பல்கலைக்கழகங்களில் ஆளுநர்களுக்கு அதிக அதிகாரங்கள் (UCG) வரைவு அறிக்கை – யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடை – 13
அண்மையில் UGC என்றழைக்கப்படும் பல்கலைக்கழக மானியக் குழு, ‘பல்கலைக்கழகங்களில் அதிக அதிகாரங்கள்’ வழங்கி, ஒரு வரைவு அறிக்கையை வெளியிட்டு, கருத்து கேட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கை மாநில உரிமையைப் பறிப்பதாக உள்ளது என்றும், ஒன்றிய அரசு மாநிலப் பல்கலைக்கழகங்களைத் தன்வசம் எடுத்துக்கொள்ளும் அபாயம் உள்ளது என்றும், கல்வியாளர் அல்லாத தனியார் துறை / பொதுத்துறை / அரசுத்துறைகளில் 10 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றியவர்கள்கூட துணைவேந்தரகலாம் என்றும் அந்த வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கலந்துரையாடல் ஒன்றை அங்குசம் சமூக நல அறக்கட்டளையின் யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடையில் 21.01.2025ஆம் நாள் மாலை அங்குசம் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலின் ஒருங்கிணைப்பாளராக பாரதிதாசன் பல்கலைக்கழக கூட்டு ஒருங்கிணைப்புக் குழுவின் மேனாள் தலைவர் பேராசிரியர் தி.நெடுஞ்செழியன் இருந்து கலந்துரையாடலை வழி நடத்தினார். இக் கலந்துரையாடலில், திருச்சி தேசியக் கல்லூரி கணிதவியல் துறைத்தலைவரும், பாரதிதாசன் பல்கலைக்கழக மேனாள் ஆட்சிக் குழு உறுப்பினருமான முனைவர் முத்துராமகிருஷ்ணன், திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் முனைவர் பிரிட்டோ ஸ்டாலின், மக்கள் அதிகாரத்தின் மாநிலப் பொருளாளர் தோழர் கே.காளிப்பன், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் ஜெய்லானி, திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் கி.சதீஷ்குமாரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தி.நெடுஞ்செழியன் கலந்துரையாடலைத் தொடங்கி வைத்து பேசும்போது,“பல்கலைக்கழக மானியக் குழு, பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனங்களில் தேடுதல் குழுவை வேந்தர் பொறுப்பில் உள்ள ஆளுநர்களே அமைக்கலாம். தேடுதல் குழுவில் ஆளுநரின் பிரதிநிதி, பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதி, பல்கலைக்கழகப் பிரதிநிதி என்று மூவர் இருப்பர் என்றும், பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருக்க 10 ஆண்டுகள் பேராசிரியராக இருக்கவேண்டும் என்ற விதியைத் தளர்வு செய்து, அரசு/பொது/தனியார் துறை நிறுவனங்களில் 10 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றுவோரும் துணைவேந்தராகலாம் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது உயர்கல்வியைச் சீர்மைப்படுத்தும் முயற்சியா? சீரழிக்கும் முயற்சியா? என்ற கேள்வி எழுந்துள்ளது” என்று குறிப்பிட்டார்.
முனைவர் முத்துராமகிருஷ்ணன்:
மாநில அரசின் நிதியில் உருவாக்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகங்கள் தற்போதுள்ள நடைமுறைகள் சிறப்பாகவே உள்ளன. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் என்று தனித்தனியாக சட்டவிதிகள், துணைச்சட்ட விதிகள் உள்ளன. அதன் அடிப்படையில் துணைவேந்தர் தேடுதல் குழுவை மாநில அரசுகள் செய்யமுடியும். தேடுதல் குழுவின் மூலம் தெரிவு செய்யப்பட்ட மூவரில் ஒருவரை ஆளுநர் துணைவேந்தராக நியமனம் செய்வார் என்ற நடைமுறையில் என்ன குறைபாடு உள்ளது என்பதைப் பல்கலைக்கழக மானியக் குழு தெரிவிக்காமல், பல்கலைக்கழகச் சட்டவிதிகளை மீறி, ஆளுநர் துணைவேந்தர் தேடுதல் குழுவை நியமிப்பார் என்பதும், அக் குழுவில் அரசின் பிரதிநிதிகள் இருக்கமாட்டார்கள் என்பதும் ஏற்புடையது அல்ல.
