அங்குசம் பார்வையில் ‘ராமாயணா –தி லெஜெண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’
தயாரிப்பு : கீக் பிக்சர்ஸ் [ பி] லிமிடெட்’ அர்ஜுன் அகர்வால், சிபிகார்த்திக், தமோட்சு கோசானோ. இணைத் தயாரிப்பு : மோகித் குரேட்டி. கிரியேட்டிவ் டைரக்டர் : வி.விஜயேந்திர பிரசாத். பிண்ணனிக் குரல்கள் : செந்தில்குமார் [ராமர் ], டி.மகேஸ்வரி [ சீதை ], தியாகராஜன் [ லட்சுமணன் ], பிரவீன்குமார் [ ராவணன் ], லோகேஷ் [ அனுமான் ] , சீனியர் புரொடியூசர் : ஜானி எமமோட்டோ, நிர்வாகத் தயாரிப்பு : மோக்ஷா மோட்கில். பி.ஆர்.ஓ.: யுவராஜ்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு அயோத்தி என்ற தேசத்தில் நடந்ததாக எழுதப்பட்டு, நம்ப வைக்கப்பட்ட கற்பனைக் கதை ராமாயணம். சினிமா கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்து இப்போதைய டிஜிட்டல் சினிமா வரை, புழங்கிக் கொண்டிருக்கும் கதை ராமாயணம். தமிழ் சினிமாவில் முழு ராமாயணமும் வெளிவந்ததாக நமக்கு நினைவில் இல்லை. சில சினிமாக்களில் ஒரு பகுதியாக ராமர்—சீதை கதை வரும் அவ்வளவே.

ஆனால் இந்தியிலும் தெலுங்கிலும் நான்கைந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்த மொழிகளின் முன்னணி நடிகர்-நடிகைகளை வைத்து முழு ராமாயணமும் வந்து கொண்டிருக்கின்றன. அதிலும் நரேந்திர மோடி பிரதமரான பின்பு, அடிக்கடி ராமாயணக் கதைகள் தெலுங்கு சினிமா உலகில் ரிலீஸ் ஆகிக் கொண்டிருக்கின்றன.
[ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரிலீசான ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் கூட ராம்சரணுக்கு ராமர் வேசம் போட்டிருப்பார் டைரக்டர் ராஜமெளலி. அந்த ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தான் இப்போது ரிலீசாகியுள்ள கார்ட்டூன் ராமாயணாவின் கிரியேட்டிவ் டைரக்டர் என்பது குறிப்பிடத்தக்கது ]
இந்தியில் கூட இப்போது மெகா பட்ஜெட்டில் ரன்பீர்கபூர், சாய்பல்லவி, சூர்யா உட்பட நான்கு மொழி ஹீரோக்களை வைத்து ராமாயணம் சினிமா வேலை நடப்பதாகச் சொல்கிறார்கள்.
இப்போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது இந்த ‘ராமாயணம்’ இந்த நேரத்தில் ஏன் ரிலீஸாகிறது என்பதைத் தான். ஏன்னா.. உத்தரபிரதேசத்தில் நடந்த கும்பமேளாவில் 10 கோடி பேர் புனித நீராடியதாக சொல்லப்படும் இந்த நேரத்தில், அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்திருக்கும் இந்த நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, போஜ்புரி மொழிகளில் கார்ட்டூன் சினிமாவாக 2டி யில் இப்போது ரிலீஸ் பண்ணியிருக்கிறார்கள் இந்த ‘ராமாயணா—தி லெஜெண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’ படத்தை.
இரண்டேகால் மணி நேரம் ஓடும் இப்படத்தில் அயோத்தியில் ராமன் பிறந்தது முதல், இலங்கையில் ராவணனிடம் சிறைப்பட்ட தனது மனைவி சீதையை மீட்டு வருவது வரை கார்ட்டூன் கதை சொல்லியிருக்கிறார்கள். பின்னணிக் குரல் கலைஞர்கள் பாராட்டுக்குரியவர்கள். இலங்கையிலிருந்து சீதையுடன் திரும்பிய பின்பு ராமன் சொர்க்கத்திற்குப் போனதாகவும் சீதை பூமித்தாயிடம் சென்றுவிட்டதாகவும் க்ளைமாக்ஸ் வைத்திருக்கிறார்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தென் தமிழகத்தின் தொழில்வளர்ச்சிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரிதும் பலமாக இருந்து தமிழர்களின் வாழ்வில் மகிழ்ச்சி திளைக்கும் என்ற நம்பிக்கையில் பேரறிஞர் அண்ணா முன்னெடுத்த திட்டம் தான் சேது கால்வாய் திட்டம். பல்வேறு தடைகளுக்குப் பின் அந்தத் திட்டத்தை பிரதமர் மன்கோன்சிங்கை வைத்து ஆரம்பித்தார் முதல்வராக இருந்த தலைவர் கலைஞர். ஆனால் அந்தக் கால்வாய் பாதையில் ‘ராமர் பாலம்’ இருப்பதாகவும் அதை அகற்றினால் நாட்டுக்கே பேராபத்து என்றும் மூடநம்பிக்கை கட்டுக்கதைகளைக் கட்டவிழ்த்துவிட்டு, திட்டத்தையே பாழ்படுத்திவிட்டார்கள், மதவாத மாபாவிகள். இந்த மாபாவிகளின் அயோக்கியத்தனத்தை உச்சநீதிமன்றம் கூட கண்டு கொள்ளாதது தான் மகா வேதனை.
இந்த கார்ட்டூன் படத்தில் கூட ராமர் பாலம் கட்டுவது போல நீண்ட காட்சிகளை வைத்திருக்கிறார்கள். இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது, தெரிந்து கொள்ள வேண்டியது என்னன்னா.. அவர்கள் அப்படித்தான்..
— மதுரை மாறன்.