2024-25 கல்லூரிகளில் ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு என்னாச்சு ?
ஏழை,எளிய மாணவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பெரிதும் பயன்பெறும்...
2024-25 கல்லூரிகளில் ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு நடைமுறைக்கு வருமா? சிக்கல் தீருமா? பொறியியல் கல்லூரிகளுக்கு நடப்பது போல, அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கும், ஒற்றைச் சாளர முறையில், மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என, தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், கல்வி ஆர்வலர்கள் மற்றும் பேராசிரியப் பெருமக்கள் வேண்டுகோளைக் கடந்த 5 ஆண்டுகளாகத் தமிழ்நாடு உயர்கல்வித் துறையை வலியுறுத்தி வந்தன.
தமிழகத்தில், 81 அரசு கல்லூரிகள், 163 அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட சுயநிதி கலை கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு, முறையான நெறிமுறைகளை ஆண்டுதோறும் உயர்கல்வித்துறை வெளியிட்டாலும், அவை பின்பற்றப்படுவதில்லை.
இதனால், மாணவர் சேர்க்கையில் அதிகபட்சக் கட்டண வசூல், இடஒதுக்கீட்டை பின்பற்றாத மாணவர் சேர்க்கை, கட்டாய நன்கொடை வசூல், சுயநிதி பாடப்பிரிவுகளுக்கு முன்னுரிமை, மாணவர் சேர்க்கை இல்லையெனக் கூறி, அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளை மூடுதல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஒற்றைச் சாளர முறையைப் பின்பற்றினால் மட்டுமே, இம்முறைகேடுகளைக் களைய முடியும் என, உயர்கல்வி துறை செயலர் மற்றும் இயக்குனருக்கு, கடந்த கல்வியாண்டின் போதே தெரிவிக்கப்பட்டுள்ளது. நடைமுறை சிக்கல்கள், கால அவகாசம் இன்மை உள்ளிட்ட காரணங்களால், அடுத்த கல்வியாண்டில் (2024-25) ஒற்றைச் சாளர முறையை அமல் செய்யப் பரிசீலிக்கப்படும் எனக் கல்லூரிக் கல்வி இயக்குநர் கூறினார்.
மேலும், தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு உதவி பெறும் கல்லூரி முதல்வர்களின் கூட்டத்தைக் கூட்டிக் கருத்தை அறிந்து, தொடர்ந்து, இந்தக் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை ஒற்றைச் சாளரமுறையில் நடைபெறும் என்று ஆணை வெளியிடப்பட்டது. இந்நிலையில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு, தமிழ்நாடு தற்போது தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறையில் உள்ளது.
எதிர்வரும் மே-6ஆம் நாள் +2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளது. கோவையில் ஒரு கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டது. ஆன்-லைனில் விண்ணப்பம் செய்யலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டது. உடனே பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்ந்த கல்லூரி ஆசிரியர் ஒருவர் கோவை மண்டலக் கல்லூரிக் கல்வி இணைஇயக்குநர் அவர்களிடம் முறையீடு செய்தார்.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு,“கல்லூரிகளில் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு ஒற்றைச் சாளர முறையில் நடைபெறவுள்ள நிலையில், நீங்கள் மாணவர் சேர்க்கைக்கு அறிவிப்பு வெளியிட்டமைக்கு விளக்கம் அளிக்கவேண்டும்” என்று கடிதம் எழுதியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் குறிப்பாகத் திருச்சியில் தூய வளனார் கல்லூரி, புனிதச் சிலுவைக் கல்லூரி, பிஷப் ஹீபர் கல்லூரிகள் ஆன்-லைனில் மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மதுரை கல்லூரிக் கல்வி இணைஇயக்குநர் அவர்களிடம் அங்குசம் கேட்டபோது, “வரும் கல்வியாண்டில் ஒற்றைச் சாளரமுறையில் உதவி பெறும் பாடப் பிரிவுகள் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும்.
உதவி பெறும் கல்லூரிகளில் நடைபெற்று வரும் சுயநிதிப் பாடப்பிரிவுகளுக்கும், சுயநிதி கல்லூரிகளுக்கும் ஒற்றைச் சாளரமுறை அடுத்த கல்வியாண்டில்தான் (2025-26) நடைமுறைக்கு வரும் என்றும், இது குறித்துக் கல்லூரிக் கல்வி இயக்குநர் விரைவில் இதற்கான முறையான அறிவிப்பை வெளியிடுவார்” என்று தெரிவித்தார்.
+2 தேர்வு முடிவுகள் வெளிவர 10 நாள்கள் இருக்கும் நிலையில் கல்லூரிக் கல்வி இயக்குநர் இதுவரை ஒற்றைச் சாளரமுறை குறித்த மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடவில்லை. இது குறித்து அங்குசம் விசாரித்தபோது,“தற்போது தேர்தல் நடைமுறையில் உள்ளதால் புதிய அறிவிப்புகளை வெளியிட முடியாது” என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்துக் கல்வியாளர் சி.ஆர்.இரவி வெளியிட்டுள்ள அறிக்கையில்,“தேர்தல் ஆணையத்திடம் முறையாக அனுமதியைப் பெற்று ஒற்றைச் சாளரமுறையில் மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடவேண்டும். இல்லையென்றால், கடந்த ஆண்டு வழிகாட்டு நெறிமுறைகளை உதவி பெறும் கல்லூரிகள் வைத்துக்கொண்டு, ஒற்றைச் சாளரமுறையில் மாணவர் சேர்க்கையை விரைவாக நடத்தி முடித்துவிடும்” என்று அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது.
ஒற்றைச் சாளரமுறையால் மாணவர் சேர்க்கை நடைபெறும்போது ஏழை,எளிய மாணவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பெரிதும் பயன்பெறுவார்கள் என்பதன் அடிப்படையில் கல்லூரிக் கல்வி இயக்குநர் விரைந்து செயல்பட்டு, இந்தக் கல்வியாண்டிலேயே ஒற்றைச் சாளரமுறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கல்வியாளர்கள், பொதுமக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.
– ஆதவன்