பள்ளியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா ! புதுமை புகுத்திய பெட்டவாய்த்தலை சேவை சாந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி !
கல்லூரிகளில், பல்கலைக் கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடைபெறுவதை அறிவோம். பெட்டவாய்த்தலை சேவை சாந்தி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஒரு புதுமையான விழா நடைபெற்ற அதிசயத்தைக் கண்டு மகிழ்ந்தோம். தென்னகத் தொடர்கல்வி வாரியம் இரு சேவைச் சான்றோருக்கு விருதுகளை வழங்கும் விழாவினை இங்கே நிகழ்த்தியது.
ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற தொண்டு நிறுவனமான ASSIST நிறுவனத்தின் இயக்குநர் ரெங்கா ராவ் அவர்களுக்கு தென் மேற்கு அமெரிக்கப் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கியதற்கான பாராட்டு நிகழ்வாகவும் இது அமைந்தது. சென்னை NIST அமைப்பின் நிறுவனர் முனைவர் S. நடராஜன் அவர்களுக்கும் , திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கத்தின் தலைவரும், சமூக செயல்பாட்டாளருமான வை.ஜவஹர் ஆறுமுகம் அவர்களுக்கும் தென்னகத் தொடர்கல்வி வாரியம் சிறந்த சேவைக்கான அப்துல் கலாம் விருதினை வழங்கிச் சிறப்பித்தது.
இந்த விழாவுக்கு தமிழ்நாடு அரசு முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜி. ஏ. ராஜ்குமார் தலைமை வகித்தார் . பத்மஶ்ரீ மா . சுப்புராமன் , பேராசிரியை சங்கரி, மத்திய அரசு நேரு யுவக் கேந்திராவின் முன்னாள் அலுவலர் சுப்ரமணியம், கல்வியாளர் கிருஷ்ணமூர்த்தி , இயற்கை விவசாய விஞ்ஞானி ஜெயராமன் போன்ற சான்றோர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.
தென்னகத் தொடர்கல்வி வாரியத்தின் தலைவர் டாக்டர் கே. கோவிந்தராஜ் வரவேற்றுப் பேசினார். 52 ஆண்டுகளுக்கு மேலாக சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் ரெங்கா ராவ் அவர்களுக்கு அமெரிக்க பல்கலைக் கழக டாக்டர் பட்டம் பெற்றமைக்காக இங்கு பாராட்டுவதில் பெருமை அடைகிறோம். அவர் மாநில அளவிலும், தேசிய அளவிலும் பல விருதுகளைப் பெற்றவர். வி.ஆர்.ஓ நிறுவனத்திற்காக திருச்சியிலும் பணியாற்றியவர். எங்களுக்கெல்லாம் முன்னோடி என்று கே. கோவிந்தராஜ் தனது வரவேற்புரையில் குறிப்பிட்டார்.
இந்த விழாவில் வாழ்த்திப் பேசிய பேராசிரியை சங்கரி இங்கு அமெரிக்க பல்கலைக் கழகத்தில் டாக்டர் பெற்ற ரெங்கா ராவ் அவர்களும் , இதர விருதுகள் பெறுவோரும் இதனை வழங்கும் சேவை கே.கோவிந்தராஜ் அவர்களும் ஆற்றிவருவது நம்பமுடியாத தனி மனித சேவைகள் என்று பாராட்டினார்.
ஏற்புரையாற்றிய டாக்டர் ரெங்காராவ் ஆந்திரா – தமிழ்நாட்டை இணைக்கும் விழா இது என்று கூறி மகிழ்ந்தார். திருச்சி சேவை நிறுவனத்துடன் இணைந்து 30 வருடங்களாக செயல்பட்டு வருகிறோம். இந்தப் பட்டம் அளிப்பு சமூகப் பணிகளில் என்னை மேலும் ஊக்கப்படுத்தும். இந்த அங்கீகாரத்தை வழங்கிய டாக்டர் கே. கோவிந்தராஜு அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சாகும்வரை இதே சமூகப்பணிகளைச் செய்து வருவேன் என்று கூறினார்.
