மாறன்.