பாமக 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 9+1 =10 தொகுதிகளில் போட்டியிட முடிவு !
பாமக நாடாளுமன்றத் தேர்தலில் 9+1 = 10 தொகுதிகளில் போட்டியிட முடிவு.
அண்மையில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி தலைமையில் உயர்மட்டக்குழுத் தலைவர் கலந்துகொண்ட கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாமகவின் வியூகம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதில் சில முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்களும் வெளியாகியுள்ளன.
2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி இல்லை. பாஜகவோடு கூட்டணி தொடர்கிறது. தமிழ்நாட்டில் பாமக 9 மக்களவைத் தொகுதிகளிலும் புதுச்சேரியில் ஒரு மக்களவையிலும் போட்டியிடுவது என்று முடிவெடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிடும் தொகுதிகளும் கண்டறியப்பட்டுள்ளன.
1.தர்மபுரி 2.சேலம் 3.சிதம்பரம் 4.நாகப்பட்டினம் 5. மயிலாடுதுறை 6.அரக்கோணம் 7.ஸ்ரீபெரும்புதூர் 8.காஞ்சிபுரம் 9.ஆரணி 10.புதுச்சேரி என்பதாகும்.
பாஜக கூட்டணியில் தமிழ்நாட்டில் வேண்டுமானால் ஒன்றிரண்டு தொகுதிகளைக் குறைத்துக்கொள்ளும், புதுச்சேரி மக்களவைத் தொகுதி கட்டாயம் தேவை என்பதைத் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மக்களவை தொகுதி பாமகவுக்கு மறுக்கப்பட்டால் பாமக தனித்துப்போட்டியிடும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாஜகவோடு பாமக கொண்டுள்ள இந்தக் கூட்டணி 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு மட்டுமே. 2026இல் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பொருந்தாது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி அமைக்கப்படும். கூட்டணியின் தலைவர் மருத்துவர் அன்புமணி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாமகவுக்கு மிகவும் அணுக்கமாக இருக்கும் தேவேந்திரக் குல வேளாளர் சங்கம் சார்ந்தவர்கள், விடுதலை சிறுத்தைகள் மீது கருத்து முரண் கொண்டுள்ள பறையர் சமூகம் சார்ந்தவர்களை 2026 சட்டமன்றத் தேர்தலில் ரிசர்வ் தொகுதிகளில் பாமக சார்பில் போட்டியிட வைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
2024 தேர்தலில் பாஜகவோடு கூட்டணி, 2026 தேர்தலில் தனித்துப்போட்டி என்ற முடிவு பாமகவைக் கரைசேர்க்குமா? புரியவில்லையே……?
– ஆதவன்