தற்போது பல்கலைக்கழக பிரதிநிதிகள் சிண்டிகேட் மற்றும் செனட்-இலிருந்து இருவர் தேர்வு செய்யப்படுகின்றனர். இது ஒன்றாகக் குறைக்கப்பட்டுள்ளது. அப்படியானால் ஆளுநரின் பிரதிநிதியும் யுஜிசி பிரதிநிதியும் யார் துணைவேந்தராகலாம் என்று நினைப்பவர்களை துணைவேந்தராக்க முடியும். இதனால் பல்கலைக்கழகங்களின் இணைவுப் பெற்ற கல்லூரிகளின் பாடத்திடங்கள் மாநிலம் சாராமல் தேசிய அளவில் என்று ஒன்றிய அரசு நினைக்கும் பாடமுறைகள் இடம்பெற வாய்ப்புகள் ஏற்படும். மேலும், கல்விப்புலம் சாராதவர்கள் துணைவேந்தராகலாம் என்ற அறிவிப்பும் பல்கலைக்கழக சட்டவிதிகளுக்கு முற்றிலும் முரணானது. இந்த வரைவு அறிக்கை திரும்பப்பெறவேண்டும்
முனைவர் பிரிட்டோ ஸ்டாலின்
பல்கலைக்கழக மானியக் குழு வரைவு அறிக்கையில் கல்விப்புலம் சாராத அரசு/தனியார்/பொதுத் துறை நிறுவனங்களில் 10 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி நிர்வாகத் திறமை பெற்றவர்கள் துணைவேந்தராகலாம் என்ற அறிவிப்பு உயர்கல்வியைச் சீரழிக்கும் முயற்சியாகும். ஒரு தனியார் கம்பெனியைச் சிறப்பாக நிர்வாகம் செய்யும் ஒருவரால் பல்கலைக்கழகத்தை நிர்வாகம் செய்யமுடியாது. காரணம் பல்கலைக்கழகத் துறைகளில் கலை, அறிவியல் சார்ந்த துறைகள் உள்ளன. மேலும், இணைவு பெற்ற கல்லூரிகள் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தின் கீழ்தான் செயல்படுகின்றன. தொழில் நிறுவனத்தை இலாப நோக்கில் நிர்வகிப்பதுபோல் பல்கலைக்கழகங்களை நிர்வகிப்பது என்பது உயர்கல்வியைச் சீரழிக்கவே செய்யும்.
பல்கலைக்கழகங்கள்/கல்லூரிகளில் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் இளநிலையில் எந்தப் பாடமும் படிக்கலாம். முதுநிலையில் இளநிலைக்குத் தொடர்பில்லாத துறையில் பட்டம் பெறலாம். முதுநிலைக்குத் தொடர்பில்லாத வேறு துறையில் முனைவர் பட்ட ஆய்வு செய்யலாம். முனைவர் பட்ட ஆய்வுக்குத் தொடர்பில்லாத துறையில் தேசியத் தகுதித் தேர்வில் (NET) தேர்வு பெற்று ஆசிரியர் ஆகலாம் என்ற அறிவிப்பு உயர்கல்வியில் குறிப்பாக கல்லூரிகளில் மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்கு எந்த வகையில் உதவியாக இருக்காது. ஆபத்தாகவே இருக்கும்.
தோழர் ஜெய்லானி
கல்விப் புலம் சாராதவர்கள் துணைவேந்தராகலாம் என்று வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளுக்குப் பதிலாக ஆளுநர் தேடுதல் குழுவை அமைப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்காத மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு நிதியுதவி வழங்கப்படாது என்றும், அப் பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு வழங்கப்படும் பட்டங்கள் செல்லாது என்றும் அறிவித்துள்ளது. மாநில நிதியில் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றிய அரசு ஆளுநர்கள் மூலமாக அனைத்துப் பல்கலைக்கழங்களையும் தன்கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் அபாயகரமான இந்த முயற்சியைத் தடுத்து நிறுத்த, நான் சார்ந்திருக்கும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மாணவர்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுப்போம்.