எழுத்தாளர் ஜவஹர் மாணவர்களிடையே உரையாற்றினார். படிப்பு , வேலை என்பதைத் தாண்டி மாணவர்கள் தனித்தன்மை பெற வேண்டும் என்று ஆறுமுகம் கேட்டுக் கொண்டார்.
சிறந்த எழுத்தாளர் மற்றும் சமூக செயல்பாட்டாளருக்கான அப்துல் கலாம் விருதினை பெற்றுக் கொண்டு ஏற்புரை வழங்கிய எழுத்தாளர் வை.ஜவஹர் ”புத்தாண்டு நெருக்கத்தில் மகிழ்ச்சி பொங்கும் ஒரு இனிய விழா ! தனித்தன்மை பெறுங்கள்!” என்பதாக மாணவர்களிடையே வேண்டுகோளை விடுத்தார்.
மேலும், “நான் இந்தப் பெட்டவாய்த்தலையில் இருந்துதான் நிருபராக எழுத்துப் பணியைத் துவங்கினேன். பின்னர் ஒரு கட்டத்தில் சமூகப் பணியைத் துவங்க எனக்கு வழி காட்டியதும் இந்த சேவை நிறுவனத்தின் இயக்குநர் கே.கோவிந்தராஜு அவர்கள்தான். பலருக்கு என்னைப் பிடிக்காது. காரணம் நான் கோபக்காரன். தவறுகளைச் சகிக்காமல் கண்டிப்பவன். நேர்மையை எதிர்பார்ப்பவன். தவறுகளை அனுசரித்துப் போகமாட்டேன். கடுமையான ஆள். அதனால் என்னை அணுகவும் பேசவும் அஞ்சுவார்கள். இங்கே நிறைய மாணவர்கள் இருப்பதால் சொல்கிறன். நீங்கள் பாடங்களைப் படிப்பதோடு நிற்காமல் வேறு புத்தகங்களையும் படியுங்கள்.
நீங்கள் கண்ணில் பார்க்கிற, காதில் கேட்கிற , நூல்களில் படிக்கிற ஒவ்வொன்றில் இருந்தும் பாடம் கற்க முயற்சி செய்யுங்கள் . அறிவைப் பெறுங்கள். இதன் மூலமே உங்களுக்கு தனித்தன்மை உருவாகும். நீங்கள் உயருவது முக்கியம் அல்ல. உங்களால் எத்தனை பேர் உயர்ந்தார்கள் என்பதை வைத்தே உங்களை மதிப்பிடுவேன். நமக்காக என்பதைத் தாண்டி பிறருக்காகவும் வாழ வேண்டும் என்று நினையுங்கள் . இங்கு மேடையில் இருப்பவர்கள் அப்படித் தனித்தன்மை பெற்று உயர்ந்தவர்களே” என்பதாக தனது உரையை நிறைவு செய்தார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தொடர்ந்து இவ்விழாவில் பேசிய, சேவை கே. கோவிந்தராஜு , “ஜவஹர் பிறரின் குறைகளை, தவறுகளை சுட்டிக் காட்டத் தயங்காதவர். நண்பர்களான என்னிடமும், சுப்புராமனிமும் கூட அப்படியே குறைகளைச் சுட்டிக் காட்டுவார் . நாங்கள் அவர் மீது வருத்தப்பட்டது இல்லை. அவர் பேசுகிற, செய்கிற எதுவும் அவரருடைய நன்மைக்காக இருக்காது. எல்லாவற்றிலும் ஒரு நியாயம் இருக்கும்” என்பதை சுட்டிக்காட்டி நிறைவு செய்தார்.
வயதில் முதுமையை எட்டியவர்களாக மட்டுமன்றி; பொதுவாழ்வில் தன்னலம் கருதாமல், முன்னுதாரணமான சேவை பணியாற்றியதன் வாயிலாக பெற்ற அனுபவங்களை, அறிவார்ந்த கருத்துக்களை மாணவர்களிடையே விதைக்கும் நல் நிகழ்வாக இது அமைந்தது.
– அருண்.