இது காய்ச்சல் காலம்…! Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
ஆம்... தமிழ்நாட்டின் பருவநிலை தட்பவெப்ப மாற்றங்கள்.. நிலவும் குளிர் – மழை சூழ்நிலை வைரஸ்களின் தொற்றுப் பரவலுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்துகிறது.
வருடத்தின் இறுதியில் மழைக்காலம்- பனிக்காலம் என்பது எப்போதும் வைரஸ்கள் எளிதாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவ உகந்த காலமாக இருக்கிறது.
தற்போது இன்ஃப்ளூயன்சா ஏ வகை வைரஸ், அடினோ வைரஸ் ஆர் எஸ் வி எனும் ரெஸ்பிரேட்டரி சிண்ஸிடியல் வைரஸ், கொரோனா வைரஸ், சின்னம்மை வைரஸ், கூகைக்கட்டு அம்மை வைரஸ், மீசில்ஸ் வைரஸ் ஆகிய சுவாசப்பாதை வழி பரவும் வைரஸ்கள் எளிதாகப் பரவுகின்றன.
இன்ஃபளூயன்சா அடினோ வைரஸ் வகையினால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாதிக்கப்படலாம்.
உள்ளே நுழைந்திருப்பது வைரஸ் என்பதை அதற்குகெதிராக நமது உடல் நடத்தும் போர் உக்கிரமாக இருப்பதை வைத்தே அறிய முடியும்.
காய்ச்சல் 101° / பேரன்ஹீட்டுக்கு மேல் இருக்கும் கடுமையான உடல் சோர்வு / தசைவலி இதனுடன் தொண்டை வலி வறட்டு இருமல் –பிறகு சளியுடன் இருமல் வருவது, தும்மல் / மூக்கடைப்பு / மூக்கொழுகுதல் என்று காய்ச்சலுடன் சுவாசப்பாதை தொற்று வெளிப்படும்.
இன்ஃப்ளூயன்சா, ஆர்எஸ்வி (RESPIRATORY SYNCYTIAL VIRUS)
ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு அதில் ஒரு வயதுக்கும் குறைவான சிசுக்களுக்கு தீவிர நுரையீரல் தொற்றாக வெளிப்படலாம்.
உங்களின் ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைக்கு அதீத காய்ச்சலுடன் கூடவே தீவிர நுரையீரல் தொற்றும் ஏற்பட்டிருக்கும். இதை நியுமோனியா என்கிறோம்.
குழந்தை மூச்சு விடுவதற்கு திணறும் பொதுவாக மூச்சு விடும் போது வயிற்றுப் பகுதி தசைகள் மேலே இழுக்காது. ஆனால் நுரையீரலில் நியுமோனியா இருக்கும் சிசுக்களுக்கு நெஞ்சாங்கூட்டு தசைகள் சோர்வடைந்து வயிற்றுப் பகுதி தசைகளும் சேர்ந்து வேலை செய்யும். இதனால் மூச்சு விடுவதற்கு இழுத்து இழுத்து விடும்.
நீங்களே நிமிடத்திற்கு எத்தனை முறை மூச்சுவிடுகிறது என்று மேலங்கியை நீக்கி விட்டு சோதனை செய்து பார்க்கவும். ஒரு நிமிடத்திற்கு 20 முதல் 40 முறை மூச்சு விடுவது – நார்மல் அதற்கு மேல் மூச்சு விடும் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் “மூச்சுத் திணறல்” ஏற்படுகிறது என்று பொருள். உள்ளே நுரையீரலில் நியுமோனியா தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக மருத்துவரிடம் காட்டி சிகிச்சை பெற வேண்டும்.
மம்ப்ஸ் எனும் கூகைக்கட்டு அம்மை
இந்த வைரஸும் சுவாசப்பாதை வழியாக இருமுவது தும்முவதால் பரவுகிறது.
இந்த வகைத் தொற்றில் காய்ச்சலுடன் கழுத்தின் இருபுறமும் காதுகளுக்குக் கீழ் நெறிகட்டிக் கொண்டு வீக்கம் ஏற்படும். இது பெரும்பாலும் பத்து வயதுக்குட்பட்ட சிறார் சிறுமியரில் ஏற்படுகிறது.