கல்லூரி மாணவர்கள் பட்டப்படிப்பு படிக்கும்போது முதலாண்டு படித்துவிட்டால் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம். 2ஆம் ஆண்டு முடித்தால் டிப்ளமோ பெற்றுக்கொள்ளலம். 3ஆம் ஆண்டு முடித்தால் பட்டம் பெற்றுக்கொள்ளலாம். 4ஆம் ஆண்டு முடித்தால் ஹனர்ஸ் பட்டம் பெற்றுக்கொண்டு, ஆராய்ச்சி படிப்பு படிக்கலாம் என்று வரைவு அறிக்கையில், தேசிய கல்விக்கொள்கையை மறைமுகத் திணிக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்த வரைவு அறிக்கையின் கருத்துகளை ஏற்கமுடியாது. மாணவர்களைத் திரட்டி, விழிப்புணர்வை ஏற்படுத்தி, இந்த வரைவு அறிக்கையைத் திரும்பப்பெற செய்வோம்.
தோழர் கே.காளியப்பன்
பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து அரசியல் சட்டத்தைக் கேடான முறையில் நடத்தி வருகின்றது. பாஜக அரசு தன் கொள்கைகள் அனைத்தையும் சட்டவடிவில் திணிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. முதலில் இப்படியொரு வரைவு அறிக்கை தர பல்கலைக்கழக நிதிக் குழுவிற்கு அதிகாரம் உள்ளதா? என்பதைப் பார்க்கவேண்டும். 1956இல் உருவாக்கப்பட்ட யுஜிசி என்பது ஒரு நிதி வழங்கும் அமைப்புதான். இந்த அமைப்பு இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காக ஆலோசனை வழங்கக்கூடிய அமைப்புதான். இதற்குச் சட்டம் இயற்றும் அதிகாரங்கள் கிடையாது.
பல்கலைக்கழகங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட அமைப்பு அல்ல. இந்தியாவில் உள்ள ஒன்றிய அரசின் பல்கலைக்கழங்கள் மற்றும் மாநில அரசின் பல்கலைக்கழகங்கள் ஒவ்வொன்றும் தனித்தனிச் சட்டவிதிகளைக் கொண்டது. அந்த விதிகளின்படிதான் பல்கலைக்கழகங்கள் செயல்பட முடியும். குஜராத் மாநிலத்தில் மோடி முதல்வராக இருந்தபோது, துணைவேந்தர்களை மாநில முதல்வர் பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பிலிருந்து நியமனம் செய்வார் என்று அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களில் ஆளுநர்களுக்கு அதிக அதிகாரங்கள் (UCG) வரைவு அறிக்கை – யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடை – 13 வீடியோவை காண
திண்டுக்கலில் உள்ள காந்தி கிராமியப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பொறுப்பில் இந்திய துணை குடியரசு தலைவர் உள்ளார். பள்ளிக் கல்வித்துறைப்போல உயர்கல்வி என்பது ஒரு பொதுச்சட்டத்தின் கீழ் செயல்படுவது அல்ல. இந்தியா முழுமையுள்ள பல்கலைக்கழகங்களுக்குப் பொதுவான ஒரேமாதிரியான வழிகாட்டு நெறிமுறைகளை யுஜிசி உருவாக்கி இருப்பது சட்டவிரோதமான செயல். அரசியல் சாசனத்தை மீறுகிற ஒரு மோசமான செயல். இந்த வரைவு அறிக்கை திரும்பப்பெறப்பட வேண்டும். அதற்கு மக்களைத் திரட்டுகின்ற முயற்சியில் நாம் அனைவரும் இணைந்து செயல்படவேண்டும்.
