இந்த ‘ட்ராமா’ (‘Trauma’) ஒரு ஆந்தாலஜி சினிமா!
டர்ம் புரொடக்ஸன்ஸ் பேனரில் எஸ். உமா மகேஸ்வரி தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ட்ராமா’ வரும் 21- ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதையொட்டி படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு சென்னை சர் .பிட்டி தியாகராயர் அரங்கத்தில் மார்ச் 12-ஆம் தேதி மாலை நடந்தது. இயக்குநர் கே. பாக்யராஜ் படத்தின் இசையை வெளியிட, படக்குழுவினருடன் நடிகர் ‘டத்தோ’ ராதா ரவி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி ஆகியோர் இணைந்து பெற்றுக்கொண்டனர்.
அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விவேக் பிரசன்னா, பூர்ணிமா ரவி, ஆனந்த் நாக், சாந்தினி தமிழரசன், நிழல்கள் ரவி, மாரிமுத்து, பிரதோஷ், வையாபுரி, ரமா, நமோ நாராயணன், பிரதீப் கே. விஜயன், ‘ஸ்மைல்’ செல்வா, மதனகோபால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அஜித் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு,ராஜ் பிரதாப் இசை, படத்தொகுப்பு : முகன்வேல், கலை இயக்கம் : முஜிபுர் ரகுமான் . மெடிக்கல் க்ரைம் திரில்லராக உருவாகி இருக்கும் இப்படத்தை ஆல்பா 3 என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் ரிலீஸ் செய்கிறது.
விழாவில் பேசிய சிலர்…
இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன்
”வாய்ப்புகள் தேடி பல தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லி இருக்கிறேன். வாய்ப்பு கிடைக்காததால் என்னுடைய நண்பர்களின் ஆதரவுடன் இப்படத்தின் பணியை தொடங்கினேன். அவர்கள் தங்களது பெயரை வெளிப்படுத்த கூடாது என்று கட்டளையிட்டதால்.. தயாரிப்பாளராக என்னுடைய மனைவியின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. அவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தை பைலட் மூவியாகத் தான் முதலில் தொடங்கினோம். அது சிறப்பாக வந்தவுடன் திரைப்படமாக உருவாகி இருக்கிறது”.
இசையப்பாளர் ராஜ் பிரதாப்
“இயக்குநர் தம்பிதுரை மாரியப்பனுடன் இணைந்து பணியாற்றியதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு அவரிடம் பிடித்தது அவருடைய தன்னம்பிக்கை தான். குறும்படங்கள் இயக்கும் காலகட்டத்தில் இருந்தே அவரை எனக்குத் தெரியும். குறும்படத்தை கூட தரமாக உருவாக்க வேண்டும் என விரும்புவார். தரமான படைப்புகளைத் தான் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருந்தது. இது என்னை மிகவும் கவர்ந்தது.
இந்தப் படத்தில் நான்கு பாடல்கள் இருக்கின்றன. இரண்டு பாடல்கள் படத்தில் இடம்பெறும். ஏனைய இரண்டு படத்திற்கான ப்ரோமோ பாடல்கள். இந்த பாடலுக்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி.
இந்த ‘ட்ராமா’ படம் ஒரு ஆந்தாலஜி மூவி. மூன்று கதை, மூன்று களங்கள். இவை அனைத்தும் இன்டர் லிங்க் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். ரசிகர்களுக்கு இந்த படம் வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும்”.
நடிகை சாந்தினி தமிழரசன்,
”இந்த நிகழ்வு எனக்கு மிகவும் ஸ்பெஷல். ஏனெனில் என்னை திரையுலகில் அறிமுகம் செய்த குரு கே. பாக்யராஜ் இங்கு வருகை தந்திருக்கிறார். நான் இத்தனை ஆண்டு காலம் சினிமாவில் இருக்கிறேன் என்றால் அதற்கு அவர் தான் காரணம். அதற்காக இந்த தருணத்தில்அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தம்பிதுரை மாரியப்பன் திறமையான இயக்குநர். எப்போதும் சிரித்த முகமாகவே இருப்பார். பாசிட்டிவாகத்தான் பேசிக் கொண்டிருப்பார். அவர் செய்து வரும் வேலையையும் விடாமல் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் இன்ட்ரஸ்டிங்கான கான்செப்ட் என்பதால் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.
சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் தரமானதாக இருக்கும்”.
நடிகர் விவேக் பிரசன்னா
“தம்பிதுரை போன்ற திறமையான இயக்குநர்கள் தொடர்ந்து படங்களை இயக்க வேண்டும். அவர் இன்னும் உயரங்களை தொட வேண்டும். அதற்கு இந்த ட்ராமா படத்தின் வெற்றி அவசியம் . இதற்கு ரசிகர்களின் ஆதரவு தேவை”.
விநியோகஸ்தர் இளமாறன்
”பதினாறு ஆண்டுகளாக திரைத்துறையில் பணியாற்றி வருகிறேன். இதில் கிடைத்த அனுபவத்தை கொண்டு ஆல்பா 3 என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனத்தை தொடங்கி முதல் முதலாக ‘ட்ராமா’ படத்தை வெளியிடுகிறேன். முதல் படம் நல்ல படமாக இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த தருணத்தில் ‘ட்ராமா’ படத்தை பார்த்தேன். இப்படத்தின் பாடல்கள் தான் என்னை முதலில் கவர்ந்தன. பாடல்களைப் போல் படத்தின் கதையும் நன்றாக இருக்கிறது. மக்கள் மத்தியில் இப்படத்திற்கு ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்”.
முன்னாள் எம்எல்ஏ விஜயதாரணி
“நாம் தினமும் சந்திக்கும் ஒரு விஷயத்தை தான் இந்தப் படம் பேசுகிறது. நான் இன்னும் இந்த படத்தை பார்க்கவில்லை. நிச்சயமாக நன்றாக இருக்கும் என நம்புகிறேன்”.
நடிகர் ராதாரவி
‘இந்தப்படத்தில் நடிக்க முடியவில்லையே என்ற வருத்தம் உள்ளுக்குள் இருக்கிறது. இப்படத்தின் மூலம் டிஸ்ட்ரிபியூட்டர் கூட அறிமுகமாகி இருக்கிறார். அவருக்கும் இனி சிறந்த எதிர்காலம் உண்டு.
தற்போது சினிமா எடுப்பதும் எளிது, சினிமாவில் நடிப்பதும் எளிது, வெளியிடுவது தான் கஷ்டம். பொதுவாக படத்தை வெளியிடுவது தான் எளிதாக இருக்க வேண்டும். ஆனால் தற்போது அதுதான் கடினமானதாக இருக்கிறது. தற்போது படத்தை வெளியிடுவதற்கும் அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது. இந்தப்படத்தை வெற்றி பெறச் செய்யுங்கள்”.
இயக்குநர் கே. பாக்யராஜ்
“இந்தப் படத்தில் நிறைய புதுமுக நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றியிருக்கிறார்கள் என தெரிகிறது. அவர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். இந்தப்படத்தில் மூன்று கதைக் களங்கள், கதைகள். மற்றவர்களைப் போல் வழக்கமாக இல்லாமல் வித்தியாசமான சப்ஜெக்ட்டை தேர்வு செய்திருக்கிறார் தம்பிதுரை. இதற்காகவே அவரை பாராட்டலாம்”.
— மதுரை மாறன்.