மீசில்ஸ் எனும் தட்டம்மை (சுவாசப்பாதை வழியாக பரவும் தொற்று)
காய்ச்சல், இருமல், மூக்கொழுகல், சிவந்த கண்கள், உடல் முழுவதும் தோலில் கொப்புளங்கள் இருக்கும். வாயினுள் நீல-வெள்ளை நிற மையப்பகுதி கொண்ட சிறிய சிவப்பு நிற புள்ளிகள் போன்ற தோற்றம். மிக மிக எளிதாகப் பிறருக்குப் பரவும் தன்மை கொண்டது. இந்த நோயைத் தடுப்பதற்கு ஒன்பது மாத முடிவிலும் 16 முதல் 24 மாதங்களிலும் மீசில்ஸ் ரூபெல்லா தடுப்பூசி இலவசமாகக் கிடைக்கிறது.
கை கால் வாய் நோய்/தக்காளிக் காய்ச்சல் (Hand Foot Mouth Disease)
இது குழந்தைகளுக்கு ஏற்படும் வைரஸ் தொற்று – எளிதில் மற்றொரு குழந்தைக்கு பரவும் தன்மையுடன் இருக்கும். கை, கால், வாய்ப்புகளில் கொப்புளங்கள் ஏற்பட்டு காய்ச்சல் இருக்கும். பெரும்பாலும் இது தானாக குணமாகும் நோய்.
எவ்வாறு தொற்று ஏற்படாமல் தடுப்பது?
இந்த காலத்தில் பரவும் வைரஸ் தொற்றுகள் – இருமுவது தும்முவது மூலம் பரவுகின்றன. எனவே, தொற்று ஏற்பட்டவர்களைக் கட்டாயம் வீட்டிலேயே வைத்து பராமரிக்க வேண்டும். பள்ளிகளுக்கோ பொது இடங்களுக்கோ அழைத்துச் செல்லக் கூடாது. இதன் மூலம் தொற்று பிறருக்குப் பரவுவதை தடுக்கலாம். அடுத்து பொது இடங்களுக்கும் கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களுக்கும் செல்லும் போது முகக்கவசம் அணிவதன் மூலம் தொற்றுப் பரவலை ஓரளவு தடுக்க முடியும். கூடவே கைகளை சோப்/ சேனிடைசர் கொண்டு அவ்வப்போது கழுவி வர வேண்டும்.
இன்ஃபளூயன்சாவில் பன்றிக் காய்ச்சல் எனப்படும் ஹெச்1 என்1 வகை – தொற்று எதிர்ப்பு சக்தி குன்றியோருக்கும், முதியோருக்கும், குழந்தைகளுக்கும் – சற்று தீவிரத்துடன் வெளிப்படக்கூடும். இதை தடுக்கும் முகமாக வருடம் ஒருமுறை போட்டுக் கொள்ளும் விதமாக ஃப்ளூ தடுப்பூசி சந்தையில் விலைக்குக் கிடைக்கிறது. அதை வாய்ப்பிருப்பவர்கள் மருத்துவர் பரிந்துரையில் பெற்றுக் கொள்ளலாம்.
புரதச்சத்து நிரம்பிய உணவு முறை
– தினமும் ஒன்று/இரண்டு முட்டைகள்
– மாமிசம் / முட்டை / மீன்
– நட்ஸ்/ பயறு/ கடலை
– சோயா / டோஃபு
– பனீர் / சீஸ்/ வெண்ணெய் உள்ளிட்ட உணவுகளைத் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்.
இவையன்றி பருவகாலத்தில் மழைப் பொழிவின் காரணமாக – கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் ஆங்காங்கே டெங்கு காய்ச்சலும் பரவி வருகிறது. வைரஸ் காய்ச்சலைப் பொருத்தவரை,
– காய்ச்சல் ஆரம்பிக்கும் போதே 101° ஃபேரஃஹீட்டுக்கு மேல் பதிவாகும்.
– கடும் உடல் வலி + சோர்வு என்றே ஆரம்பிக்கும்.
இதில் சுவாசப்பாதை தொற்றின் அறிகுறிகளாக காய்ச்சல் + சளி+ இருமல் + தொண்டை வலி ஆகியன இருக்கும்.
டெங்குவில் சுவாசப்பாதை அறிகுறிகள் இருக்காது. கடுமையான காய்ச்சல் + உடல் வலி + மூட்டுக்கு மூட்டு வலி பிரித்தெடுக்கும் + கண்களுக்குள் வலி + தலைவலி என்று இருக்கும்.