பேராசிரியர் கி.சதீஷ்குமாரன்
யுஜிசியின் வரைவு அறிக்கை மாநில உரிமைகளைப் பறிப்பதாகவே உள்ளது. சமூகநீதிக்கு எதிராகவே உள்ளது. கல்வி என்பது ஒன்றிய அரசின் பட்டியலில் இல்லை. ஒத்திசைவு என்னும் கன்கரன்ஸ் பட்டியலில் உள்ளது. இந்த நிலையில் மாநில அரசுகளிடம் கலந்து பேசி ஒரு கருத்தை உருவாக்காமல், யுஜிசியே கருத்தை உருவாக்கி வரைவு அறிக்கை வெளியிட்டு, பொதுமக்கள் கருத்து சொல்லாம் என்று அறிவித்திருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. தற்போது தேசியக் கல்விக் கொள்கையின்படி பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கு கியூட் என்னும் நுழைவுத் தேர்வைக் கொண்டுவருகிறார்கள்.
இந்த நுழைவுத் தேர்வு அடுத்த ஆண்டு முதல் கல்லூரிகளுக்கும் செயல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த நுழைவுத் தேர்வுக்கு என்று மாணவர்கள் தனியாகப் படிக்கவேண்டும். அதற்காக தனியார் நிறுவனங்களைத் தேடி செல்லவேண்டும். அவர்கள் பயிற்சி அளிப்பதற்கு ஆயிரக்கணக்கில் தொகை பெறுவார்கள். நீட் நுழைவுத் தேர்வு பயிற்சியின் மூலம் பல தனியார் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் இலாபம் சம்பாதித்து வருகிறார்கள்.
அதைப்போலவே கல்லூரிகளில் உள்ள பட்டப்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு வந்தால் தனியார் நிறுவனங்கள் எவ்வளவு கோடி சம்பாதிப்பார்கள் என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். நான் சார்ந்துள்ள நுண்கலை கல்லூரி சார்ந்த படிப்புகளுக்கு நெட் தேர்வு இல்லை. ஒரு சில படிப்புகளுக்கு மட்டுமே நெட் தேர்வு உள்ளது. இதனால் மாணவர்கள் வேலைக்குச் செல்லும் வாய்ப்பு அறவே தடுக்கப்படுகின்றது. எங்கள் கல்லூரி இணைவு பெற்றுள்ள நுண்கலை பல்கலைக்கழகத்தின் வேந்தராக தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் வேந்தராக உள்ளது. அந்தப் பல்கலைக்கழகம் சிறப்பாகத்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது. பல்கலைக்கழக செயல்பாடுகளில் குறை இருப்பின் அவற்றை நீக்கி மேம்படுத்தலாம். அதைவிடுத்து, பல்கலைக்கழகங்களின் அனைத்து அதிகாரங்களையும் ஆளுநர்களுக்கு வழங்குவது என்பது மாநில உரிமையைப் பறிக்கும் முயற்சியாகும் என்பதோடு கல்வியை ஒன்றிய அரசு காவிமயமாக்கும் முயற்சியாகும் என்பதே உண்மை.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்தக் கலந்துரையாடல் நிறைவு பெறுகின்ற வேளையில், கேரள சட்டமன்றத்தில் யுஜியின் வரைவு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் கர்நாடகமும் வரைவு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது என்றும், பீகாரில் ஆளும் கட்சியாக உள்ள நிதிஷ்குமாரின் ஜனதாதள் கட்சியும் வரைவு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது என்ற செய்தியும் கலந்துரையாடலில் அறிவிக்கப்பட்டது. ஒன்றிய அரசு மாநில உரிமைகளைப் பறித்து உயர்கல்வியைக் காவியமயமாக்கும் முயற்சியை மக்களின் போராட்டங்கள் மூலம்தான் தடுத்து நிறுத்தமுடியும். அதற்குக் கல்வியாளர்களும், மக்கள் நல அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்ற கருத்தை இக் கலந்துரையாடல் வழிமொழிந்துள்ளது என்பது காலத்தின் தேவையாகவே உள்ளது.
– ஆதவன்.