பக்கவாத காரணிகளில் ஒன்றான இதய நோய்
பக்கவாத நோயை ஏற்படுத்தும் காரணிகளில் மிகவும் முக்கியமானதான இதயநோய் பற்றி இந்த வாரம் பார்ப்போம்.
20 முதல் 30 சதவிகிதம் வரை பக்கவாத நோய் இதய நோய்களினால் வருகிறது. அவற்றுள் பொதுவான இதய நோய்களை கீழே குறிப்பிட்டுள்ளேன்.
1. மாரடைப்பு நோய் (Heart Attack)
2. இதயத்தின் துடிப்பில் ஏற்படும் மாறுபாடு (Arrhythmias)
3. செயற்கை இதய வால்வு (Mechanical Valves)
4. இதய தடுப்பு சுவர்களில் ஏற்படும் பிறவிக் கோளாறு (Congenital Heart Disease)
5. இதய வால்வுகளில் ஏற்படும் பிறவிக் கோளாறு
6. இதயத்தில் உள்ள வால்வுகளின் செயல் திறன் மாறுபாடு (Valvular Heart Disease) etc.,
இப்படி பல்வேறு வியாதிகளால் இதயம் பாதிக்கப்படும் போது இதயத்தினால் சீரான இரத்த ஓட்டத்தை மூளைக்குச் செலுத்த முடிவதில்லை.
Dr. அ.வேணி MD., DM (NEURO)
மூளை நரம்பியல் நிபுணர்.
உதாரணத்திற்கு, மாரடைப்பு நோய் பற்றி பார்ப்போம். எப்படி மூளைக்குச் செல்லும் இரத்தம் தடைபடுவதால் வருவதை பக்கவாத நோய் என்கிறோமோ, அதேபோல் இதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைபடுவதால் வருவதை தான் மாரடைப்பு என்கிறோம். மாரடைப்பு வியாதியினால் இதயத்தில் ஒரு சில பகுதிகள் சுருங்கி விரியும் தன்மையை இழந்து விடுவதால் போதுமான அளவு இரத்தத்தை இதயத்தில் இருந்து இரத்த குழாய்க்குள் செலுத்த முடிவதில்லை. அந்த செயல் படாத பகுதிகளில் இரத்தமானது தேங்க ஆரம்பித்து உறைய தொடங்குகிறது.
இந்த உறைந்த இரத்தத்தில் இருந்து ஒரு சிறிய பகுதி பிரிந்து மூளைக்குச் சென்று இரத்த குழாயை அடைத்து பக்கவாத நோயை ஏற்படுத்துகிறது. இது போலவே மேலே குறிப்பிட்டுள்ள மற்ற இதய நோய்களும் மூளையில் உள்ள பல்வேறு இரத்தக் குழாய்களை அடைத்து பக்கவாத நோயை உண்டாக்குகின்றன.
நமது மூளையில் உள்ள இரத்தக் குழாய்களில், பதினைந்து முக்கியமான பெரிய இரத்தக் குழாய்கள் உள்ளன. இதில் இருந்து பல கிளைகள் பிரிந்து மூளை மற்றும் கண்களுக்கு இரத்த ஓட்டம் செல்கிறது. இதயத்தில் இருந்து வரும் உறைந்த இரத்தமானது (Clot) பெரிய இரத்தக் குழாய்களை அடைக்கும் தன்மை உடையது. எனவேதான், இதய பாதிப்பால் வரும் பக்கவாத நோய் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி விட்டுச் செல்கிறது.
மனிதர்களாகிய நாம் நன்முறையில் உயிர் வாழ மிகவும் முக்கியமான உறுப்புகளான இதயத்திலும் மற்றும் மூளையிலும் பாதிப்பு ஒரே நேரத்தில் ஏற்படுவதால் அந்நோயாளியானவர் உயிர் இழக்கவும் இந்நோய் காரணமாகிறது.
இதய நோயாளிகள் அதற்குரிய மாத்திரைகளை சரியாக உட்கொள்ளாததாலும், அதற்கேற்ற வாழ்வியல் முறைகளை மாற்றிக் கொள்ளாததாலும் பக்கவாத நோய் பாதிப்புக்கு உள்ளாகி, தன் இயல்பு வாழ்க்கையை பறிகொடுப்பதை பார்க்கும் போது என் மனமானது வேதனையுறுகிறது.
பெரும்பாலானவர்கள் ‘நான் என் உறவினரின் விஷேசத்திற்குச் சென்றதால் மாத்திரைகளை எடுத்துச் செல்ல மறந்து விட்டேன்; மாத்திரை முடிந்து விட்டது அதனால் ஒரு வாரம் போடவில்லை’ என்று பல்வேறு பதிலைக் கூறுவார்கள். இப்படி மாத்திரை உட்கொள்ளாததால் இரத்தத்தில் உறைவு தன்மை அதிகமாகி பக்கவாத நோய் வந்து விடுகிறது.
எனவே, இதய நோயாளிகள் மருத்துவர்களின் ஆலோசனைப் படி மருந்துகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும். பக்கவாத நோய் வருவதற்கான சாத்தியக் கூறுகளை மூளை நரம்பியல் நிபுணரிடம் ஆலோசித்து அதன் படி மருந்துகள் உட்கொள்வதால் பக்கவாத நோய் வராமல் தடுத்துக் தன்னைக் காத்துக் கொள்ளலாம்.
வருமுன் காப்பதே சாலச் சிறந்தது என்பதை அனைவரும் சிந்தையில் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படும் பக்கவாத நோய் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.
(விழிப்போம்)…