இப்போது இரண்டும் கலந்த அறிகுறிகளும் வெளிப்படலாம். அதாவது சுவாசப்பாதை வைரஸ் தாக்கிய ஒருவருக்கும் டெங்கு வைரஸும் ஒரே சமயத்தில் தாக்கியிருக்கலாம். எனவே தீவிரமான காய்ச்சல் இருப்பின் கண்டிப்பாக மருத்துவரை சந்திக்க வேண்டும்.
டெங்குவைப் பொருத்தவரை காய்ச்சல் முதல் மூன்று நாட்கள் மிகத் தீவிரமாக – இருக்கும் . பிறகு அப்படியே காய்ச்சல் காணாமல் போய் விடும். ஆனால் பாதம் – உள்ளங்கை போன்றவை குளிர்ச்சியாக இருக்கும்.
டெங்குவைப் பொருத்தவரை காய்ச்சல் – விட்ட பிறகு தான் ஆபத்தான காலகட்டம் ஆரம்பிக்கும். இந்த CRITICAL PHASE அடுத்த மூன்று முதல் ஐந்து நாட்கள் தொடரும்.
டெங்கு வைரஸுக்கு எதிராக நமது உடல் புரியும் போர் புரியும் போது ஒரு கட்டத்துக்கு மேல் தீவிரமாக எதிர்ப்பு சக்தி வேலை செய்யும். டெங்கு வைரஸை எதிர்க்கும் அதே வேலையில் நமது உடலில் உள்ள ரத்த நாளங்களையும் உறுப்புகளையும் இந்த எதிர்ப்பு சக்தி பாதிக்கும். இதை “எதிர்ப்புப் புயல்” (CYTOKINE STORM) என்று அழைக்கிறோம்.
இந்த காலத்தில் நுண் ரத்த நாளங்களில் ரத்தம் நாளத்தின் உள்ளிருந்து வெளிப்புறத்துக்கு வந்து விடும். இதை Capillary Leakage என்று அழைக்கிறோம்.
இதன் விளைவாக
– கால் கனுக்கால் பகுதியில் வீக்கம்
– நுரையீரலுக்கு வெளிப்புறத்தில் நீர் கோர்த்தல்
– வயிற்றுப் பகுதியில் நீர் கோர்த்தல்
– பித்த பையில் நீர் கோர்த்தல்
போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
ரத்த தட்டணுக்களின் முக்கியப் பணி – ரத்தப்போக்கைத் தடுத்தல் ஆகும்.
டெங்கு வைரஸுடன் நடக்கும் போரின் விளைவாக கொலேட்டரல் டேமேஜின் ஒரு பகுதியாக ரத்த தட்டணுக்களின் செயல் திறனில் பாதிப்பு ஏற்படும். ரத்த தட்டணுக்களின் அழிவும் சற்று கூடுதலாக இருக்கும்.
இதன் விளைவாக
– பல் ஈறுகளில் ரத்தக் கசிவு
– மலத்தில் ரத்தம் வெளியேறுவது ( இதனால் மலம் கருப்பாக செல்லும்)
– உடல் முழுவதும் சிறு சிறு சிவப்பு புள்ளிகளாக தோன்றுவது ( நுண்ணிய ரத்த நாள ரத்தக் கசிவு)
நம் வீடுகளைச் சுற்றியும் வீடுகளிலும் சிறிய அளவு நீர் சேர்ந்தாலும் அங்கே ஏடிஸ் கொசு இனப்பெருக்கம் செய்யும் வாய்ப்பு ஏற்படும்.
எனவே, வீடு மற்றும் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் நன்னீர் சேரும் தேங்காய் சிரட்டைகள், ப்ளாஸ்டிக் கப்கள், காலி பாட்டில்கள், டயர்கள் ஆகியன இல்லாதவாறு தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு முழுக்கை சட்டை அணிவிக்க வேண்டும். கொசு வலையில் குழந்தை/பிள்ளைகளை தூங்க வைக்க வேண்டும். கொசுக்கடி ஏற்படாமல் களிம்பு பூசிக்கொள்வது/ஆவியாகும் கொசுக் கொல்லி மருந்துகள் போன்றவற்றை உபயோகிக்கலாம்.
முடிவுரை
இக்காலத்தில் ஏற்படும் காய்ச்சலுக்கு தனிக்கவனம் தேவை குழந்தைகள், முதியோர்கள் மற்றும் இணை நோய்கள் இருப்பவர்களை அதீத கவனத்துடன் அணுக வேண்டும்.
மருத்துவரைச் சந்திக்காமல் சுய மருத்துவம் செய்வதோ/ ஏற்கனவே எழுதிய பரிந்துரை சீட்டை வைத்து மாத்திரை மருந்துகள் வாங்கி உண்பதோ தவறு.
மருத்துவர் எத்தனை நாட்களுக்குப் பிறகு அவரை சந்திக்க கூறுகிறாரோ? அதை சரியாகப் பின்பற்ற வேண்டும். ரத்தப் பரிசோதனை பரிந்துரைக்கப்பட்டால் செய்து கொள்ள வேண்டும்.
பொதுவாக பருவகால சீசனல் வைரஸ் காய்ச்சல் என்பது ஒரு வார காலம் வரை நீடித்து தானாக குறையும். பெரும்பான்மை மக்களுக்கு உயிர் ஆபத்தற்ற பிரச்சனையாக கடந்து செல்லும். ஆனாலும் அதீத காய்ச்சல் / உடல் வலி இருப்பதால் கட்டாயம் சில நாட்கள் ஓய்வு தேவை.
தற்கால வேகமான ஓட்டத்தில் ஓய்வின் முக்கியத்துவத்தை நோய் தான் உணர்த்துகிறது. எனவே நோய் நிலை ஏற்படும் போது ஓய்வு என்பதும் சிகிச்சையிலும் குணமாதலிலும் முக்கியமான பங்காற்றுகிறது.
எந்தக் காய்ச்சலாக இருந்தாலும் உடலின் நீர்ச்சத்து இழப்பு (DEHYDRATION) என்பது பொதுவானது. எனவே காய்ச்சல் நேரங்களில் தினமும் கட்டாயம் உடல் எடைக்கு ஒரு கிலோவுக்கு 30-40 மில்லி நீர் கட்டாயம் பருகி வர வேண்டும்.
எ.கா
உடல் எடை – 80 கிலோ என்றால் கிலோவுக்கு 30- 40 மில்லி நீர் வீதம்
80×40 = 3200 மில்லி நீர் கட்டாயம் பருக வேண்டும். இந்த நீரை ஓ.ஆர்.எஸ் எனும் வாய்வழி நீர்ச்சத்தை அதிகரிக்கும் பொடியைக் கலந்து பருகுவது சிறந்தது.
ஒரு லிட்டர் கொதிக்க வைத்து ஆறவைத்த நீரில் 21 கிராம் ஓ.ஆர்.எஸ் பாக்கெட்டைக் கலந்து பருகி வர வேண்டும்.
உடல் உஷ்ணத்தை தணிப்பதற்கு பாராசிட்டமால் மருந்து பாதுகாப்பானது. எனினும் எடையில் ஒவ்வொரு கிலோவுக்கு 15 மில்லிகிராம் என்ற அளவில் மட்டுமே அதைக் கொடுக்க வேண்டும். ஆறு மணிநேரம் இடைவெளி அவசியம்.
உதாரணம்
10 கிலோ எடை கொண்ட குழந்தைக்கு 10×15 = 150 மில்லிகிராம் ஒருவேளைக்கு என்று ஆறு மணிநேரத்திற்கு ஒருமுறை வழங்கி வர வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் ஜுரம் அதிகமானால் நெற்றி ,நெஞ்சுப்பகுதி, வயிறு, கால், கை உள்ளிட்ட பகுதிகளில் குளிர் நீரை வைத்து ஒற்றி எடுப்பது வெப்பத்தைத் தணிக்கும் .
காய்ச்சல் ஏற்படின் மருத்துவரை சந்திப்பதே சரி. முக்கியமான நேரங்களை சுயமருத்துவம் செய்து கழித்து விட்டு நேரந்தாழ்த்தி மருத்துவரை சந்திப்பது தவறு. ஆபத்தான போக்கு. இது காய்ச்சல் காலம் கவனமும் எச்சரிக்கையும் நமக்கு அவசியம்
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர்
சிவகங்கை